சவுபாக்கியங்கள் அருளும் சோமவார விரதம்
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றார் கிருஷ்ண பரமாத்மா. சிவபெருமான் மாதங்களில் கார்த்திகையாக இருக்கிறார் என்பது ஒரு சிலருக்கே தெரியும். ஆம்! கார்த்திகை மாதத்தில் வருகிற பவுர்ணமி, இறைவன் ஜோதி வடிவாகத் தோன்றிய நாளாக வருகிறது. மனிதனுடைய உடலில் ஆறு மாதங்கள் சேரும் கழிவுகளை நீக்கி சுத்தமடையச் செய்ய கார்த்திகை மாதத்திலிருந்து தை மாதம்வரை மூன்று மாதங்கள் புனித நீராடலும் விரதங்களும் தொடங்குகின்றன.
சோமவார விரதம்
சோமன் என்றால் சந்திரனைக் குறிக்கும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் சோமவாரம் என்றே அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமை அன்று சிவபெருமானைக் குறித்து விரதம் இருந்து பரமனை வழிபட வேண்டும். இதன் சிறப்பைச் சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லி இருக்கிறார். இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம்.
இந்த விரதத்தைக் கார்த்திகை மாத முதல் சோதம வாரத்தில் தொடங்கிக் கடைசி சோமவாரத்தன்று முடிக்க வேண்டும். இந்த வருடம் 5 சோம வாரங்கள் வருகின்றன. அதிலும் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் சோமவாரத்தில் தொடங்கி சோமவாரத்திலேயே நிறைவு பெறுகிறது. விரத நாளன்று காலையில் புனித நீராடி, தினசரிக் கடமைகளை முடித்த பிறகு வேதியனை மனைவியோடு அழைக்க வேண்டும். அவர்களைப் பார்வதி, பரமேஸ்வனாகப் பாவனை செய்து முடிந்த அளவு தானம் செய்ய வேண்டும். சூரியன் மறைவதற்கு முன் ஆறு வேளை உணவு எடுத்துக்கொண்டு சிவபெருமானை வணங்க வேண்டும்.
சிவபூஜை பழக்கத்தில் இல்லாதவர்கள், அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று பஞ்சாமிர்தத்தால் அபிஷேகமும், அர்ச்சனைகளும் செய்ய வேண்டும். பிராமண போஜனம் நடத்தி, சில அடியார்களுக்கும், அங்குள்ள பக்தர்களுக்கும் அன்னப் பிரசாதம் வழங்க வேண்டும். பிறகு வீடு வந்து ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும்.
சோமவார தினத்தில் காலையில் வீட்டில் தீபம் ஏற்றிச் சிவனைக் குறித்து விரதம் இருந்து ஒரு வேளை சிறிதளவே உணவு எடுத்து, இரவில் உறங்கி மறுநாள் நீராடி விரதத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும். இப்படியாக விரதம் செய்பவர்கள் கயிலை மலையானின் அருள் பெற்று நலம் சேர்ப்பர். சோமவார விரதம் செய்தவர்கள் அடைந்த பலன்களை எடுத்துக் கூறும் விதமான புராணங்களில் சொல்லப்பட்டுள்ள அருட்கதைகளை இந்த விரதம் ஏற்பவர்கள் படித்துவிட்டுச் சிவனை வணங்குதல் நலம்தரும்.
எப்படி உருவானது?
முன்பு ஒரு சமயம் திருக்கயிலாய மலையில் சிவபெருமான் தனியாக அமர்ந்திருக்கச் சுற்றிலும் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், கின்னரர், கிம்புருஷர்கள் அமர்ந்திருந்தனர். அந்த நேரத்தில் பார்வதி தேவி அங்கே வந்து பரமனை வணங்கி நின்றார். அப்போது பரமன் யாரும் அறியாதபடி தனது ஜடாமுடியை அசைத்துப் பார்த்தார். அதில் சந்திரன் அமர்ந்திருப்பதைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர். பார்வதி தேவியார் இறை வனிடம், “சுவாமி என்ன இது? சந்திரனைத் தங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறீர்?” என்று கேட்டார். அதற்கு ஈசன், “தேவியே, எனக்கு மிகவும் பிடித்த சோமவார விரதத்தை இந்தச் சந்திரன் முறையாகக் கடைப்பிடித்துச் செய்து இந்தப் பேறினைப் பெற்றுள்ளான்” என்றார். உடனே தேவி, “சுவாமி அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த விரதத்தை எனக்கும் உபதேசித்து அருள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். பார்வதி தேவியும், மற்றவரும் பயன்பெறும் பொருட்டு சோமவார விரதத்தை இறைவன் கூறி அருளினார்.
வசிஷ்டர், சோமசர்மன், தன்மவீரியன், கற்கர் ஆகியோர் இதைக் கடைபிடித்து முறையே அருந்ததி, செல்வம், நற்கதி, குழந்தைப் பேறு ஆகியவற்றைப் பெற்று மகிழ்ந்தனர்.
சீமந்தினி பெற்ற மறுவாழ்வு
சித்திரவர்மன் என்ற மன்னனின் மகள் சீமந்தினி. அவள் தனது 14 வயது முதல் சோமவார விரதத்தைச் செய்து வந்தாள். சந்திராங்கதன் என்ற இளவரசனை மணந்தாள். அவன் நண்பர்களுடன் படகில் யமுனை நதியில் பயணித்தபோது படகு கவிழ்ந்து அனைவரும் உயிர் நீத்தனர். நண்பர்களோடு நாகர் உலகம் சென்று அங்குள்ள நாக மன்னனால் ஆதரிக்கப்பட்டு வந்தான். இதற்கிடையில் சந்திராங்கதன் இறந்துவிட்ட செய்தி கேட்டு அவனுக்கு ஈமக்கிரியைகள் செய்தனர். சீமந்தினி விதவைக் கோலத்தில் இருந்தவாறே யமுனை நதிக்கரையில் சோமவார விரதத்தைச் செய்தாள்.
கணவன் சந்திராங்கதன் நாக மன்னனிடம் முறையாக நடந்து நல்லபெயர் பரிசுப் பொருட்களை பெற்றுத் திரும்பும்போது மனைவியைக் கண்டு அதிர்ந்துவிட நடந்ததைக் கூறி அவளை மீண்டும் திருமணம் செய்து கொண்டு இறைப்பணியில் ஈடுபட்டான். காசி மாநகர் அருகே ஆட்சி புரிந்து வந்த மன்னன் ஒருவன் சீமந்தினியின் மனதிடத்தைச் சோதித்து அறிய விரும்பி, இரண்டு பிரம்மச்சாரிகளை அனுப்பி ஒருவனை பெண்வடிவாகச் சென்று போகச் செய்தான். அவள் இருவரையும் பார்வதி பரமேஸ்வர வடிவங்களாகத் தியானித்தாள். அப்போது பெண் உருவம் ஏற்றவன் உண்மையான பெண் வடிவமாகவே மாறிவிட்டான் என்பது புராணக் கருத்து.