22. சிவன்செயல்
சிவன்செய லாலே யாதும் வருமெனத் தெறேன் நாளும்
அவந்தரு நினைவை யெல்லாம் அகற்றிலேன் ஆசை வெள்ளங்
கவர்ந்துகொண் டிழுப்ப அந்தக் கட்டிலே அகப்பட் டையோ
பவந்தனை ஈட்டி ஈட்டிப் பதைக்கின்றேன் பாவி யேனே. 1.
பாவியேன் இனியென் செய்கேன் பரமனே பணிந்துன் பாதஞ்
சேவியேன் விழிநீர் மல்கச் சிவசிவ என்று தேம்பி
ஆவியே நிறைய வந்த அமுதமே என்னேன் அந்தோ
சாவிபோஞ் சமயத் தாழ்ந்து சகத்திடைத் தவிக்கின் றேனே. 2.
இடைந்திடைந் தேங்கி மெய்புள கிப்ப
எழுந்தெழுந் தையநின் சரணம்
அடைந்தனன் இனிநீ கைவிடேல் உனக்கே
அபயமென் றஞ்சலி செய்துள்
உடைந்துடைந் தெழுது சித்திரப் பாவை
யொத்துநான் அசைவற நிற்பத்
தொடர்ந்துநீ எனைஆட் கொள்ளுநா ளென்றோ
சோதியே ஆதிநா யகனே. 3.
ஆதியாய் நடுவாய் அந்தமாய்ப் பந்தம்
யாவுமற் றகம்புறம் நிறைந்த
சோதியாய்ச் சுகமா யிருந்தஎம் பெருமான்
தொண்டனேன் சுகத்திலே இருக்கப்
போதியா வண்ணங் கைவிடல் முறையோ
புன்மையேன் என்செய்கேன் மனமோ
வாதியா நின்ற தன்றியும் புலன்சேர்
வாயிலோ தீயினுங் கொடிதே. 4.
வாயிலோ ரைந்திற் புலனெனும் வேடர்
வந்தெனை யீர்த்துவெங் காமத்
தீயிலே வெதுப்பி உயிரொடுந் தின்னச்
சிந்தைநைந் துருகிமெய்ம் மறந்து
தாயிலாச் சேய்போல் அலைந்தலைப் பட்டேன்
தாயினுங் கருணையா மன்றுள்
நாயக மாகி யொளிவிடு மணியே
நாதனே ஞானவா ரிதியே. 5.
ஞானமே வடிவாய்த் தேடுவார் தேடும்
நாட்டமே நாட்டத்துள் நிறைந்த
வானமே எனக்கு வந்துவந் தோங்கும்
மார்க்கமே மருளர்தாம் அறியா
மோனமே முதலே முத்திநல் வித்தே
முடிவிலா இன்பமே செய்யுந்
தானமே தவமே நின்னைநான் நினைந்தேன்
தமியனேன் தனைமறப் பதற்கே. 6.
மறமலி யுலக வாழ்க்கையே வேண்டும்
வந்துநின் அன்பர்தம் பணியாம்
அறமது கிடைக்கின் அன்றியா னந்த
அற்புத நிட்டையின் நிமித்தந்
துறவது வேண்டும் மௌனியாய் எனக்குத்
தூயநல் லருள்தரின் இன்னம்
பிறவியும் வேண்டும் யானென திறக்கப்
பெற்றவர் பெற்றிடும் பேறே. 7.
பெற்றவர் பெற்ற பெருந்தவக் குன்றே
பெருகிய கருணைவா ரிதியே
நற்றவத் துணையே ஆனந்தக் கடலே
ஞாதுரு ஞானஞே யங்கள்
அற்றவர்க் கறாத நட்புடைக் கலப்பே
அநேகமாய் நின்னடிக் கன்பு
கற்றதுங் கேள்வி கேட்டதும் நின்னைக்
கண்டிடும் பொருட்டன்றோ காணே. 8.
அன்றுநால் வருக்கும் ஒளிநெறி காட்டும்
அன்புடைச் சோதியே செம்பொன்
மன்றுள்முக் கண்ணுங் காளகண் டமுமாய்
வயங்கிய வானமே என்னுள்
துன்றுகூ ரிருளைத் துரந்திடும் மதியே
துன்பமும் இன்பமு மாகி
நின்றவா தனையைக் கடந்தவர் நினைவே
நேசமே நின்பரம் யானே. 9.
யானெனல் காணேன் பூரண நிறைவில்
யாதினும் இருந்தபே ரொளிநீ
தானென நிற்குஞ் சமத்துற என்னைத்
தன்னவ னாக்கவுந் தகுங்காண்
வானென வயங்கி யொன்றிரண் டென்னா
மார்க்கமா நெறிதந்து மாறாத்
தேனென ருசித்துள் அன்பரைக் கலந்த
செல்வமே சிற்பர சிவமே. 10.