மார்கழி நோன்பு
தனுர் மாதம்’ என்றழைக்கப்படும் மார்கழி, மிகவும் புண்ணியமான மாதமாகவும், தமிழ் மாதங்களிலேயே சிறப்பான மாதமாகும். மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். இந்த ஒருநாளின் வைகறைப் பொழுதாக பிரம்ம முகூர்த்தத்தில் உருவாவதனால் மார்கழி விசேஷமான மாதமாக போற்றப்படுகிறது.
பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த ஆண்டாள், பெருமாள் மீது கொண்ட அதீத பக்தியாழ், அவரையே தன் கணவனாக அடைய விரும்பினாள். கண்ணனை மணக்க வேண்டி மார்கழி மாதத்தில் இருந்த ஆண்டாளுக்கு அருள்புரிந்த பெருமாள், பங்குனி உத்திரத்தில் ஆண்டாளை மணந்துக் கொண்டார். ஆகவே, பெண்கள் பாவை நோன்பு இருந்தால், விரும்பிய கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.
மார்கழி நோன்பு – பாவை நோன்பு சிறப்பு
‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் ..’ எனும் ஆண்டாளின் சொற்கள்படி, மதி நிறைந்த நாளான திருவாதிரை நக்ஷத்திரத்தில் சந்திரன் பூரணம் அடையும் பௌர்ணமி நாள் ஆகும்.
மார்கழி நோன்பு நோற்கும் முறைகள்:
மார்கழி நோன்பு முழுக்க முழுக்க கன்னிப்பெண்களுக்கே உரியது. இவர்கள் விடியலுக்கு முன்பு எழுந்து, ஆற்றில் மார்கழி நீராடி, கரையில் பாவைக்களம் ஒன்றை அமைத்து அதில் ஒரு பாவையை வடிவமைக்கின்றனர். அந்தப் பாவையை பூக்களால் அலங்கரித்து, வைணவக் கன்னியர்கள் கவுரி தேவியாகவும், சைவக் கன்னியர்கள் பார்வதி தேவியாகவும் போற்றி வழிபடுகின்றனர். பாவைப் பாடல்களான திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பாடல்களை பாடி வேண்டி, வணங்குகின்றனர்.
வேண்டுகின்ற பலன்கள்:
கன்னியர்களுக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டும், கணவன், வைணவக் கன்னிக்கு வைணவ அடியனாகவும், சைவக் கன்னிக்கு சிவனடியனாகவும் விளங்க வேண்டும். இனிப்பிறவிகள் இருந்தால், அந்த ஏழேழ் பிறவியிலும் இறைவனுக்கே அடிமைத் தொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு தமக்கு வேண்டியவற்றை சிறப்பாக வேண்டிய கன்னியர்கள், முடிவில் அனைவருக்கும் பொதுவாக, ஊர் செழிக்க, நாடு செழிக்க, தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பொழிய வேண்டும் என்று வேண்டுகின்றனர்.
திருமணமான பெண்கள், கொண்ட கணவன் என்றும் பிரியாமல் இருக்க வேண்டும் என்றும், நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று திருமணத்துக்குக் காத்துக் கொண்டிருக்கும் கன்னிப் பெண்களும் வேண்டிக் கொள்வார்கள்.