Thai Pongal 2018 – பொங்கலோ பொங்கல்

தமிழ் மக்கள் எத்தனையோ பண்டிகைகளைக் கொண்டாடினாலும் பொங்கல் பண்டிகையே அனைத்திலும் முத்தாப்பாய் திகழும் பண்டிகை ஆகும். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தினம் அன்று பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவதால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கூடிய ஆனந்த வாழ்வு பெற முடியும். பொங்கல் பண்டிகை பெரும் திருவிழாவாக நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.

  • போகிப் பண்டிகை
  • உழவர் திருநாள் / தைப் பொங்கல்
  • மாட்டுப்பொங்கல்
  • காணும் பொங்கல் / பூ பொங்கல்

போகிப் பண்டிகை:

மார்கழி மாதத்தின் கடைசி நாளே போகி தினமாக கொண்டாடப் படுகிறது. “பழையன கழிதலும் புதிய புகுதலும்” போகிப் பண்டிகையின் சிறப்பாகும். போகி தினத்தன்று வீட்டில் உள்ள பயன்படாத பழைய பொருட்களை தீயிலிட்டு எரிப்பது வழக்கம்.

அக்காலத்தில் பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் ‘போக்கி’ என்றனர். அந்தச் சொல்லே நாளடைவில் மருவி ‘போகி’ என்றாகிவிட்டது.

இந்திரனுக்கு ‘போகி’ என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், ‘இந்திர விழா’ வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனைப் பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன. மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை ‘போகி’ யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழம்பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.

பொங்கல் பண்டிகை:

பொங்கல் பண்டிகை உழவர் திருநாள் ஆக தை மாதம் முதல் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. வருடம் முழுவதும் நிலத்தில் பாடுபட்ட விவசாயி, தன் நிலத்திற்கும், உழைப்புக்கும் துணை நின்ற மாட்டிற்கும், சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடும் பண்டிகையே பொங்கல் ஆகும். விவசாயிகள் தம் நிலத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியை, புதுப்பானையில் பொங்கலிட்டு, தோட்டத்தில் விளைந்த இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்து, நன்றி தெரிவிக்கும் திருநாளே பொங்கல். எளிமையும், உயிரோட்டமும் நிறைந்த இந்த பண்டிகை ஒவ்வொரு கிராமங்களிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது.

புதிய பானை அல்லது வழக்கமாகப் பொங்கல் வைக்கும் பானையில் அவரவர் வழக்கப்படி பொட்டு வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கொத்தினைக் கட்டி, பின்னர் சுபமான நேரத்தில் பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றி பொங்கல் செய்வார்கள்.

பானையிலிருந்து பால் பொங்கிடும்போது வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து `பொங்கலோ பொங்கல்’ என்று உரக்கச் சொல்வார்கள்.

பொங்கல் தயார் ஆனதும் அவரவர் வழக்கப்படி குலதெய்வத்தின் முன்போ, இஷ்ட தெய்வத்தின் முன்போ அல்லது சூரியனின் ஒளிவிழும் இடத்திலோ வைத்து, விளக்கேற்றி, பொட்டிட்டு, பூப்போட்டு, தூப, தீபம் காட்டிப் பிறகு பொங்கலை நிவேதனம் செய்வார்கள்.

மாட்டுப் பொங்கல்:

உழவர்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவை கால்நடைகளே அதிலும் முக்கியமானது ஏர் முனையை முன்னேந்திச் செல்லும் மாடுகளே! அக்கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கல் தினமாகும். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாக ஐதீகம்.. எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.

மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு, கொம்புகளுக்கு வண்ணமடித்து அவற்றுக்கு படையல் இட்டு வணங்குவார்கள். கிராமப் புறங்களில் இம்மாட்டுப் பொங்கலை பட்டிப் பொங்கல் என்றும் அழைப்பர்.

காணும் பொங்கல்:

காணும் பொங்கல் என்பது அன்று சொந்தங்களை கண்டு கழிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகப் படைப்பது கனுப் பொங்கல் அல்லது காணும் பொங்கல் ஆகும். காணும் பொங்கல் அல்லது கனுப்பொங்கல் அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு படைப்பார்கள்.

மனம் இனிக்கப் பொங்கல், மனை சிறக்க மஞ்சள், நலம் சிறக்க கரும்பு, நாளும் கோளும் நன்மைகள் செய்ய நல்வாழ்த்துக்கள் என எல்லாமே இனிமையாய் அமைந்த பொங்கல் திருநாள் தொட்டு எந்நாளும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும் அது நீங்காது தங்க உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.