Mahabharatham story in Tamil 105 – மகாபாரதம் கதை பகுதி 105

மகாபாரதம் பகுதி-105

கிருஷ்ணரால் பாண்டவர் பாசறையை பாதுகாக்க ஒரு பூதம் நியமிக்கப்பட்டிருந்தது. அந்தப் பூதம் தன் முன் வந்தவர்களை பாசறைக்குள் நுழையமுடியாதபடி தடுத்து விரட்டி விட்டது. ஒரு மரத்தடியில் தங்கிய அவர்கள், அதை மீறி பாசறைக்குள் எப்படி நுழைவதென ஆலோசித்தனர். அஸ்வத்தாமன் அவர்களிடம், துரியோதனனிடம் எப்படியாவது பாண்டவர்களை அழித்து விட்டே திரும்புவோமென சபதம் செய்து விட்டு வந்துள்ளோம். அவனும் நமக்காக ஆவலுடன் காத்திருப்பான். இந்தப் பூதத்தைக் கண்டு பயப்படுவதை விட, அதை அடக்கிவிட்டு உள்ளே நுழைய முயல்வோம். அந்த முயற்சியில் நாம் இறந்தாலும் சரியே, என்றான். இக்கட்டான நேரத்தில் இறைவனே தங்களுக்கு கைகொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அனைவரும் சிவபூஜை நடத்த முடிவெடுத்தனர். இந்த பூஜை நமக்கு நன்மையைத் தந்தாலும் சரி, தராவிட்டாலும் பரவாயில்லை. சிவபூஜையால் மிகுந்த புண்ணியம் சேரும், என அஸ்வத்தாமன் கிருபாச்சாரியாரிடம் கூறினான். பின்னர், சிவபெருமானை முறைப்படி பூஜித்தான். அவனது பூஜையை ஏற்று சிவபெருமானே அவனுக்கு காட்சி தந்தார். அஸ்வத்தாமன் இழந்த பலத்தையெல்லாம் பெற்றவன் போல் உற்சாகமானான். அவரிடம், ஐயனே! எதிரிகளை அழிக்கும் ஆயுதம் ஒன்றைத் தந்தருளுங்கள், என அவரிடம் வேண்டினான். சிவபெருமானும் அவனுக்கு ஆயுதம் வழங்கி மறைந்தார்.தான் பெற்ற ஆயுதம் மிக உயர்ந்தது என்பதால், மிக்க தைரியத்துடன் அஸ்வத்தாமனும், மற்றவர்களும் பாசறைக்குள் நுழைந்தனர். கிருஷ்ணர் நியமித்த பூதம் அவர்களைத் தடுத்தது. அதன் முன்னால் சிவாயுதத்தை அஸ்வத்தாமன் துõக்கவே, பயந்து போன பூதம் அங்கிருந்து ஓடிவிட்டது. பின்னர் கிருபாச்சாரியாரையும், கிருதவர்மாவையும் பாசறை வாசலில் நிற்கச் சொல்லிவிட்டு, அஸ்வத்தாமன் பாசறைக்குள் புகுந்தான். தன் தந்தை துரோணரை கொன்றவனும், திரவுபதியின் சகோதரனுமான திருஷ்டத்யும்னன் ஓரிடத்தில் உறங்குவதைக் கண்டான். அஸ்வத்தாமனுக்கு ஆத்திரம் பொங்கியது. துõங்கிக் கொண்டிருந்தவனை ஆத்திரத்தில் வெட்டிக் கொன்றான்.

