Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி-39
அவர் சிசுபாலனிடம், சிசுபாலா, நாம் இருப்பது வேறொருவரின் நாட்டில்! இல்லாவிட்டால், உன் சிரத்தை இப்போதே அறுத்திருப்பேன். நாம் இருவருமே நகரின் வெளியே செல்வோம். அங்கு போர் செய்வோம். உனக்கு இன்றுதான் இறுதிநாள், என்றார். சிசுபாலன் சற்றும் மனம் கலங்காமல், போருக்கு புறப்பட்டான். கடும் போர் நடந்தது. சற்றும் சளைக்காமல் சண்டையிட்டான் சிசுபாலன். தகுந்த நேரத்தில், தன் சக்ராயுதத்தால் சிசுபாலனின் தலையை அறுத்தார் கிருஷ்ணன். உடனே, சிசுபாலனின் உயிர் பிரகாசம் மிக்க ஒளிப்பந்தாக மாறி, வைகுண்டம் சென்றடைந்தது. இதுகண்டு, போரை வேடிக்கை பார்த்த அரசர்கள் ஆச்சரியப்பட்டனர். கிருஷ்ணர், பூலோகத்தில் இருந்தபடியே வைகுண்டத்தை அனைவர் கண்ணிலும் காட்டியது பெறற்கரிய பேறாக அங்கு வந்தோர்க்கு அமைந்தது. அவர் அவைக்கு திரும்பியதும், எல்லா மன்னர்களும் அவரை நமஸ்கரித்தனர். சிலர் பரந்தாமா, கோவிந்தா என நாக்குளற பாடினார்கள். ஒருவழியாக யாகம் சிறப்பாக முடிந்தது. மன்னர்கள் ஊர் திரும்பி விட்டனர்.
துரியோதனன் ஊருக்கு திரும்பியவுடன் அவையைக் கூட்டினான். பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், சகுனி இவர்களுடன் மன்னர் திருதராஷ்டிரன், தாய் காந்தாரி மற்றும் அமைச்சர் பெருமக்கள் வீற்றிருந்தனர். துரியோதனன் அமைதியாக இருந்தான். ஆனால், அவன் முகரேகைகளின் குறிப்பைக் கொண்டே அவனது சிந்தனை என்ன என்பதை அங்கிருந்தோர் யூகித்து விட்டனர். அவர்களில் கர்ணன், என் அன்பு நண்பனே! தர்மன் இந்த உலகில் தானே ராஜாதி ராஜா என்பதை நிரூபித்து விட்டான். அவனது யாகத்திற்கு தேவர்களே திரண்டு வந்து விட்டனர் என்றால், அவனது மகிமையைச் சொல்ல வார்த்தைகள் ஏது? இனி அவனுக்கு நிகர் அவன் தான், என்றான். சகுனி எழுந்தான். கர்ணா! நீ சொல்வது தற்காலிகமானது. என் மருமகன் துரியோதனன் சிங்கம். தர்மன் யானை. இந்த சிங்கம் இன்று குகைக்குள் இருக்கிறது. பசித்திருக்கும் சிங்கம் வெளியே வந்தால் யானையின் கதி என்னாகும் என்பது தெரியும் தானே! என்றான், தனக்கே உண்டான நமட்டுச்சிரிப்புடன். துரியோதனின் தம்பி துச்சாதனன், மாமா! அந்த தர்மன் சந்திரன். என் அண்ணனோ சூரியன்.
