ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 – Rahu Ketu Peyarchi 2019

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 

 

ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். இப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். திருக்கணிதப்படி 2019ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் கொடுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

 

மேஷம்

வீர பராக்கிரமம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே… இது நாள் வரை உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் இருந்த ராகு 3ம் இடத்திலும் 10ம் இடத்தில் இருந்த கேது 9ம் இடத்திற்கும் இடப்பெயர்ச்சி அடைய உள்ளனர். 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். “ராகு பதினொன்று,முன்று,ஆறாம் இடத்திற்கு சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாகும்.

காரியங்களுண்டாம்,அன்னதானங்களுண்டாம்.வாகு மதி மணமுண்டாம்,வரத்து மேல் வரத்துண்டாம்” என்ற ஜோதிட பாடல் படி ராகு இப்பொழுது யோகத்தை வழங்க போகிறார். கடந்த ஓன்றறை ஆண்டுகளாக வரன் தேடியும் அமையாத திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும். செய்யும் தொழிலிலோ பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். இது வரை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள். செல்வாக்கு உள்ள பிரமுகர்கள் தொடர்பு கிடைக்கும். அதனால் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் பிரச்சனைகள் திரும்.

மனிதர்களுக்கு மோட்சத்தை கொடுக்க கூடிய கேது 9ல் வருவதால் உங்களுடைய பிரச்சனைகளுக்காக கோயில் பூஜை பரிகாரம் செய்தும் நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டிர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய வருமானமும் கிடைக்கும். பெண்களுக்கு புத்திர ஸ்தானம் 9ம் பாவம், அந்த 9ம் இடத்திற்கு கேது வருவதால் புத்திர பாக்கியமும் அதனால் பெற்றோர்களுக்கு புகழ் பெருமை கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் உற்றார் உறவினர் பகை மறந்து சந்தோசமாக இணையலாம். ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு அவசியம்.

 

ரிஷபம்

அழகுணர்ச்சியும் அன்பும் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே… ராகு 2ம் இடத்திற்கும், 8ம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள். ஏற்கனவே ராகு கேது இருந்த இடமும் யோகமான இடம் தான். 2ஆம் இடம் என்பது செல்வம், குடும்பம்,பணம் கையிறுப்பு, அசையும் சொத்துக்கள், கண்கள்,வாக்கு, நாணயம் இவைகளை குறிக்கும் பாவமாகும். இதில் ராகு வருவதால் ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் சங்கடங்கள் வந்தாலும் அதையும் தாண்டி உங்களுக்கு தேவைகேற்ப தனவரவு, நண்பர்கள் உதவி கிடைக்கும்.

பூர்விக சொத்து வீடு மனைகளால் பிரச்சனை வரலாம். எதிலும் நிதானமாக பேசியும் அமைதியாகவும் செயல்படுவது நல்லது. அரசு மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கு காத்து இருந்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். வீடு பூமி வாகனம் சம்பந்தபட்ட வகையில் சுப விரையம் வரலாம். அன்னிய இனத்தவர்களால் அனுகூலம் ஆதாயம் உண்டு. எதிர்பாராத அதிர்ஷ்டமும் ஆதாயம் வந்தாலும் யாரோ பட்ட கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்று கடனை அடைக்கும் நிலையும் வரலாம்.

அஷ்டமத்து சனியால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு இதுநாள் வரை தடைப்பட்ட காரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனி சுபமாக முடியும். கேது 8ல் இருப்பதால் தொட்டது துலங்கும். இது வரை யாரோ நமக்கு செய்வினை வைத்து விட்டார்களோ என்று பயந்து போன உங்களுக்கு கேது பகவான் போட்டி பொறாமை எதிரி எல்லாவற்றையும் அழிப்பார். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி குடும்பத்தில் குதூகலத்தையும், அதிக வருமானத்தையும் தருவார். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கைக்கு விளக்கு போட மேலும் நன்மைகள் நடக்கும்.

 

மிதுனம்

இது வரை 2ல் ராகு 8ல் கேது சஞ்சரித்தனர். இப்பொழுது ஜென்ம ராசியில் வரும் ராகு சனியின் பார்வையையும்,கேதுவின் பார்வையும் ராசிக்கு கிடைக்கிறது. ஜென்ம ராசி என்பது கௌரவம், செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு,புகழ்,பெறுமை,ஆற்றலை குறிக்கும் இடத்திற்கு வருவதால் ஸ்தான பலத்தை சீர்குலைப்பார்.

நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். ராகுவை சனி பார்ப்பதால் தேவையில்லாத விரைய செலவை கொடுக்கும். சிலருக்கு மனைவி பெயரில் தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும். தொழிலில் முன்னேற்றம் வரும். சிலருக்கு தொழில் மாற்றம்,இடமாற்றம் வரலாம். பொருளாதாரம் நிலை உயரும் இது வரை தடைப்பட்ட திருமணம் இனி தடை நீங்கி நடக்கும்.

ராகு 7ம் இடத்தை பார்ப்பதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும். உத்தியோக உயர்வு கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும்.

சனியோடு கேது 7லும் இருப்பதால் தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம். ராகு கொடுத்தால் கேது கெடுப்பார் அதன் அடிப்படையில் அவர்களின் பெயர்ச்சிக்கு 3மாதத்திற்கு முன்னே அவர்களின் ஆட்டத்தை காண்பிக்க ஆரம்பித்து விட்டனர். இனி எல்லாவற்றிலும் கவனமாக செயல்பட வேண்டும். செவ்வாய்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு போடுங்கள்.

 

கடகம்

இது வரை ராகு கேது ஜென்ம ராசியிலும்,7ம் பாவத்திலும் சஞ்சாரம் செய்தார்கள். இப்பொழுது இடம் மாறி 12மிடத்தில் ராகுவும் 6ம் இடத்தில் கேதுவும் மாறுகிறார்கள்.

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்க்கு ராகு கேது வருவது நல்லது தான். சுபகாரியங்கள் திருமணம் சடங்கு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். சிலரது பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம் காதல் திருமணம் அவர்கள் விருப்பபடி செய்து வைக்கும் சூழ்நிலை வரும்.

அறிவாளியை முட்டாளாக்கி உட்கார வைத்த ராகு 12 ம் இடத்திற்கு மாறுவதால் வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை கொடுப்பார். வர்த்தக தொடர்பு ஏற்படும்.சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும்.

கேது 6ம் வீட்டிற்கு வருகிறார். ஏற்கனவே சனிப்பெயர்ச்சியாகி ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். இனி கேதுவும் அந்த வீட்டில் அமரப்போவதால் புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலை பெருக்கி லாபம் சம்பாதித்து சுகபோகங்களை பெருக்கி கொள்ளலாம். புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாற்றி பழைய கடன்களை அடைக்கலாம். நோய் நொடி போட்டி பொறாமை ஒழியும். வீண் விரைய வைத்திய செலவுகள் குறையும்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எல்லாம் தித்திக்கும் நிலைக்கு மாறும். உங்களுடைய செயல்களில் காரியங்களில் தோல்வியை கண்டு அஞ்சாத உங்களுக்கு வெற்றியை எட்டி பிடிக்க வைக்கும். ராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரும். மலைபோல வரும் துன்பம் எல்லாம் பனிபோல விலகி குடும்பத்தில் அமைதி ஆனந்தம் கிடைக்கும் காலம் வந்து விட்டது.

 

சிம்மம்

வெற்றியை இலக்காகக் கொண்டு செயல்படும் சிம்ம ராசிக்காரர்களே… எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் வரை ஒயமாட்டிர்கள். 12ஆம் வீட்டில் விரையத்தில் அமர்ந்துள்ள ராகு 11ல் இடப்பெயர்ச்சி ஆவதால் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் தருவார். போட்டி பொறாமைகளை ஒழிப்பார். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் நீங்கள் மாட்டிய பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். பாகப் பிரிவினை, சொத்து வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும்.

மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவதால் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும். பிள்ளைகளுக்கு படிப்பு மாற்றம் மேல் கல்விகளுக்கு சுப கடன்கள் வாங்க நேரிடும். தடைப்பட்ட திருமணங்கள், புத்திரபாக்கியம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.

செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் மாற்றமும் உருவாகும். கடன் சுமை குறையும். பணத்தால் நண்பர்கள் உற்றார் உறவினர் மூலம் சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு பகையை மறந்து நட்பு பாராட்டுவார்கள். புதிய முயற்சிகள் கை கூடும். புதிய மனிதர்களின் தொடர்பு அவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும்.

குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களை கண்டு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். நன்மையான ராகு கேது பெயர்ச்சி தான். 5ல் கேது இருப்பதால் குலதெய்வ பிரார்த்தனை செய்யுங்கள்.

 

கன்னி

ராசிக்கு 11ல் ராகுவும் 5ல் கேதுவும் அமர்ந்து இருக்கின்றனர். இனி ராகு 10லும் கேது 4ஆம் வீட்டிலும் இடம் மாறி அமரப்போகின்றனர். ஏற்கனவே இருந்த இடம் யோகமான இடமாகும். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி யோகத்தை செய்யும்.கேந்திரத்தில் பாவ கிரகங்கள் வரும் பொழுது வலிமையாக பலனை செய்யும்.

