மகாபாரதம் பகுதி-100
பரசுராமர் அந்தணர்களுக்கு மட்டுமே வில்வித்தை கற்று கொடுத்து வந்தார். கர்ணனும், வில்லார்வம் காரணமாக அந்தணனைப் போல் வேடமிட்டு பரசுராமரிடம் வித்தை கற்றான். ஒருமுறை, பரசுராமர் அவனது மடியில் தலை வைத்து படுத்திருந்த போது, வண்டு ஒன்று கர்ணனின் தொடையைத் துளைத்தது. குருவின் துõக்கம் கலைந்து விடக்கூடாது என்பதால், கர்ணன் அந்த வலியையும் தாங்கவே ரத்தம் பெருக்கெடுத்து பரசுராமரின் கையில் பட அவர் விழித்து விட்டார். ஒரு க்ஷத்திரியனால் மட்டுமே இதுபோன்ற வலியைத் தாங்க முடியும் என கணித்த அவர் கோபத்தில் தன்னிடம் பொய் சொன்ன கர்ணனுக்கு, என்னிடம் கற்ற வித்தைகள் தக்க சமயத்துக்கு உனக்கு பயன்படாமல் போகும், என சாபம் கொடுத்து விட்டார். அந்த சாபம் இப்போது பலிக்கிறது. இருப்பினும், தன்னை சபித்த குருவை அவர் இருந்த திசைநோக்கி வணங்கிய கர்ணன் கோபத்துடன் மற்றொரு தேரில் ஏறி அர்ஜுனனின் அருகில் சென்றான். அப்போது கிருஷ்ணர் அவனது கர்ணனின் பலம் குறைந்து விட்டதைக் கவனித்து, அர்ஜுனனிடம், அவன் மீது பாணங்களை ஏவு என்றார். கர்ணனின் உடலே மறையும்படி அர்ஜுனன் விட்ட பாணங்கள் அவனைத் தைத்தன. அவனது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது. இவ்வளவு அம்புகள் தைத்த ஒருவனால் நிச்சயமாக உயிருடன் இருக்க முடியாது. ஆனால், அவனுக்கு மரணம் வரவில்லை என்றால் அதற்கு காரணம் என்ன?மாயவன் கிருஷ்ணன் அதை அறிவான்.
அர்ஜுனா! அம்பு விடுவதை நிறுத்து! சூரியன் மறைய இன்னும் சிறிது நேரமே இருக்கிறது. எனக்கு ஒரு வேலை இருக்கிறது, என்றவர் தன்னை ஒரு அந்தணராக வடிவம் மாற்றிக் கொண்டார். ரத்தம் வழிய வீழ்ந்து கிடந்த கர்ணனிடம் சென்ற அவர், சூரியனின் மைந்தனே! கர்ணா! நான் மேருமலையில் இருந்து வருகின்றேன். மிகவும் ஏழை. நீ தானதர்மத்தில் சிறந்தவன். உன்னிடம் உள்ளதில் நல்ல பொருள் ஏதாவது ஒன்றைக் கொடேன், என்றார்.கர்ணன் அந்த வலியிலும் மகிழ்ந்தான்.அந்தணரே! இந்த கடைசி நேரத்திலும், எனக்கு தானம் செய்ய வாய்ப்பளித்த உம்மை என்னவென்று புகழ்வேன்? என்னிடமுள்ளதில் சிறந்தது எது என்று கேட்டு நீரே பெற்றுக் கொள்ளும், என்றான். கர்ணா! உனது புண்ணிய பலன்கள் அனைத்தையும் எனக்குத் தரவேண்டும், என்றார் கிருஷ்ணன். கர்ணனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இருப்பினும் சோகமான குரலில், அந்தணரே! என்னிடம் சிறந்த பொருட்கள் இருந்த நேரத்தில் நீர் வரவில்லை. உமக்கு அவற்றைத் தர முடியாத பாவியாகி விட்டேனே! இருப்பினும், நீர் கேட்ட இந்த சாதாரணப் பொருளைக் கொடுக்கிறேன், என்றவனாய், தன் நெஞ்சில் வழிந்த ரத்தத்தைப் பிடித்து அதை தாரை வார்த்து கிருஷ்ணரிடம் ஒப்படைத்தான்.அந்த களிப்புடன் கர்ணனிடம், கர்ணா! நீ விரும்பும் வரத்தைக் கேள். தருகிறேன், என்றார்.ஐயா! கொடிய பாவங்களைச் செய்ததால், இன்னும் ஏழேழு பிறவிகள் எடுத்தாலும் அந்த ஜென்மங்களிலும் என்னிடம் வந்து யாசிப்பவர்களுக்கு அள்ளித்தரும் மனநிலையைக் கொடு, என்று வேண்டினான்.
