Thirumala Thirupati Sthala Puranam

திருமலை திருப்பதி ஸ்தல புராணம்

வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று திருப்பதி தல தரிசனத்தைச் சொல்வார்கள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் இது. அவர், இந்தத் தலத்துக்கு வந்து அருள்பாலிப்பதும் கூட ஓர் உன்னதமான நிகழ்வுதான்!

காஸ்யப முனிவர், உலக நடப்புகளையெல்லாம் பார்த்து கலங்கித்தான் போனார். ‘கலியுகம் ரொம்ப மோசமாகிக் கொண்டிருக்கிறதே… அவதார நாயகன் திருமால், இன்னுமொரு அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தால்தான், பூலோகம் சொர்க்கமாகும்’ என நினைத்தார். எல்லா முனிவர்களையும் வரச் செய்தார். அவர்களின் துணையுடன் மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்தினார்.

‘‘இந்த யாகத்தின் பலனையும் வீரியத்தையும் மாபெரும் சக்தியையும் மும்மூர்த்திகளில் எவர் சாந்தமூர்த்தியோ அவருக்கு சமர்ப்பிக்கப் போகிறோம்’ என்று நாரதரிடம் தெரிவித்தார் காஸ்யப முனிவர்.

அந்தப் பொறுப்பை பிருகு முனிவர் ஏற்றார். வைகுண்டம் சென்றார். ஆனால் அவரை கண்டுகொள்ளாமல் இருந்தார் திருமால். அதனால் கோபமும் அழுகையுமாய் திருமாலின் மார்பில் எட்டி உதைத்தார் பிருகு முனிவர். அப்போதும் பெருமாள் அமைதியாக இருந்தார். அதேநேரம் எந்தப் பாதம் உதைத்ததோ, அந்த பாதத்தை வருடிக் கொடுத்தார்.

பொறுமையும், அமைதியும் கொண்ட திருமாலுக்கே யாக பலன்களைத் தருவது என முனிவர்கள் முடிவெடுத்தனர். அதேவேளையில், திருமாலின் மார்பில் குடிகொண்டிருக்கும் மகாலட்சுமி, மார்பில் உதைத்த பிருகு முனிவரைத் தண்டியுங்கள் என்று பெருமாளிடம் சொன்னாள். அவரோ மறுத்துவிட்டார்.

லட்சுமி கோபம் கொண்டு பூலோகத்தை அடைந்தாள். தவத்தில் மூழ்கினாள். திருமகளைத் தேடி திருமாலும் பூமிக்கு வந்தார். வேங்கடமலைக்கு வந்தவர் புற்று ஒன்றில் கண்மூடி அமர்ந்தார். அவருக்கு பசித்தது!

அதை அறியாமல் இருப்பாளா மனைவி மகாலட்சுமி?! அதன்படி பிரம்மாவும் சிவனும், பசுவும் கன்றுமாக மாற, மகாலட்சுமி எஜமானி போல், அந்தப் பகுதியை ஆட்சிசெய்த மன்னனிடம் விற்கச் சென்றாள். மன்னன் பசுவையும் கன்றையும் காசு கொடுத்து வாங்கிக் கொண்டான்.

பசு மேய்ச்சலுக்குச் செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது. பால் குறைவது கண்டு அதிர்ந்த வேலையாள், பசுவின் பின்னே சென்று புற்றில் பால் சொரிவதைக் கண்டான். கோடரியால் புற்றைக் கலைக்க, பெருமாளின் தலையில் பட்டு ரத்தம் சிந்தியது. தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள், வராஹ மூர்த்தியின் ஆஸ்ரமத்தைக் கண்டார்.

முற்பிறவியில் கண்ணபிரானின் அன்னை யசோதாவாக பிறந்திருந்த யசோதை, அங்கே வகுளாதேவியாக இருந்தாள். பிள்ளையைக் கண்டு பூரித்தாள். சீனிவாசன் எனப் பெயரிட்டு அழைத்தாள். பசி போக்கினாள். இந்த காலகட்டத்தில், சந்திரிகிரி எனும் பகுதியை ஆட்சி செய்த ஆகாசராஜன், குழந்தை வரம் வேண்டி, தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய நாள் குறித்தான்.

யாகம் செய்யும் இடத்தை சீராக்கி, சுத்தப்படுத்தும் வேளையில், பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. அந்தக் குழந்தைக்கு பத்மாவதி எனப் பெயர்சூட்டினான் மன்னன். பத்மம் என்றால் தாமரை!

அதையடுத்த காலகட்டத்தில், சீனிவாசருக்கும் பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது. சீனிவாசப்பெருமாள் கலியுகம் முடியும் வரை திருமலையிலேயே விக்கிரக வடிவில் இருந்து அருள்பாலித்து வருகிறார் எனச் சொல்கிறது ஸ்தல புராணம்