கடந்த காலங்களில் மகிழ்ச்சியை கொடுத்து நிம்மதியை இழக்க செய்த ராகு கேது இப்பொழுது சூரியனை கண்டு பனி விலகுவதை போல ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளை உருவாக்கி தரலாம்.

குடும்பத்தில் கணவன் மனைவி ஓற்றுமை ஒங்கும்.குடும்பத்தில் சுபகாரியம் சுபமாக முடியும்.வாடகை வீட்டில் உள்ளவர்கள் ஓத்திகைகக்கு வீடு மாறலாம். காலிமனைகள் வாங்கும் வசதி வரும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும். இந்த ராகு கேது பெயர்ச்சி ஆறுதலையும் முன்னேற்றத்தையும் தரும். ஞாயிறன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு போடுங்கள்.

 

துலாம்

ராகு 10ஆம் வீட்டிலும் கேது 4ஆம் வீட்டிலும் அமர்ந்து இருக்கின்றனர். இனி ராகு ஒன்பதாம் வீட்டிற்கும் கேது 3ஆம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர். ராகு கேதுவுக்கு 3, 6, 11,ஆகிய வீடுகளும் கேந்திர ஸ்தானமான 4, 7, 10,வீடுகளில் ராகு கேது வருவது நல்லது தான்.

கேது மாறி வரும் இடம் முன்றாம் பாவம் சகோதரம், வீரியம், வீரம், எழுத்தறிவு, விளையாட்டு. தகப்பன் ஸ்தானத்தில் ராகு இருந்து சனி பார்வை பெறுவதால் தந்தையாருக்கு உடல் நிலை பாதிக்கலாம். நடக்கும் தசைகள் யோகமாக இருந்தால் தலைக்கு வந்தது தலை பாகையோடு போய்விட்டது என்று ஆறுதல்படலாம்.

குடும்பத்தில் சுபகாரியம் புதுமுயற்சி,திருமணம்,புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். நிர்வாக பொருப்புகள் தேடி வரும். நிண்ட நாட்களாக எதிர்பபார்த்த உதவிகள் வேலை வாய்ப்புகள்,வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும். வருமானம் திருப்தி தரும்.செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இதுநாள் வரை இருந்த இடையூறு நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். மொத்தத்தில் இது வரை நீங்கள் நினைத்த காரியம் கை கூடும். இந்த ராகு கேது விடிவையும் விமோசனத்தை தந்து காசு,பணம் சம்பாத்தியம் சேமிப்பை கொடுப்பார்.

 

விருச்சிகம்

செவ்வாயை ஆட்சி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே… இதுநாள் வரை கலக்கத்தில் இருந்த உங்களுக்கு ஓளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும். பாத சனி படுத்தி எடுத்தாலும் இந்த ராகு பெயர்ச்சி யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெருமை புகழையும் தருவார்.

இது வரை 3 ல் இருந்த கேது இப்பொழுது 2ம் இடத்திற்கும்,9ல் இருந்த ராகு 8ம் வீட்டிற்கும் வருகிறார்கள். ஏற்கனவே இருந்த இடம் யோகத்தை செய்ய வேண்டிய இடம் தான். ராகு சூது கிரகம். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். திருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம். சிலர் பிள்ளைகள் படிப்புக்காக பிரிந்து போகலாம்.

வருமானம் சேமிப்பு உயரும். சிலருக்கு வீட்டுக்கு மேல் மாடி வீடு கட்டும் யோகம் வரும். 2 ல் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும் நல்லதே நடக்கும்.

 

தனுசு

இது வரை 2 ம் இடத்தில் இருக்கும் கேதுவும் 8ஆம் இடத்தில் ராகு இருந்த நிலைமாறி ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகிறார்கள். ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான்.உங்களால் எல்லோருக்கும் நல்லது நடக்கும். ஆனால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. ஊருக்கு ராஜாவாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை கொஞ்சம் கசக்கதான் செய்யும்.தேவை அறிந்து நோக்கம் அறிந்த மனைவி மக்கள் உங்க ராசிக்கு அமையாது என்பது ஜோதிட நூல்களின் கருத்து. ராசியில் கேது கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும்.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும். வருமானம் திருப்தி தரும். கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடியில் முழ்கி உழைப்பு சம்பாத்தியம் அனைத்தையும் அசலுக்கு மேல் வட்டி கட்டி சோற்றுக்கே கடனை வாங்கி நொந்து போனவர்களுக்கு புதிய நட்பு கூட்டு தொழில் ஏதாவது உதவி கிடைத்து தலை நிமிரலாம். ஜென்மசனியால் இது வரை போரட்டம் ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் வரும்.