கிருஷ்ணருக்கு அது கேட்டு மகிழ்ச்சி. கடைசி நேரத்தில், இதோ, என் எதிரி அர்ஜுனன். அவனைக் கொல்ல வேண்டும், என் எஜமானன் துரியோதனனை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும், என அவன் கேட்டிருந்தால், கிருஷ்ணரால் மறுத்திருக்க முடியுமா? ஆனால், அவன் தர்மத்தின் தலைவன். சூழ்நிலைக் கைதியாகி துரியோதனனிடம் சிக்கியவன். நண்பனுக்காக உயிர் கொடுப்பவர்கள் நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இதோ, இவன் நண்பனுக்காக தன் உயிரையும் தரப்போகிறான்.கிருஷ்ணர் அப்படியே தன் அத்தை மகன் கர்ணனை அணைத்துக் கொண்டார். இறைவனிடம் நம் கஷ்டத்தைச் சொல்லி நாம் கண்ணீர் வடித்திருக்கிறோம். ஆனால், செந்தாமரைக் கண்ணனான கிருஷ்ணர், கர்ணனை அணைத்தபடியே கண்ணீர் வடித்தார். அந்தக் கண்ணீர் அவனை அபிஷேகிப்பது போல் இருந்தது.கர்ணா! நீ கேட்ட வரத்தைத் தந்தேன். உன் செயல்களால் நீ எத்தனை பிறப்பெடுத்தாலும், உயர்ந்த இடத்திலேயே பிறப்பாய். தானங்கள் செய்து ஒவ்வொரு பிறப்பின் முடிவிலும் மோட்சம் அடைவாய், என வாழ்த்தினார். பின்னர், கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதம் தாங்கி விஸ்வரூபம் எடுத்தார். கர்ணனுக்கு கொடுத்த அந்த திவ்யமான காட்சியை தேவர்களும், சித்தர்களும், கந்தர்வர்களும், முனிவர்களும், போர்க்களத்தில் நின்ற மானிடர்களும் காணும் பேறு பெற்றனர். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்பாரே திருவள்ளுவர். அதுபோல், தானம் செய்து பேறு பெற்ற அந்த நல்லவனால் பாவிகளுக்கு கூட கிருஷ்ணனின் விஸ்வரூபதரிசனம் கிடைத்தது.
கர்ணன் அந்த காட்சி கண்டு பரவசமடைந்தான்.
நாராயணா! மதுசூதனா! பத்மநாபா! புண்டரீகாக்ஷா, கோவிந்தா, திரிவிக்ரமா, கோபாலா, கிருஷ்ணா என பல திவ்யநாமங்களால் அவரைப் போற்றினான். ஐயனே! உன்னை என்ன வார்த்தைகளால் புகழ்வேன்! மருதமரங்களுக்கு இடையே சென்று கந்தர்வர்களுக்கு வாழ்வளித்த பெருமாளே! துளசிமாலை அணிந்தவனே! திரண்ட தோள்களை உடையவனே! இந்த போர்க்களத்தில் துரியோதனனிடம் பட்ட செஞ்சோற்று கடன் காரணமாக, தர்மர் முதலான என் தம்பிமார்களிடம் போரிட்டேன். தவறு செய்த எனக்கு நீ விஸ்வரூபம் தரிசனம் தருகிறாய் என்றால் அதற்கு காரணம் முற்பிறவியில் நான் செய்த நல்வினைகளாலேயே ஆகும். நான் அடைந்த இந்த பாக்கியத்தை பூலோகத்தில் வேறு யார் பெற்றுள்ளனர்? என்று புகழ்ந்தான்.இது கேட்ட கிருஷ்ணர், கர்ணா! உன் கவச குண்டலங்களைப் பெறும்படி இந்திரனை அனுப்பியதும் நானே! நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருமுறைக்கு மேல் செலுத்த முடியாதபடி குந்தியின் மூலம் வரம் பெற்றவனும் நானே! நீ அவளுடைய மகன் என்ற உண்மையை சொன்னவனும் நானே! என்று உண்மைகளை உடைத்துவிட்டு, மீண்டும் தேர்சாரதி வடிவமெடுத்து அர்ஜுனனின் தேரில் ஏறினார்.