18. பொன்னை மாதரை
பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன்
என்னை நாடிய என்னுயிர் நாதனே
உன்னை நாடுவன் உன்னருள் தூவெளி
தன்னை நாடுவன் தன்னந் தனியனே. 1.
தன்ன தென்றுரை சாற்று வனவெலாம்
நின்ன தென்றனை நின்னிடத் தேதந்தேன்
இன்னம் என்னை யிடருறக் கூட்டினால்
பின்னை யுய்கிலன் பேதையன் ஆவியே. 2.
ஆவி யேயுனை யானறி வாய்நின்று
சேவி யேன்களச் சிந்தை திறைகொடேன்
பாவி யேனுளப் பான்மையைக் கண்டுநீ
கூவி யாளெனை யாட்கொண்ட கோலமே. 3.
கோல மின்றிக் குணமின்றி நின்னருள்
சீல மின்றிச் சிறியன் பிழைப்பனோ
ஆல முண்டும் அமிர்துரு வாய்வந்த
கால மெந்தை கதிநிலை காண்பதே. 4.
காணுங் கண்ணிற் கலந்தகண் ணேயுனைச்
சேணும் பாருந் திரிபவர் காண்பரோ
ஆணும் பெண்ணும் அதுவெனும் பான்மையும்
பூணுங் கோலம் பொருந்தியுள் நிற்கவே. 5.
நிற்கும் நன்னிலை நிற்கப்பெற் றார்அருள்
வர்க்க மன்றி மனிதரன் றேஐயா
துர்க்கு ணக்கடற் சோங்கன்ன பாவியேற்
கெற்கு ணங்கண் டென்பெயர் சொல்வதே. 6.
சொல்லை யுன்னித் துடித்த தலால் அருள்
எல்லை யுன்னி எனையங்கு வைத்திலேன்
வல்லை நீ என்னை வாவென் றிடாவிடின்
கல்லை யாமிக் கருமி நடக்கையே. 7.
கையும் மெய்யுங் கருத்துக் கிசையவே
ஐய தந்ததற் கையம் இனியுண்டோ
பொய்ய னேன்சிந்தைப் பொய்கெடப் பூரண
மெய்ய தாம்இன்பம் என்று விளைவதே. 8.
என்றும் உன்னை இதய வெளிக்குளே
துன்ற வைத்தன னேஅருட் சோதிநீ
நின்ற தன்மை நிலைக்கென்னை நேர்மையாம்
நன்று தீதற வைத்த நடுவதே. 9.
வைத்த தேகம் வருந்த வருந்திடும்
பித்த னானருள் பெற்றுந் திடமிலேன்
சித்த மோன சிவசின்ம யானந்தம்
வைத்த ஐய அருட்செம்பொற் சோதியே. 10.
செம்பொன் மேனிச் செழுஞ்சுட ரேமுழு
வம்ப னேனுனை வாழ்த்து மதியின்றி
இம்பர் வாழ்வினுக் கிச்சைவைத் தேன்மனம்
நம்பி வாவெனின் நானென்கொல் செய்வதே. 11.
செய்யுஞ் செய்கையுஞ் சிந்திக்குஞ் சிந்தையும்
ஐய நின்னதென் றெண்ணும் அறிவின்றி
வெய்ய காம வெகுளி மயக்கமாம்
பொய்யி லேசுழன் றேனென்ன புன்மையே. 12.
புன்பு லால்நரம் பென்புடைப் பொய்யுடல்
அன்பர் யார்க்கும் அருவருப் பல்லவோ
என்பொ லாமணி யேஇறை யேஇத்தால்
துன்ப மன்றிச் சுகமொன்றும் இல்லையே. 13.
இல்லை உண்டென் றெவர்பக்க மாயினுஞ்
சொல்ல வோஅறி யாத தொழும்பன்யான்
செல்ல வேறொரு திக்கறி யேன்எலாம்
வல்ல நீஎனை வாழ்விக்க வேண்டுமே. 14.
வேண்டுஞ் சீரருள் மெய்யன்பர்க் கேயன்பு
பூண்ட நானென் புலம்அறி யாததோ
ஆண்ட நீஉன் அடியவன் நானென்று
தூண்டு வேனன்றித் தொண்டனென் சொல்வதே. 15.
எனக்கு ளேஉயி ரென்னஇருந்தநீ
மனக்கி லேசத்தை மாற்றல் வழக்கன்றோ
கனத்த சீரருட் காட்சி யலாலொன்றை
நினைக்க வோஅறி யாதென்றன் நெஞ்சமே. 16.