 

மகரம்

ராசியில் கேது 7 ஆம் பாவத்தில் ராகு அமர்ந்துள்ளனர். இனி அந்த நிலை மாறி 12 ஆம் பாவத்தில் கேது 6ஆம் பாவத்தில் ராகு அமரப்போகின்றனர். கேந்திரத்தில் கேது ராகு இருந்தது ஓரு வகையில் நன்மை செய்ய கூடியது தான். எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு, ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன் அடைப்படும் தீராத நோய் திரும். போட்டி பொறாமை பொடி பொடியாகும்.

இந்த ராகு பெயர்ச்சியால் புதிய தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். வெளிநாட்டு தொடர்புடைய உத்யோகம் கிட்டும். பதவி உயர்வு பெற்று வருமானம் கூடும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். திருமணம் நீண்ட நாள் கனவான புத்திரசம்பத்து கிடைக்கும்.

மோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் வருவதால் புது முயற்சிகள் கை கூடும்.வரவு எட்டணா செலவு பத்தணா நிலை மாறி சேமிப்புகள் உயரும். சுப தேவைகளுக்கு கடன் பட நேரிடும். நிண்ட நாள் கடன்களும் அடையும். வண்டி வாகன மாற்றமும் வீடு மாற்றமும் சொந்த வீடு குடி போகும் சந்தர்ப்பங்கள் உருவாகும். இந்த ராகு கேது பெயர்ச்சி யோகம் செல்வாக்கு சொத்து சுகத்தை கொடுக்கும்.

 

கும்பம்

அமைதியும் எதையும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் கொண்ட கும்ப ராசிக்காரர்களே… ராசிக்கு 6ல் ராகுவும், 12ல் கேதுவும் உள்ளனர். இனி ராசிக்கு 5ம் இடத்திற்கும் ராகுவும், 11ம் இடத்திற்கும் கேதுவும் வரப்போகிறார்கள். 5ஆமிடம் என்பது புத்திரபாக்கியம், தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் உல்லாசம் கேளிக்கை கதை கவிதைகளில் ஆர்வம் இவை அனைத்தும் 5 இடத்தின் காரகத்துவங்கள். 11ஆம் இடம் என்பது லாபம் மூத்த சகோதரம், எண்ணங்கள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும்.

இதுநாள் வரை போதுமான வருமானம் வந்தாலும் கடனுக்கு வட்டியை கட்டி விட்டு நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். கேது 11ல் வருவதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். இதுவரை தடைபட்ட காரியத்தை செவ்வனே செய்து முடிப்பீர்கள். இது வரை திருமணம் ஆகி புத்திரபாக்கியம் தடைப்பட்ட தம்பதியினருக்கு புத்திரபாக்கியமும் குடும்பத்தில் அமைதியும் நிலவும். 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.

 

மீனம்

உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் ராகுவும்,11ஆம் இடத்தில் கேதுவும் இருக்கின்றனர். இன்னும் சில மாதங்களில் 4ல் ராகுவும் 10ல் கேதுவும் மாறுகிறார்கள். ஏற்கனவே இருந்த இடம் யோகமான இடம்தான் என்றாலும் தேவையில்லாத செலவுகள், வாங்கியதை கொடுக்க முடியவில்லை, கொடுத்ததை வாங்க முடியவில்லை என பிரச்சனைகள் திணறடித்தன. இனி இந்த பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

4ம் பாவம் தாயார், சுகம், வாகனம் கல்வி, நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ம் பாவத்திற்கு ராகு வருகிறார். சனியின் பார்வையை பெறுகிறார். கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்க்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம்.

பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார்.வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள், வருமானம் அனுகூலம் ஆதாயத்தை தரும். கடல் தாண்டி திரவியம் தேடும் வாய்ப்பு வரும். சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். ஜீவன ஸ்தானத்தை பார்ப்பதால் தொட்டது துலங்கும் நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும்.

பத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகிய ஸ்தானங்களுக்கு கேது வருகிறார். லாப ஸ்தானத்தில் இருந்து யோகத்தை செய்த கேது இப்பொழுதும் யோககாரனாக செயல்பட்டு யோகபலனை வாரி வழங்குவார். தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு எதிர்பாராத திருப்பத்தை தரும் தொழிலில் இடமாற்றம் உத்தியோக உயர்வை கொடுக்கும்.