Mahabharatham story in Tamil 78 – மகாபாரதம் கதை பகுதி 78

மகாபாரதம் – பகுதி 78

சல்லியனைக் காப்பாற்றும் விதத்தில், துரியோதனன் பீமனுடன் கடும் யுத்தம் செய்தான். இருவரும் மோது வதைப் பார்த்து பீமனின் மகன் கடோத்கஜன் வந்தான். அவனோடு கவுரவப்படைகள் மோதின. ஆனால், இந்த இருவரின் பலத்தின் முன்பு துரியோதனின் படைகளால் ஏதும் செய்ய முடியவில்லை. அவர்கள் பயத்தில் புறமுதுகிட்டு ஓடினர். அப்போது, துரியோதனின் தம்பி விகர்ணன் பாண்டவர் படைகளை ஒரு இடத்தில் ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தான்.

இதைப்பார்த்து விட்ட அபிமன்யு, அவனோடு கடும் யுத்தம் செய்தான். அவன் விட்ட அம்புகளால் விகர்ணனின் வயிறு கிழிந்து தொங்கிவிட்டது. அவனது குடல் சரிந்து மிகுந்த ஆபத்தான நிலையில் தரையில் விழுந்தான். இது கண்டு கவுரவப்படையினர் திடுக்கிட்டு ஓடினர். தங்கள் உயிரையும் அபிமன்யு பறித்து விடுவான் என்று அவர்கள் ஓடிய வேளையில், சூரியன் அஸ்தமிக்கவே ஆறாம்நாள் போர் முடிந்தது. ஏழாம்நாள் போரில் பீஷ்மரும் அர்ச்சுனனும் சமபலத்துடன் மோதினர்.


பீமனுடன் சகுனியும், சல்லியனும் மோதி தோற்றுப்போனார்கள். ஆனாலும், பொதுவான அளவில் பார்த்தால் வெற்றி தோல்வியின்றியே முடிந்தது. எடடாம் நாள் கவுரவர் படைக்கு பெரும் இழப்பாக அமைந்தது. கவுரவர்கள் நூறுபேர் என்ற இலக்கணத்தை அன்றைய தினம் மாற்றியமைத்தான் பீமன். அன்று துரியோதனனின் தம்பிகளான சுந்தரன், விசாலக்கண்ணன், பவுதுண்டன், மகாவிந்து, அபயன், மகோதரன், ஆதித்தகேது, வீரவாசி ஆகியோர் துரியோதனனுடன் வந்து, பீமனுடன் ஒட்டுமொத்தமாக இணைந்து யுத்தம் செய்தனர். பீமனுக்கு அல்வா சாப்பிட்டது போல இருந்தது. அன்று அவர்களை வதம் செய்தே தீருவதென உறுதியெடுத்தான். அதன்படி அம்பு மழையை அவர்கள் மீது பொழிந்தான். அவை துரியோதனனின் எட்டு தம்பிமார்களையும் விண்ணுலகுக்கு அனுப்பியது. அந்தக் காட்சியைக் கண்ட துரியோதனனால், மேற்கொண்டு போர் செய்ய முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. அவன் தனது தேரை மகாத்மா பீஷ்மரை நோக்கி ஓட்டினான். பிதாமகரே! ஐயனே! தாங்கள் தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். எனது தம்பிமார்கள் எட்டுபேர், ஒரே நேரத்தில் என் கண்முன்னால் துடிதுடித்து இறந்தார்கள். நீங்கள் எங்கள் சேனாதிபதி மட்டுமல்ல! தாயும் தந்தையுமாக இருக்கிறீர்கள். நீங்கள் இருந்த இந்த போர்க்களத்தில், இப்படி ஒரு மாபெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறேன், என்று கண்ணீர் வழியச் சொன்னான்.

அப்போது, பீஷ்மர் துரியோதனனுக்கு சொன்ன அறிவுரை உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்துவதாக அமைந்தது. துரியோதனா! இறப்பைக் கண்டு வருந்தாதே. போர்க்களத்தில், நாம் ஆயுதங்களை ஏந்துவது நமது பாதுகாப்புக்காக மட்டுமல்ல. பிறரைக் கொல்வதற்கும் தான். மேலும், போர்க்களத்தில் உயிர்விடுவது வீரர்களுக்கு சிறப்பாகும். அதாவது, ஒரு செயலைச் செய்வதென முடிவெடுத்து விட்டோம்.