நெஞ்சு கந்துனை நேசித்த மார்க்கண்டர்க்
கஞ்ச லென்ற அருளறிந் தேஐயா
தஞ்ச மென்றுன் சரணடைந் தேன்எங்குஞ்
செஞ்சே வேநின்ற சிற்சுக வாரியே. 17.
வாரி ஏழும் மலையும் பிறவுந்தான்
சீரி தானநின் சின்மயத் தேஎன்றால்
ஆரி லேயுள தாவித் திரளதை
ஓரி லேன்எனை ஆண்ட ஒருவனே. 18.
ஒருவ ரென்னுளத் துள்ளுங் குறிப்பறிந்
தருள்வ ரோஎனை ஆளுடை அண்ணலே
மருள னேன்பட்ட வாதை விரிக்கினோ
பெருகு நாளினிப் பேச விதியின்றே. 19.
இன்று னக்கன் பிழைத்திலன் நானென்றே
அன்று தொட்டெனை ஆளர சேஎன்று
நின்ற ரற்றிய நீலனைக் கைவிட்டால்
மன்றம் எப்படி நின்னருள் வாழ்த்துமே. 20.
வாழ்த்து நின்னருள் வாரம்வைத் தாலன்றிப்
பாழ்த்த சிந்தைப் பதகனும் உய்வனோ
சூழ்த்து நின்ற தொழும்பரை யானந்தத்
தாழ்த்து முக்கண் அருட்செம்பொற் சோதியே. 21.
சோதி யேசுட ரேசுக மேதுணை
நீதி யேநிச மேநிறை வேநிலை
ஆதி யேஉனை யானடைந் தேன்அகம்
வாதி யாதருள் வாய்அருள் வானையே. 22.
வானைப்போல வளைந்துகொண் டானந்தத்
தேனைத் தந்தெனைச் சேர்ந்து கலந்தமெய்ஞ்
ஞானத் தெய்வத்தை நாடுவன் நானெனும்
ஈனப் பாழ்கெட என்றும் இருப்பவனே. 23.
இரும்பைக் காந்தம் இழுக்கின்ற வாறெனைத்
திரும்பிப் பார்க்கவொட் டாமல் திருவடிக்
கரும்பைத் தந்துகண் ணீர்கம் பலையெலாம்
அரும்பச் செய்யென தன்னையொப் பாமனே. 24.
அன்னை யப்பனென் ஆவித் துணையெனுந்
தன்னை யொப்பற்ற சற்குரு என்பதென்
என்னைப் பூரண இன்ப வெளிக்குளே
துன்ன வைத்த சுடரெனத் தக்கதே. 25.
தக்க கேள்வியிற் சார்ந்தநற் பூமியின்
மிக்க தாக விளங்கும் முதலொன்றே
எக்க ணுந்தொழ யாவையும் பூத்துக்காய்த்
தொக்க நின்றுமொன் றாய்நிறை வானதே. 26.
ஆன மான சமயங்கள் ஆறுக்குந்
தான மாய்நின்று தன்மயங் காட்டிய
ஞான பூரண நாதனை நாடியே
தீன னேன்இன்பந் தேக்கித் திளைப்பனே. 27.
தேக்கி இன்பந் திளைக்கத் திளைக்கவே
ஆக்க மாயெனக் கானந்த மாகியே
போக்கி னோடு வரவற்ற பூரணந்
தாக்கி நின்றவா தன்மய மாமதே. 28.
அதுவென் றுன்னும் அதுவும் அறநின்ற
முதிய ஞானிகள் மோனப் பொருளது
ஏதுவென் றெண்ணி இறைஞ்சுவன் ஏழையேன்
மதியுள் நின்றின்ப வாரி வழங்குமே. 29.
வாரிக் கொண்டெனை வாய்மடுத் தின்பமாய்ப்
பாரிற் கண்டவை யாவும் பருகினை
ஓரிற் கண்டிடும் ஊமன் கனவென
யாருக் குஞ்சொல வாயிலை ஐயனே. 30.
ஐய மற்ற அதிவரு ணர்க்கெலாங்
கையில் ஆமல கக்கனி யாகிய
மெய்ய னேஇந்த மேதினி மீதுழல்
பொய்ய னேற்குப் புகலிடம் எங்ஙனே. 31.
