Thayumanavar Songs – தேன்முகம்

15. தேன்முகம்

தேன்முகம் பிலிற்றும் பைந்தாட் செய்யபங் கயத்தின் மேவும்
நான்முகத் தேவே நின்னால் நாட்டிய அகில மாயை
கான்முயற் கொம்பே என்கோ கானலம் புனலே என்கோ
வான்முக முளரி என்கோ மற்றென்கோ விளம்பல் வேண்டும். 1.

வேண்டுவ படைத்தாய் நுந்தை விதிப்படி புரந்தான் அத்தைக்
காண்டக அழித்தான் முக்கட் கடவுள்தான் இனைய வாற்றால்
ஆண்டவ னெவனோ என்ன அறிகிலா தகில நீயே
ஈண்டிய அல்லல் தீர எம்மனோர்க் கியம்பு கண்டாய். 2.

கண்டன அல்ல என்றே கழித்திடும் இறுதிக் கண்ணே
கொண்டது பரமா னந்தக் கோதிலா முத்தி அத்தால்
பண்டையிற் படைப்புங் காப்பும் பறந்தன மாயை யோடே
வெண்டலை விழிகை காலில் விளங்கிட நின்றான் யாவன். 3.

விளங்கவெண் ணீறுபூசி விரிசடைக் கங்கை தாங்கித்
துளங்குநன் னுதற்கண் தோன்றச் சுழல்வளி நெடுமூச் சாகக்
களங்கமி லுருவந் தானே ககனமாய்ப் பொலியப் பூமி
வளர்ந்ததா ளென்ன உள்ள மன்றென மறையொன் றின்றி. 4.

மறைமுழக் கொலிப்பத் தானே வரதமோ டபயக் கைகள்
முறைமையின் ஓங்க நாதம் முரசெனக் கறங்க எங்கும்
குறைவிலா வணநி றைந்து கோதிலா நடனஞ் செய்வான்
இறையவன் எனலாம் யார்க்கும் இதயசம் மதமீ தல்லால். 5.

அல்லலாந் தொழில்ப டைத்தே அடிக்கடி உருவெ டுத்தே
மல்லல்மா ஞாலங் காக்க வருபவர் கடவு ளென்னில்
தொல்லையாம் பிறவி வேலை தொலைந்திட திருள்நீங் காது
நல்லது மாயை தானும் நானென வந்து நிற்கும். 6.

நானென நிற்கு ஞானம் ஞானமன் றந்த ஞானம்
மோனமா யிருக்க வொட்டா மோனமின் றாக வேதான்
தேனென ருசிக்கும் அன்பாற் சிந்தைநைந் துருகும் வண்ணம்
வானென நிறைந்தா னந்த மாகடல் வளைவ தின்றே. 7.

இன்றென இருப்பே மென்னின் என்றுஞ்சூ னியமா முத்தி
நன்றொடு தீது மன்றி நாமுன்னே பெறும்அ வித்தை
நின்றது பெத்தந் தானே நிரந்தர முத்தி யென்னின்
ஒன்றொரு வரைநான் கேட்க உணர்வில்லை குருவுமில்லை. 8.

இல்லையென் றிடினிப்பூமி இருந்தவா றிருப்போ மென்னில்
நல்லவன் சாரு வாகன் நான்சொலும் நெறிக்கு வீணில்
தொல்லையேன் ஆகமாதி தொடுப்பதேன் மயக்க மேதிங்
கொல்லைவந் திருமி னென்ன வுறவுசெய் திடுவ னந்தோ. 9.

அந்தணர் நால்வர் காண அருட்குரு வாகி வந்த
எந்தையே எல்லாந் தானென் றியம்பினன் எமைப்ப டைத்த
தந்தைநீ எம்மைக் காக்குந் தலைவனே நுந்தை யன்றோ
பந்தமில் சித்தி முத்தி படைக்கநின் அருள்பா லிப்பாய். 10.