சஷ்டி திதி விரதம்:
வளர்பிறை சஷ்டி திதியில் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. மாதம்தோறும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தியானித்து, நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோமோ, அந்தக் கோரிக்கையை மனதில் சங்கல்பம் செய்துகொண்டு, விரதத்தைத் தொடங்கவேண்டும். அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். வீட்டுக்குத் திரும்பியதும் பகல் முழுவதும் விரதம் இருக்கவேண்டும். முடிந்தால் மாலையில் மறுபடியும் ஒருமுறை கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வீட்டுக்குத் திரும்பி, விரதத்தை நிறைவு செய்யலாம். தொடர்ந்து ஆறு சஷ்டிகள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாதம்தோறும் வரும் சஷ்டி விரதத்தைக் கடைப்பிடிக்க இயலாதவர்கள்கூட, ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விரதத்தைத் தவறாமல் அனுஷ்டித்தால், முருகப் பெருமானின் அருளால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களையும் அடையலாம்.
கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை:
ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை பிரதமை தொடங்கி ஆறு நாள்கள் விரதம் இருக்கவேண்டும். தினமும் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டில் உள்ள பூஜையறையில் பூர்ணகும்பம் வைத்து, அதில் முருகப் பெருமானை உரிய மந்திரங்களால் ஆவாஹணம் செய்து, அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். பகல் முழுவதும் விரதம் இருந்து முருகப் பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யவேண்டும். பகலில் ஒருவேளை மட்டும் உணவு கொள்ளலாம். இப்படி ஆறுநாள்கள் விரதம் இருக்கமுடியாதவர்கள், சஷ்டி அன்று மட்டுமாவது விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால், அனைத்து நன்மைகளையும் பெறலாம்.
குழந்தை வரம் தரும் விரதங்களில் முதன்மையான விரதமாக கந்த சஷ்டி விரதமே போற்றப்படுகிறது. அதனால்தான், ‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்று கூறுகிறார்கள். சஷ்டியில் விரதம் இருந்தால், கருப்பையில் குழந்தை வரும் என்பதே இதன் பொருள்.
முருகப் பெருமானுக்கு உரிய இந்த மூன்று விரதங்களை நாம் முடிந்தவரை அனுஷ்டித்தால், அனைத்து நன்மைகளையும் பெற்று, மகிழ்ச்சியாக வாழலாம்.