எங்ங னேஉய்ய யானென தென்பதற்
றங்ங னேயுன் அருள்மய மாகிலேன்
திங்கள் பாதி திகழப் பணியணி
கங்கை வார்சடைக் கண்ணுத லெந்தையே. 32.
கண்ணிற் காண்பதுன் காட்சிகை யாற்றொழில்
பண்ணல் பூசை பகர்வது மந்திரம்
மண்ணொ டைந்தும் வழங்குயிர் யாவுமே
அண்ண லேநின் அருள்வடி வாகுமே. 33.
வடிவெ லாநின் வடிவென வாழ்த்திடாக்
கடிய னேனுமுன் காரணங் காண்பனோ
நெடிய வானென எங்கும் நிறைந்தொளிர்
அடிக ளேஅர சேஅருள் அத்தனே. 34.
அத்த னேயகண் டானந்த னேஅருட்
சுத்த னேயென உன்னைத் தொடர்ந்திலேன்
மத்த னேன்பெறு மாமலம் மாயவான்
கத்த னேகல்வி யாதது கற்கவே. 35.
கற்றும் என்பலன் கற்றிடு நூன்முறை
சொற்ற சொற்கள் சுகாரம்ப மோநெறி
நிற்றல் வேண்டும் நிருவிகற பச்சுகம்
பெற்ற பேர்பெற்ற பேசாப் பெருமையே. 36.
பெருமைக் கேயிறு மாந்து பிதற்றிய
கருமிக் கைய கதியுமுண் டாங்கொலோ
அருமைச் சீரன்பர்க் கன்னையொப் பாகவே
வருமப் பேரொளி யேயுன்ம னாந்தமே. 37.
உன்ம னிக்குள் ஒளிர்பரஞ் சோதியாஞ்
சின்ம யப்பொரு ளேபழஞ் செல்வமே
புன்ம லத்துப் புழுவன்ன பாவியேன்
கன்ம னத்தைக் கரைக்கக் கடவதே. 38.
கரையி லின்பக் கடலமு தேஇது
வரையில் நானுனை வந்து கலந்திலேன்
உரையி லாஇன்பம் உள்ளவர் போலஇத்
தரையி லேநடித் தேனென்ன தன்மையே. 39.
மையு லாம்விழி மாதர்கள் தோதகப்
பொய்யி லாழும் புலையினிப் பூரைகாண்
கையில் ஆமல கக்கனி போன்றஎன்
ஐய னேஎனை ஆளுடை அண்ணலே. 40.
அண்ண லேஉன் னடியவர் போலருட்
கண்ணி னாலுனைக் காணவும் வாவெனப்
பண்ணி னாலென் பசுத்துவம் போய்உயும்
வண்ண மாக மனோலயம் வாய்க்குமே. 41.
வாய்க்குங் கைக்கும் மௌனம் மௌனமென்
றேய்க்குஞ் சொற்கொண் டிராப்பக லற்றிடா
நாய்க்கும் இன்பமுண் டோநல் லடியரைத்
தோய்க்கும் ஆனந்தத் தூவெளி வெள்ளமே. 42.
தூய தான துரிய அறிவெனுந்
தாயும்நீ இன்பத் தந்தையும் நீஎன்றால்
சேய தாம்இந்தச் சீவத் திரளன்றோ
ஆயும் பேரொளி யான அகண்டமே. 43.
அகண்ட மென்ன அருமறை யாகமம்
புகன்ற நின்தன்மை போதத் தடங்குமோ
செகங்க ளெங்குந் திரிந்துநன் மோனத்தை
உகந்த பேருனை ஒன்றுவர் ஐயனே. 44.
ஐய னேஉனை யன்றி யொருதெய்வங்
கையி னால்தொழ வுங்கரு தேன்கண்டாய்
பொய்ய னாகிலும் பொய்யுரை யேன்சுத்த
மெய்ய னாம்உனக் கேவெளி யாகுமே. 45.
வெளியில் நின்ற வெளியாய் விளங்கிய
ஒளியில் நின்ற ஒளியாம்உன் தன்னைநான்
தெளிவு தந்தகல் லாலடித் தேஎன்று
களிபொ ருந்தவன் றேகற்ற கல்வியே. 46.
கல்லை யுற்ற கருத்தினர் கார்நிறத்த
தல்லை யொத்த குழலினர் ஆசையால்
எல்லை யற்ற மயல்கொள வோஎழில்
தில்லை யில்திக ழுந்திருப் பாதெனே. 47.
