Special About Thiruvannamalai Temple – திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் சிறப்புகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் சிறப்புகள்

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீப விழா மிகவும் பிரசித்திப் பெற்றதாகும்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தக் கோவிலில் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருக்கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த ஆலயத்தின் சில சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.

அருணகிரிநாதர்

சிற்றின்பத்தை பெரிதாக எண்ணி வாழ்ந்து வந்த அருணகிரிநாதர், ஒரு கட்டத்தில் வாழ்வில் மனமுடைந்து தற்கொலை முயற்சியை மேற்கொண்டார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடம், திருவண்ணாமலை ஆலயத்தில் உள்ள வல்லாள மகாராஜ கோபுரம். அந்த கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தார். ஆனால் அவரை முருகப்பெருமான் காத்து அருளினார். மேலும் அவருக்கு சிறந்த புலமையை வழங்கினார். ‘முக்தைத்தரு..’ என அடியெடுத்துக் கொடுத்து, திருப்புகழைப் பாட அருள்புரிந்தார்.

ஒரு முறை வல்லாள மகாராஜனின் கண்நோய் தீர, இந்திரலோகத்தில் உள்ள பாரிஜாத மலர் தேவைப்பட்டது. அதைக் கொண்டு வர அருணகிரிநாதர் முடிவு செய்தார். மனித உடலோடு செல்லமுடியாது என்பதால், கூடு விட்டுக் கூடு பாயும் சித்தியை கையாண்டு, இறந்த கிளியின் உடலுக்குள் தன் உயிரை செலுத்தினார். அருணகிரிநாதரின் உடல் ஓரிடத்தில் மறைவாக இருந்தது. இதற்கிடையில் அருணகிரிநாதரின் மீது பொறாமை கொண்டிருந்த, சம்பந்தாண்டன் என்பவர், அவரது உடலை எரித்து விட்டான். திரும்பி வந்த அருணகிரிநாதர் தன் உடலைக் காணாது கவலையுற்றார். பின்னர் கிளி உடலில் இருந்தபடியே கந்தரனுபூதி பாடினார். திருவண்ணாமலை ஆலயத்தில் அருணகிரிநாதரின் நினைவாக கிளி கோபுரமும், அதன் மேல் கிளியின் உருவமும் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

கரும்பு தொட்டில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத் திருப்பணிகளைச் செய்ததில் வல்லாள மகாராஜனும் ஒருவர். அந்த மன்னனின் வேண்டுகோள்படி அவருக்கு மகனாக இருந்து, தந்தைக்கு பிள்ளை செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் அருணாசலேஸ்வரர் செய்ததாக தல வரலாறு சொல்கிறது. வல்லாள மகாராஜா இறந்த போது, இறைவனே அவருக்கு இறுதிச் சடங்கைச் செய்ததாகவும் தல புராணம் கூறுகிறது. இதனால் குழந்தை வரம் அருளும் இறைவனாகவும் அருணாசலேஸ்வரர் பார்க்கப்படுகிறார். அவரிடம் வேண்டி குழந்தை வரம் பெற்றவர்கள், தங்களது பிள்ளைகளை கரும்பு தொட்டிலில் கட்டி, ஆலயத்தைச் சுற்றி வலம் வருவார்கள்.

குழந்தை வரம் அருளும் விநாயகர்

திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் அமைந்திருக்கிறது இடுக்குப் பிள்ளையார் கோவில். சிறிய அளவிலான இந்த ஆலயம் மிகவும் பழமையானது. நேர்க்கோட்டில் அமையாத மூன்று வாசல்களைக் கொண்டது இந்தக் கோவில். இதனுள் சாதாரணமாக நடந்து செல்வது போல் செல்ல முடியாது. பின்வாசல் வழியாக நுழைந்து, ஒருக்களித்து படுத்தவாறு வளைந்து தவழ்ந்து, இரண்டாவது வாசலில் நுழைந்து, முன்வாசல் வழியாக வெளியே வர வேண்டும். இப்படி வந்து விநாயகரை வழிபட்டால், குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் தலைவலி, பில்லி, சூனியம், உடல் வலி, பிற நோய்கள் தீரும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

மகா தீபத்திற்கான பொருட்கள்

திருக்கார்த்திகை தினத்தன்று, திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்று வதற்காக சுமார் 92 கிலோ செம்பும், 110 கிலோ இரும்புச் சட்டங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட, ஐந்தரை அடி உயர கொப்பரை வைக்கப்படும். இதில் 600 லிட்டர் நெய்யும், 2 மூட்டை பஞ்சும் 15 மீட்டர் காடா துணியும், இரண்டு கிலோ கற்பூரமும் பயன்படுத்தப்படும். இந்த தீபம், திருக்கார்த்திகை தினத்தில் இருந்து தொடர்ச்சியாக 11 நாட்கள் வரை எரிந்து கொண்டே இருக்கும்.