சூரியனின் முன்னால் பகல் நேரத்து சந்திரனின் நிலைமையை கேட்கவா வேண்டும்! என ஏதோ உலக மகா தத்துவத்தை உதிர்த்து விட்டது போல் சிரித்தான். புகழ்ச்சியும், பொறாமையும் மனிதனை அழித்து விடும் இரண்டு பெரிய கருவிகள். சொந்த சித்தப்பா மகன் நன்றாக இருப்பதைக் காண துரியோதனனுக்கு பிடிக்கவில்லை. அந்த பொறாமைக்காரனுக்கு தூபம் போடுவது சொந்த தாய்மாமனும், தம்பியும். நண்பர்கள் தக்க நேரத்தில் தக்கதை எடுத்துச் சொல்ல வேண்டும். கர்ணன் அந்த விஷயத்தில் தவறிவிட்டான். இந்த வஞ்சகர்கள் பேசிய கவர்ச்சி வார்த்தைகள் துரியோதனனுக்கு மகிழ்ச்சியளித்தன. அற்பர்கள் அற்பமான வார்த்தையைக் கேட்டு மகிழ்வது இயற்கைதானே! இன்றுவரை அரசியல் உலகில் இதை நாம் பார்க்கத்தானே செய்கிறோம்! அவன் சபையோரிடம், அன்பர்களே! தர்மனின் பலம் அதிகரித்து வருகிறது. இதை இப்படியே விட்டுவிட்டால் அவன் மேலும் மேலும் உயர்ந்து அசைக்க முடியாத இடத்துக்கு போய்விடுவான்.
நான் இந்திரபிரஸ்தத்து அரண்மனையில் நுழைந்து, ராஜமண்டபத்தில் நுழைந்ததும் ஒரு இடத்தில் கிடப்பது பளிங்கு கல் என நினைத்து, தண்ணீர் தடாகத்தில் விழுந்து விட்டேன். இதைப் பார்த்து என் ஜென்ம விரோதி பீமனும், அவனோடு நின்ற திரவுபதியும் கேலி செய்து சிரித்தனர். என்ன செருக்கு அவர்களுக்கு! என் மனதை விட்டு எந்நாளும் அது நீங்காது. அந்த பீமனை நானும் அவமானப்படுத்த வேண்டும். அந்த திரவுபதியை மானக்கேட்டுக்கு ஆளாக்க வேண்டும். தர்மனை பதவியிலிருந்து இறக்க வேண்டும்,என்றான். துச்சாதனன் அவனிடம், அண்ணா! நாம் உடனே போருக்கு புறப்படுவோம். பாண்டவர்களின் வலதுகையான கிருஷ்ணன், இப்போது சல்லியனின் (நகுல சகாதேவரின் தாய்மாமன்) நாட்டுக்கு படையெடுத்துச் சென்றிருக்கிறான். சல்லியன் மகாவல்லவன். அவன் அவ்வளவு எளிதில் கிருஷ்ணனை விடமாட்டான். இந்த சமயத்தில் தர்மனை வெல்வது எளிது,என்றான். கர்ணன் எழுந்தான். நண்பா! என் வில்லுக்கு வேலை கொடு. பாண்டவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக வருவோரையும் சொர்க்கத்திற்கு அனுப்பி விடுகிறேன், என கர்ஜித்தான். சகுனி அவனை கையசைத்து அமரச் சொல்லிவிட்டு, துரியோதனா, உன் தம்பியும், கர்ணனும் நீ அழிவதற்கான யோசனையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
தர்மனை எதிர்த்து ஜெயிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அவனது தம்பி பீமன் கீழே சரிந்து விழுந்தால் கூட, அங்கே நடந்து கொண்டிருக்கும் நூறுபேர் நசுங்கி விடுவார்கள். அர்ஜூனனின் வில்பலத்தை திரவுபதியின் சுயம்வரத்தில் நாம் கண்டிருக்கிறோம். அப்படியிருந்தும், போர் என்பது இப்போது உசிதமல்ல. வஞ்சனையால் தான் அவர்களை வெல்ல முடியும். அதற்கு ஒரே வழி சூது. சூதாட்டம் நல்ல குடும்பங்களை அழித்து விடும் என்பது உலக நியதிதானே, என்றவாறு நமட்டு சிரிப்பு சிரித்தான். மாமாவின் யோசனை மருமகனுக்கு பிடித்து விட்டது. மாமா! இங்கே வாருங்கள். இந்த ஆசனத்தில் நீங்களும் அமருங்கள், என்று தன் ஆசனத்திலேயே அமர இடம் கொடுத்தான். சகுனிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. மருமகன் அருகே ஒன்றாக அமர்ந்து கொண்டான்.