திருவ ருள்தெய்வச் செல்வி மலைமகள்
உருவி ருக்கின்ற மேனி யொருபரங்
குருவை முக்கணெங் கோவைப் பணிநெஞ்சே
கருவி ருக்கின்ற கன்மம்இங் கில்லையே. 48.
கன்ம மேது கடுநர கேதுமேல்
சென்ம மேதெனைத் தீண்டக் கடவதோ
என்ம னோரதம் எய்தும் படிக்கருள்
நன்மை கூர்முக்கண் நாதன் இருக்கவே. 49.
நாத கீதன்என் நாதன்முக் கட்பிரான்
வேத வேதியன் வெள்விடை யூர்திமெய்ப்
போத மாய்நின்ற புண்ணியன் பூந்திருப்
பாத மேகதி மற்றிலை பாழ்நெஞ்சே. 50.
மற்று னக்கு மயக்கமென் வன்னெஞ்சே
கற்றை வார்சடைக் கண்ணுத லோன்அருள்
பெற்ற பேரவ ரேபெரி யோர்எலாம்
முற்று மோர்ந்தவர் மூதுரை யர்த்தமே. 51.
உரையி றந்துளத் துள்ள விகாரமாந்
திரைக டந்தவர் தேடுமுக் கட்பிரான்
பரைநிறைந்த பரப்பெங்ஙன் அங்ஙனே
கரைக டந்தின்ப மாகக் கலப்பனே. 52.
கலந்த முத்தி கருதினுங் கேட்பினும்
நிலங்க ளாதியும் நின்றெமைப் போலவே
அலந்து போயினம் என்னும் அருமறை
மலர்ந்த வாயமுக்கண் மாணிக்கச் சோதியே. 53.
சோதி யாதெனைத் தொண்டருட் கூட்டியே
போதி யாதவெல் லாமௌப் போதிக்க
ஆதி காலத்தி லுன்னடிக் காந்தவம்
ஏது நான்முயன் றேன்முக்கண் எந்தையே. 54.
எந்த நாளைக்கும் ஈன்றருள் தாயென
வந்த சீரருள் வாழ்கஎன் றுன்னுவேன்
சிந்தை நோக்கந் தெரிந்து குறிப்பெலாந்
தந்து காக்குந் தயாமுக்கண் ஆதியே. 55.
கண்ண கன்றஇக காசினியூடெங்கும்
பெண்ணொ டாண்முத லாமென் பிறவியை
எண்ண வோஅரி தேழை கதிபெறும்
வண்ண முக்கண் மணிவந்து காக்குமே. 56.
காக்கு நின்னருட் காட்சியல் லாலொரு
போக்கு மில்லையென் புந்திக் கிலேசத்தை
நீக்கி யாளுகை நின்பரம் அன்பினர்
ஆக்க மேமுக்கண் ஆனந்த மூர்த்தியே. 57.
ஆனந் தங்கதி என்னவென் னானந்த
மோனஞ் சொன்ன முறைபெற முக்கண்எங்
கோனிங் கீந்த குறிப்பத னால்வெறுந்
தீனன் செய்கை திருவருட் செய்கையே. 58.
கையி னால்தொழு தேத்திக் கசிந்துளம்
மெய்யி னாலுனைக் காண விரும்பினேன்
ஐய னேஅர சேஅரு ளேயருள்
தைய லோர்புறம் வாழ்சக நாதனே. 59.
சகத்தின் வாழ்வைச் சதமென எண்ணியே
மிகுத்த தீமை விளைய விளைக்கின்றேன்
அகத்து ளாரமு தாமைய நின்முத்திச்
சுகத்தில் நான் வந்து தோய்வதெக் காலமோ. 60.
கால மூன்றுங் கடந்தொளி ராநின்ற
சீல மேநின் திருவரு ளாலிந்த்ர
சால மாமிச் சகமென எண்ணிநின்
கோல நாடுத லென்று கொடியனே. 61.
கொடிய வெவ்வினைக் கூற்தைத் துரந்திடும்
அடிக ளாம்பொரு ளேருனக் கன்பின்றிப்
படியி லேழைமை பற்றுகின் றேன்வெறும்
மிடியி னேன்கதி மேவும் விதியின்றே. 62.