அப்போது ஏற்பட்ட சத்தம் கேட்டு, திருஷ்டத்யும்னனின் சகோதரன் சிகண்டி முதலானவர்கள் விழித்தனர். அவர்களை பெரும் சோகம் கவ்வியது. சோகம் கோபமாக மாற அவர்கள் அஸ்வத்தாமனுடன் போரிட்டனர். தன்னை எதிர்த்தவர்களையெல்லாம் அஸ்வத்தாமன் கொன்று குவித்தான். ஓரிடத்தில், பாண்டவர் களின் பிள்ளைகள் ஐந்துபேரும் படுத்திருந்தனர். அவர்கள் தோற்றத்தில் பாண்டவர்களை போலவே இருந்தனர். அஸ்வத்தாமன் ஏமாந்து விட்டான். அவர்கள் பாண்டவர்கள் தான் என நினைத்து, ஐந்து பிள்ளைகளின் தலையையும் துண்டித்து ஆர்ப்பரித்தான். பாசறை அல்லோகலப்பட்டது. பல தேசத்து மன்னர்களும் ஒன்று சேர்ந்து அஸ்வத்தாமனை எதிர்த்தனர். ஆனால், சிவாயுதத்தின் முன்னால் யாருடைய தலையும் பிழைக்கவில்லை. அஸ்வத்தாமன் வெற்றிக்களிப்புடன் ஆனந்தமாக இருந்தான். பாண்டவர்களின் தலைகள் என நினைத்து, பாண்டவர் பிள்ளைகளின் தலைகளை கையில் எடுத்துக் கொண்டு பாசறைக்கு வெளியே வந்தான். கிருபரையும், கிருதவர்மாவையும் அழைத்துக் கொண்டு, துரியோதனன் அடிபட்டுக் கிடந்த இடத்திற்குச் சென்றான். அந்த தலைகளை துரியோதனன் முன்னால் வத்தான். பாண்டவர்கள் இறந்தார்கள், அவர்களின் தலைகளைப் பாருங்கள் என்றான். துரியோதனன் ஆவலுடன் அவற்றைப் பார்த்து, அஸ்வத்தாமா! ஏமாந்து விட்டாய். இவர்கள் பாண்டவர்கள் அல்ல! அவர்களை போலவே இருக்கும் அவர்களது பிள்ளைகள், என்றான். அஸ்வத்தாமன் திர்ந்து போனான். துரியோதனன் அவனிடம், அஸ்வத்தாமா! நீ பிராமணன். அப்படியிருந்தும், சிறுவர்களை அழித்து உன் வீரத்துக்கு களங்கத்தை தேடிக்கொண்டாய். அதுமட்டுமல்ல! இப்போது என் பரம்பரையிலும், பாண்டவர் பரம்பரையிலும் வாரிசுகளே இல்லாமல் போயிற்று. இனி, நீ போர் செய்ய வேண்டாம். நான் மடிவது உறுதி. நீ கிருபருடன் சென்று தவம் மேற்கொள், என்று சொல்லி அனுப்பி விட்டான். பின்னர் சஞ்சயமுனிவரை அழைத்த துரியோதனன், தாங்கள் என் தந்தையிடம் சென்று, பாண்டவர்களுடன் இணைந்து ராஜ்யத்தை ஆளச் சொல்லுங்கள். பிள்ளைகளை இழந்த என் தாய்க்கு ஆறுதல் சொல்லுங்கள். பேச்சில் தங்களை விட வல்லவர் யாருமில்லை, என்றான். பின்னர் அவரது திருவடிகளை வணங்கி, தன் உயிரை நீத்தான்.

தவம் செய்யச் சென்ற அஸ்வத்தாமன் வியாசரைச் சந்தித்து, தவம் செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கேட்டுத் தெரிந்து அங்கு கிளம்பினான். சஞ்சயமுனிவர் துரியோதனன் இறந்த விபரத்தை திருதராஷ்டிரனிடம் தெரிவித்தார். அவனும், காந்தாரியும் புலம்பி அழுதனர். அன்றிரவில், காட்டில் பாண்டவர்களுடன் தங்கியிருந்த கிருஷ்ணர் மறுநாள் காலையில் பாசறைக்கு வந்தார். அங்கே தங்கள் பிள்ளைகள் தலையின்றியும், மன்னர்களும் இறந்து கிடப்பது கண்டு அவர்கள் கலங்கினர். திரவுபதி தலையற்ற அந்த உடல்களைக் கட்டியணைத்து கதறினாள்.ஐந்து பெற்றும் ஒன்றுமில்லாமல் போனேனே, என அவள் கதறுவதைக் கண்டு, அஸ்வத்தாமனை அழித்தே தீருவோம் என அர்ஜுனனும், பீமனும் சபதம் செய்துகிளம்பினர். கிருஷ்ணர் அவர்களைத் தடுத்தார்.அர்ஜுனா, பீமா! அபாண்டவம் என்னும் ஒரு அஸ்திரம் அஸ்வத்தாமனிடம் உள்ளது. சிவனருளால் அவன் பெற்ற அந்த ஆயுதத்தின் முன் யாராலும் நிற்க முடியாது. நீங்கள் அங்கு சென்றால் உயிர் விடுவது உறுதி, என்றவர், திரவுபதியிடம், தங்கையே! விதியை வெல்பவர் யாருமில்லை. நீ மனதைத் தேற்றிக் கொள், என்றார். பின்னர் தர்மர், கர்ணன், துரியோதனன் மற்றும் சகோதர்கள் அனைவருக்கும் ஈமச்சடங்குகளைச் செய்தார். அவர்கள் அனைவரும் அரண்மனைக்குப் புறப்பட்டனர்.