மகாபாரதம் பகுதி-26
தர்மரை வரவேற்பது போல் நடித்தான் திருதராஷ்டிரன். மகனே! தர்மா! நீயும் உன் தம்பியரும் தங்கியிருக்க வாராணவத நகரத்தை புதுப்பித்து வைத்திருக்கிறேன். சிறிது காலம் நீ அங்கே சென்று உன் சகோதரர்களுடன் இரு. உங்களுக்கு உதவியாக என் மந்திரி புரோசனன் உங்களுடன் வருவான். அவன் இனி உனக்கு அமைச்சர். அரசியல் விஷயங்களில் கைதேர்ந்தவன். ஆட்சி விவகாரங்களில் கண்டிப்பாக இருப்பவன், என்று சொல்லி விட்டு அருகில் நின்ற புரோசனனிடம்,
புரோசனா! நீ இவர்களுடன் சென்று தங்கியிரு. இவர்களது பகைவர்களை அழித்து விடு. இந்த மண்ணைதர்மன் அரசாள வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய், என்று உத்தரவிட்டான். புரோசனன் தலைதாழ்த்தி உத்தரவை ஏற்றான். புரோசனனை திருதராஷ்டிரன் பாண்டவர்களுடன் அனுப்பி வைக்க காரணமுண்டு. அவர்களுடன் சேர்ந்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்று ஐவரையும் கொலை செய்து விட வேண்டும்.
இது ஏற்கனவே திருதராஷ்டிரனால் புரோசனனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்பாவி போல நடித்த புரோசனன் குந்திதேவியின் அறைக்குச் சென்றான். தாயே! நாம்வாரணாவத நகரம் புறப்படுகிறோம். தர்மரை யுவராஜாவாக்க மன்னர் கட்டளை பிறப்பித்துள்ளார். வாரணாவதத்தில் தனித்திருந்து ஆட்சி சூட்சுமங்களை தர்மர் அறிந்து கொள்ளவே இந்த ஏற்பாடு. தாங்களும் எங்களுடன் புறப்பட வேண்டும். தாய் அருகில் இருந்தால், சேய்கள் இன்னும் மகிழ்வார்கள் அல்லவா? என்றான்.
புரோசனனின் வன்மம் குந்திக்கு தெரியாதே! தன் மகன்களுடன் தானும் பலிகடாவாக்க அழைக்கப்படுகிறோம் என்பதை அறியாத குந்தி, அவர்களுடன் புறப்பட்டாள். ஐந்து ரதங்களில் பாண்டவர்கள், ஒரு ரதத்தில் குந்தி, புரோசனன் ஒரு ரதத்தில் இவர்களை வழிநடத்திச் சென்றான். புரோசனனின் தேருக்குள் ஏராளமான ஆயுதங்கள் இருந்தன. அவனுடன் பாதுகாப்பு என்ற பெயரில் ஏராளமான படையினர் வந்தனர். அவர்கள் அனைவரது தேரிலும் ஆயுதக்குவியல். எல்லாருமே புரோசனனின் நம்பிக்கைக்குரியவர்கள். அவன் இட்ட கட்டளையைச் செய்யக்கூடியவர்கள்.
இந்த பெரும்படையைக் கொண்டு ஐந்து தனிநபர்களை அழிப்பதென்பது மிகச்சாதாரணமாக பட்டது புரோசனனுக்கு. தேர்கள் வாரணாவதத்தை அடைந்தன. அவர்கள் முதலில் நகரில் இருந்த சிவன் கோயிலுக்குச் சென்றனர். சிவபெருமானை பாண்டவர்கள் பக்தியுடன் வணங்கினர். பின்னர் புதிய மாளிகைக்குள் சென்றனர். பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அந்த மாளிகையின் அழகு சொல்லவொண்ணாததாக இருந்தது. ஆனால், அந்த அழகுக்கு பின்னால் மறைந்துள்ள ஆபத்தை பாண்டவர்கள் உணரவில்லை.