அப்போது உயிருக்கு ஆபத்து வருகிறதே என ஒதுங்கி விடக்கூடாது. எதிர்த்து நின்று ஜெயிக்க வேண்டும், இல்லையேல் மரணத்தை ஏற்க வேண்டும். ஒரு வள்ளல் தனது செல்வத்தை பிறருக்கு கொடுக்க தயங்கமாட்டான். ஒரு நல்ல இல்லறத்தான், தன் வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பதில் ஆனந்தம் கொள்வான். உலகம் நிலையற்றது என நினைக்கும் ஞானி மரணத்தைக் கண்டு ஒதுங்கமாட்டான். இதெல்லாம் எவ்வளவு நிச்சயமோ, அதுபோல் போர்க்களத்தில் சாவும் நிச்சயம். அது கண்டு அஞ்சக்கூடாது, என்றவர் மேலும் தொடர்ந்தார்.


துரியோதனா! இந்தக்கிழவன் நேரம் கெட்ட நேரத்தில் தத்துவங்களை உதிர்த்துக் கொண்டிருக்கிறானே என எண்ணாதே. நிஜத்தை சில இடங்களில் சொல்லியே தீர வேண்டும். இன்று உன் தம்பிகளை இழந்ததற்கான காரணத்தை எண்ணிப்பார். அன்று, யார் சொல்லையும் கேட்காமல், நீ திரவுபதியின் ஆடையைக் களைய உத்தரவிட்டாய். அவள் வடித்த கண்ணீர் இன்று இந்தக்கதிக்கு உன் தம்பிகளை ஆளாக்கியிருக்கிறது.

எந்த ஒரு வீட்டில் ஒரு பெண் கண்ணீர் வடிக்கிறாளோ, அந்த இல்லம் அழிந்து போவது உறுதி. கர்ணனும், சகுனியும் சொன்னதைக் கேட்டு உன் சிந்தையில் தீமையை வளர்த்துக் கொண்டாயே அதன் பலாபலனை நீ தானே அனுபவிக்க வேண்டும், அதுமட்டுமா? மகாத்மா விதுரர் உனக்கு என்ன கேடு செய்தார்? மாபெரும் சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றை அவர் வைத்திருந்தார். அது ஒன்று மட்டும் இருக்குமானால், இன்று குரு÷க்ஷத்ர களத்திலே, பாண்டவர்களில் ஒருவர் கூட மிஞ்சியிருக்க மாட்டார்கள். ஆனால், நீயோ அவரது பிறப்பைப் பற்றி பழித்துப்பேசி, கோபத்தைத் தூண்டி, வில்லை ஒடிக்கச் செய்தாய்.

கர்ணனும் கோபித்துக் கொண்டு ஆயுதம் எடுக்காமல் இருக்கிறான். மேலும், பாண்டவர்களுக்கு கண்ணபிரானின் ஆசியும் இருக்கிறது.


பாண்டவர்களை எதிர்க்க இப்போது உன்னையும், என்னையும் விட்டால் வீரர்கள் யாருமில்லை. சரிவா! இருவரும் போவோம். போராடுவோம். மரணம் வந்தாலும் தழுவிக்கொள்வோம், என்று சொல்லியபிறகு, அவனது பதிலுக்கு காத்திராமல், தேரை படைகளின் மத்தியில் செலுத்தினார். இந்த சமயத்தில் பாண்டவர்களுக்காக களப்பலியானவனும், அர்ஜுனனுக்கும், நாககன்னிக்கும் பிறந்தவனுமான அரவான், தான் சாகும் முன்பு போர்க்கள காட்சிகளை சில நாட்களாவது பார்க்க வேண்டும் என்று கிருஷ்ணரிடம் கேட்டுப்பெற்ற வரத்தின்படி போர்க்களத்தில் நின்று காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மாயவித்தைகள் தெரிந்தவன்.

மாயத்தோற்றங்கள் பலவற்றை எடுத்து அவனும் போரில் குதித்தான். கவுரவப் படையுடன் கடுமையாகப் போரிட்டான். பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது, வேத்தீரிய வனத்தில் தங்கியிருந்தனர். அவ்வனத்தில் வசித்த மக்களை அங்குள்ள பகாசுரன் என்பவன், நாளுக்கு ஒருவர் வீதம் விருந்தாக உண்டான். ஒருமுறை, பீமன் தாங்கள் தங்கியிருந்த வீட்டிலுள்ள இளைஞனுக்குப் பதிலாகச் சென்று பகாசுரனைக் கொன்று விட்டான்.அவனது தம்பி அலம்புசன் என்பவன், தன் சகோதரனைக் கொன்ற பீமனைப் பழிவாங்க துரியோதனனுடன் இணைந்திருந்தான். அவனுக்கும், அரவானுக்கும் அன்று கடும்போர் நடந்தது. அரவான் நாகவடிவத்தில் அவனுடன் போர் செய்தான்.