Chidambaram Temple Special Features

சிறப்புகள் மிகுந்த சிதம்பரம்

 

 

பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. பஞ்சபூத தலங்களை வழிபட விரும்புபவர்கள், அந்த பயணத்தை சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது.

* ஆன்மிக ரீதியாக சிவபெருமானின் பஞ்ச பூத தலங்கள் இருக்கின்றன. அவை:- காஞ்சீபுரம் (நிலம்), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), திருவண்ணாமலை (நெருப்பு), சிதம்பரம் (ஆகாயம்).

* பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. பஞ்சபூத தலங்களை வழிபட விரும்புபவர்கள், அந்த பயணத்தை சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது.

* சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது, சிதம்பரம் நடராஜர் ஆலயம். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளை கொண்ட அற்புத தலம் இது.

* இங்குள்ள நடராஜ பெருமானின் சன்னிதிக்கான, கொடி மரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும்.

* இத்தலத்தில் நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் இறைவன் அருள்பாலிக்கிறார். நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங் களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

* சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி, தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை.

* திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சிதம்பரம் திருத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளனர். எனவே அந்த நால்வரின் குரு பூஜையும், இந்த ஆலயத்தில் பெரிய திருவிழா போல கொண்டாடப்படுகிறது.

* சிதம்பரத்தில் நடக்கும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழா மிகவும் முக்கியமானது.

* முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை வைத்து கீர்த்தனை இயற்றி, நட ராஜரை துதித்து வழிபடுவார். அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு கொடுப்பாராம்.

* சிதம்பரம் நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் ‘காஸ்மிக் டான்ஸ்’ என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகிறது.

* சிவகங்கை தீர்த்த குளம் நான்கு புறமும் படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்த்த குளம் அருகில் சிறு தூண் நடப்பட்டிருக்கும். அங்கிருந்து பார்த்தால், ஆலயத்தின் 4 ராஜ கோபுரங்களையும் தரிசிக்க முடியும்.

* சிதம்பரம் ஆலயம் என்றதுமே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, அந்த ஆலயத்தின் மூலவர் நடராஜர் என்பதாகத்தான் நினைப்பு வரும். அனைவரும் ஆலயத்திற்குள் நுழைந்ததும் நடராஜரைத் தேடியே ஓடுவார்கள். ஆனால் உண்மையில் இந்த ஆலயத்தின் மூலவர், லிங்க வடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.