மலையின் மகிமை

மலையின் மீது இறைவன் வீற்றிருப்பது வழக்கம் என்றாலும், மலையே இறைவனாக இருப்பது திருவண்ணாமலையில் தான். இங்குள்ள மலையின் உயரம் 2668 அடி. மலையை சுற்றிவரும் கிரிவலப் பாதையின் நீளம் 14 கிலோமீட்டர். ‘அருணன்’ என்றால் ‘சூரியன்’ எனப் பொருள். ‘அசலம்’ என்றால் ‘கிரி’ அல்லது ‘மலை’ என்று பொருள். சூரியனைப் போன்ற ஒளி வடிவாக இறைவன் மலை உருவில் காட்சி தருவதால் இந்த மலை ‘அருணாசலம்’ என்று அழைக்கப்படுகிறது.

கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும் இருந்த இந்த சிவன் மலை, கலியுகத்தில் கல் மலையாகவும் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மலையைச் சுற்றி எட்டு திசைகளிலும் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. குபேரலிங்கத்திற்கு முன்னதாகவே பஞ்சமுக மலை தரிசனத்தைக் காணலாம்.

மலையின் மையப்பகுதியில் கந்தாஸ்ரமம், விருபாட்சி குகை, குகை நமச்சிவாயர் ஆலயம், மாமரத்துக்குகை, சடைச்சாமி குகை, அருட்பால் குகை, ஆலமரத்துக் குகை, ரமணமகரிஷி குகை எனப் பல்வேறு குகைகள் இருக்கின்றன. அண்ணாமலை லிங்க வடிவில் இருப்பதாலும், சித்தர்கள் சூட்சும வடிவில் இங்கே உலா வருவதாலும், மலையைச் சுற்றும் பக்தர்களின் பிரச்சினைகளும், நோய்களும் நீங்குகிறது என்பது ஐதீகம். பவுர்ணமி தோறும் மலையை கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தது.

நோய் தீர்க்கும் தீர்த்தங்கள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் தீர்த்தங்கள் நிறைந்த ஆலயமாக திகழ்கிறது. மலைப் பகுதியில் சக்கர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், பாலி தீர்த்தம், சிம்மத் தீர்த்தம், எம தீர்த்தம், சோண நதி, உண்ணாமுலை தீர்த்தம், வருண தீர்த்தம், கட்க தீர்த்தம், பாத தீர்த்தம், முலைப்பால் தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் ஆலயத்தில் இருக்கும் சிவகங்கை தீர்த்தமும், பிரம்ம தீர்த்தமுமே பிரதான தீர்த்தங்களாக இருக்கின்றன. துர்க்கையம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கட்க தீர்த்தம், அன்னை பார்வதி உருவாக்கி வணங்கிய தீர்த்தமாக போற்றப்படுகிறது. அனைத்து தீர்த்தங்களுமே நோய் தீர்க்கும் தீர்த்தங்களாகவே இருப்பது சிறப்பு.

கம்பத்தில் தோன்றிய முருகப்பெருமான்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரத்தை அடுத்து, இடதுபுறமாக இருக்கிறது ‘கம்பத்து இளையனார் சன்னிதி.’ இது விஜயநகர மன்னனால் கட்டப்பட்டது. பிரபு தேவமகாராஜன் முன்னிலையில், அரசவைக் கவிஞரான சம்பந்தாண்டான் என்பவர், அருணகிரிநாதரிடம் ஆணவ சவால் விடுத்தார். ‘யாருடைய கவிக்கு சக்தி இருக்கிறதோ, அவர்களுக்கு இறைவன் காட்சி தருவார்’ என்பது சம்பந்தாண்டானின் வாதம். அருணகிரிநாதர் தன் பாடலைப் பாடி, காட்சி தரும்படி வேண்டுகோள் வைத்தார். அதற்கு இணங்கிய முருகப்பெருமான், அங்கிருந்த கம்பம் ஒன்றில் தோன்றி அருணகிரிநாதர் மற்றும் அடியார் களுக்கு அருள்புரிந்தார். இதனால் இறைவனின் பெயர் ‘கம்பத்து இளையனார்’ என்றானது.

Girivalam Miracles