வராகி அம்மன் தோற்றம்
வராகி அம்மன் என்பவர் வராகமூர்த்தியின் சக்தி. பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். கறுப்பு நிறமானவர்.
வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் என வராகியினைப்பற்றி ஸ்ரீ தத்துவநிதி விவரிக்கின்றது.
தண்டநாத வராகி, சுவப்ன வராகி, சுத்த வராகி என்னும் மேலும் மூன்று வகையான வராகியின் உருவ அமைப்பு பற்றியும் இந்நூலில் கூறப்படுகின்றது.
தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.
சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச் சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.
சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச் சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.
வராஹி அம்மன் வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் பல கஷ்டங்கள் நாம் செய்யும் செயல்களாலே ஏற்படுகிறது. இதனால் பல எதிரிகளின் தொல்லையினால் சிரமப்படுவார்கள். எதிரியின் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள் வராகி அம்மனை வழிபாடுசெய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எதிரிகளை அழிப்பதற்கு வராஹி அம்மன் ருத்ர அவதாரம் எடுப்பாள். எதிரியின் தொல்லை நீங்குவதற்கு வராஹி அம்மனின் மூல மந்திரத்தை 26 நாட்கள் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வராகி அம்மனுடைய மொத்த அருளும் உங்களுக்கு கிடைக்கும்.
பூஜை அறை வழிபாட்டு முறை:
வராஹி அம்மனை வழிபடுபவர்கள் வெள்ளை மொச்சை பருப்பை நன்றாக வேக வைத்து அதனுடன் தேன் மற்றும் நெய் கலந்து நைவேத்தியமாக படைத்து வராகி அம்மனை வழிபாடு செய்து வர வேண்டும்.
இந்த வழிபாட்டினை தினமும் செய்து வந்தால் எதிரிகளின் தொல்லை நீங்கும், அதோடு தன வசியம் பெருகும். தொழில் விருத்தி அடைந்து நல்ல செழிப்பாக இருக்கும்.