விதியை யும்விதித் தென்னை விதித்திட்ட
மதியை யும்விதித் தம்மதி மாயையில்
பதிய வைத்த பசுபதி நின்னருள்
கதியை எப்படிக் கண்டு களிப்பதே. 63.
கண்ட கண்ணுக்குக் காட்டுங் கதிரெனப்
பண்டும் இன்றுமென் பால்நின் றுணர்த்திடும்
அண்ட னேயுனக் கோர்பதி னாயிரந்
தெண்டன் என்பொய்ம்மை தீர்த்திடல் வேண்டுமே. 64.
வேண்டும் யாவும் இறந்து வெளியிடைத்
தூண்டு வாரற்ற சோதிப் பிரான்நின்பால்
பூண்ட அன்பர்தம் பொற்பணி வாய்க்குமேல்
ஈண்டு சன்மம் எடுப்பன் அனந்தமே. 65.
எடுத்த தேகம் இறக்குமு னேஎனைக்
கொடுத்து நின்னையுங் கூடவுங் காண்பனோ
அடுத்த பேரறி வாயறி யாமையைக்
கெடுத்த இன்பக் கிளர்மணிக் குன்றமே. 66.
குன்றி டாத கொழுஞ்சுட ரேமணி
மன்று ளாடிய மாணிக்க மேயுனை
அன்றி யார்துணை யாருற வார்கதி
என்று நீயெனக் கின்னருள் செய்வதே. 67.
அருளெ லாந்திரண் டோர்வடி வாகிய
பொருளெ லாம்வல்ல பொற்பொது நாதஎன்
மருளெ லாங்கெடுத் தேயுளம் மன்னலால்
இருளெ லாம்இரிந் தெங்கொளித் திட்டதே. 68.
எங்கு மென்னை இகலுற வாட்டியே
பங்கஞ் செய்த பழவினை பற்றற்றால்
அங்க ணாவுன் னடியிணை யன்றியே
தங்க வேறிட முண்டோ சகத்திலே. 69.
உண்ட வர்க்கன்றி உட்பசி ஓயுமோ
கண்ட வர்க்கன்றிக் காதல் அடங்குமோ
தொண்ட ருக்கெளி யானென்று தோன்றுவான்
வண்த மிழ்க்கிசை வாக மதிக்கவே. 70.
மதியுங் கங்கையுங் கொன்றையும் மத்தமும்
பொதியுஞ் சென்னிப் புனிதரின் பொன்னடிக்
கதியை விட்டிந்தக் காமத்தில் ஆனந்தஎன்
விதியை எண்ணி விழிதுயி லாதன்றே. 71.
அன்றெ னச்சொல ஆமேன அற்புதம்
நன்றெ னச்சொல நண்ணிய நன்மையை
ஒன்றே னச்சொன ஒண்பொரு ளேயொளி
இன்றெ னக்கருள் வாய்இரு ளேகவே. 72.
இருவ ரேபுகழ்ந் தேத்தற் கினியராம்
ஒருவ ரேதுணை என்றுண ராய்நெஞ்சே
வருவ ரேகொடுங் காலர்கள் வந்தெதிர்
பொருவ ரேயவர்க் கென்கொல் புகல்வதே. 73.
புகழுங் கல்வியும் போதமும் பொய்யிலா
அகமும் வாய்மையும் அன்பும் அளித்தவே
சுகவி லாசத் துணைப்பொருள் தோற்றமாங்
ககன மேனியைக் கண்டன கண்களே. 74.
கண்ணுள் நின்ற ஒளியைக் கருத்தினை
விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நண்ணு கின்றவர் நான்தொழுந் தெய்வமே. 75.
தெய்வம் வேறுள தென்பவர் சிந்தனை
நைவ ரென்பதும் நற்பர தற்பர
சைவ சிற்சிவ னேயுனைச் சார்ந்தவர்
உய்வ ரென்பதும் யானுணர்ந் தேனுற்றே. 76.
உற்ற வேளைக் குறுதுணை யாயிந்தச்
சுற்ற மோநமைக் காக்குஞ்சொ லாய்நெஞ்சே
கற்றை வார்சடைக் கண்ணுதல் பாதமே
பற்ற தாயிற் பரசுகம் பற்றுமே. 77.
பற்ற லாம்பொரு ளேபரம் பற்றினால்
உற்ற மாதவர்க் குண்மையை நல்குமே
மற்றும் வேறுள மார்க்கமெ லாமெடுத்
தெற்று வாய்மன மேகதி எய்தவே. 78.