மகா சாஸ்தா துதி
பகை, பயம் நீங்க, பிணிகள், கவலைவிலக, செல்வங்கள் கைகூடும்
நீல வண்ணக் குதிரையை வாகனமாகக் கொண்டு பயணிப்பவரும், தன்னை அடைக்கலமடையும் அடியவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுபவரும், சாதுக்களுக்கு எப்போழுதும் நன்மை செய்கின்றவரும், மகாஞானம் உள்ளவரும் ஈஸ்வரனுக்குத் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்!
சிவவிஷ்னு மைந்தனும், பரிபூரணமானவரும், தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மனிதர்கள் போன்றோர்களால் வணங்கப்படுபவரும், சிறந்ததும், வெண்மையானதும் மதங் கொண்டதுமான யானையை வாகனமாகக் கொண்டவரும், ஈஸ்வரர்களுக்குத் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்!
கொடிய வணவிலங்குகளை, எப்பொழுதும் வேட்டை ஆடுகின்றவரும், அசுரக் கூட்டங்களின் அழிவுக்கு காரணமானவரும், குந்தம் என்ற ஆயுதத்தை உயர தூக்கி வைத்துக் கொண்டிருப்பவரும், ஸவர்ணம் ரத்னம் இவைகளாலான பலவித ஆபரணங்களை உடையவரும், பிரசித்தவரும், ஈஸ்வரர்களுக்குத் தலைவருமான ஸ்ரீ ஐயப்பனைச் சரணமடைகிறேன்!
குளிர்கால நிலவினைப் போல குளுமையான முகத்தையுடையவரும், சூரியன், சந்திரன், அக்னி ஆகியோரை மூன்று கண்களாக உடையவரும், பாரிஜாத மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேகத்தை உடையவரும், ஈசுவரர்களுக்குத் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்!
வனத்தில் தவம் புரிந்த சனகாதி முனிவர்களால் துதிக்கப்படுபவரும், உயர்வான குணமுடைய மனிதர்களால் எப்போதும் பூஜிக்கப்படுபவரும், ஜனன, மரண, பயத்தை போக்குகின்றவரும் ஈஸ்வரர்களுக்கு எல்லாம் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்!
ப்ரணவ மந்திரத்தின் வடிவான மரத்தில் பறவை போல் விளங்கும் முக்கியத் தெய்வமாய் இருப்பவரும், பிறப்பு இறப்புகளாகிய இருண்ட காட்டினை அழிக்கும் பெரிய அக்னியாக இருப்பவரும், கணபதியாலும் முருகனாலும் துதிக்கப்பட்ட மகிமையை உடையவரும், ஈஸ்வரர்களுக்கு எல்லாம் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்!
மும்மூர்த்திகளாலும் தேவாதி தேவர்களாலும் தேவர்களின் தலைவனான இந்திரனாலும் வணங்கப்படும் பாத கமலத்தை உடையவரும், நல்ல ஞானிகளுக்கும், குருவுக்கொல்லாம் குருவாகா இருப்பவரும், சுத்தமான மனமுள்ளவரும், பக்தர்களின் மனமாகிய குகை எனப்படும் சபரிமலையிலுள்ள குகையில் அமர்ந்திருப்பவரும், ஈஸ்வரர்களுக்கு எல்லாம் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்!
சிவ, விஷ்னு குமரருடைய இந்த துதியை அவருடைய உருவத்தை நன்மனத்திலிருத்தி எவர் படிக்கின்றாரோ. அவர் ஈஸ்வரர்களுக்கு எல்லாம் தலைவருமான ஐயப்பன் அருளால் பசுக்கள், புத்திரகள், ஐஸ்வர்யங்கள் என யாவும் பெற்று ஆனந்த வாழ்வு வாழ்வார் என்பது நிச்சயம்! ஐயப்பா உன்னைச் சரணமடைகிறேன்!