அந்த மாளிகையை முழுக்க முழுக்க அரக்கால் கட்டியிருந்தான் புரோசனன். அரக்கில் தீப்பிடித்தால் அப்படியே உருகி பாண்டவர்களைக் கொன்று விடும். தப்ப முயல்வதற்குள் உருகி அவர்களை மூடிவிடும். இதுதான் புரோசனனின் திட்டம். ஆனால், பார்ப்பதற்கு அரக்கு போல் தெரியவில்லை. வெண்ணிறக் கற்களால் கட்டப்பட்டது போன்ற மாயையை கலைஞர்கள் தங்கள் திறமையால் உருவாக்கியிருந்தனர். பாண்டவர்கள் வாரணாவத நகரத்தை திறம்பட ஆட்சி செய்தனர். புரோசனனும் அவர்களிடம் நல்லவன் போல் நடித்து வந்தான். அந்த நடிப்பு நீண்டகாலம் எடுபடவில்லை. முகக்குறிப்பைக் கொண்டே துல்லியுமாக பிறர் குணநலம் அறியும் சகாதேவனுக்கு புரோசனனின் முகமே காட்டிக் கொடுத்து விட்டது. சகாதேவன் மிகப்பெரிய ஜோதிடன் என்பதை பாரதம் படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும், பாண்டவர்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
நடிப்புக்கு மாற்று மருந்தும் நடிப்பு தானே! புரோசனனின் திட்டத்தை அறிவதற்கான முயற்சியில் இறங்கினர். தர்மர் எந்தளவுக்கு பொறுமைசாலியோ அந்தளவுக்கு திறமையானவரும் கூட. பொதுவாகவே பொறுமை இருக்கும் இடத்தில் திறமைக்கு பஞ்சமிருக்காது. தர்மர் விரைவிலேயே தாங்கள் தங்கியிருப்பது அரக்கு மாளிகை என்பதைத் தெரிந்து கொண்டார். தம்பிகளை அழைத்தார். சகோதரர்களே! கவனமாய் கேளுங்கள். நம்மோடு வந்திருக்கிறானே புரோசனன்! அவன் நமக்காக கட்டியிருக்கும் இந்த அரண்மனையைப் பரிசோதித்தேன். இது கல் மாளிகை அல்ல. அரக்கு மாளிகை, என்றார். ஆ என வாய் பிளந்தனர் பாண்டவர்கள்.
தர்மர் தொடர்ந்தார். ஏதோ ஒரு காரணத்துடன் தான், அவன் நம்மை அரக்கு மாளிகையில் தங்க வைத்திருக்கிறான். நம்மைக் கொலை செய்வது அவன் திட்டமாக இருக்கக்கூடும். இனிமேல் அவன் தரும் பானங்கள். உணவு, சந்தனம். மாலைகள் எதுவாக இருந்தாலும் நீங்கள் பரிசோதனைக்கு பிறகே அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும், என்றார். பாண்டவர்கள் தலையசைத்தனர். இந்த பூமி வஞ்சகம் நிறைந்தது தான். ஆனால், கடவுள் ஒரே ஒரு நல்லவனை அந்த வஞ்சக கூட்டத்தில் வைத்து விடுகிறார். அவன் ஒருவன் மூலமாக நடக்கும் ஒரே ஒரு நன்மை பலரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
ரயில் பாலத்தில் குண்டு வைக்கிறது 15 பேர் கொண்ட ஒரு கூட்டம். அதை ஒரு நல்லவன் பார்த்து விடுகிறான். கூட்டத்தினர் சென்றவுடன் அவ்வழியே வந்த ரயிலை அவன் ஓடிச்சென்று தடுத்து நிறுத்தி விடுகிறான். தீமை அங்கே முறியடிக்கப்பட்டு விடுகிறது. இதேபோல் தான், இதுபோல், புரோசனன் கட்டிய அரண்மனையில் பணி செய்த ஒரு சிற்பிமட்டும் நல்லவனாக இருந்தான். ஒருநாள் அவன் பீமனைச்சந்தித்தான். பாண்டவச் செம்மலே! பலம் கொண்ட சிங்கமே! ஒரு செய்தியை உங்களிடம் சொல்ல வேண்டும், என்றான். சிற்பியே, விஷயத்தைச் சொல்லும், என்றான் பீமன். ஐயனே! இந்த மாளிகையைக் கட்டிய சிற்பிகளில் நானும் ஒருவன். புரோசனன் எங்களிடம் இதை அரக்கால் கட்டச் சொன்னான்.
நாங்கள் காரணம் கேட்டபோது, மன்னர் திருதராஷ்டிரன் உத்தரவு என்றான், என்றதும், மனதிடம் மிக்க, யாருக்கும் அஞ்சாத பீமனே அதிர்ந்துவிட்டான். பெரியப்பா ஏன் இப்படி செய்தார்? என்ற சிந்தனை ஒரு புறம் புரள சிற்பி இன்னும் சொன்னதைக் கேட்டு அவன் அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டான்.