Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 52
அப்படி மானாக வந்தது யார் தெரியுமா? தர்மரின் தந்தையான எமதர்ம ராஜா தான். குந்தி தேவிக்கு பாண்டுவால் குழந்தை இல்லாத நேரத்தில், அவள் தனக்கு தெரிந்த மந்திரத்தை எமதர்மராஜாவை நோக்கிக் கூற, அவரருளால் பிறந்தவர் தர்மர். அந்த வகையில், தன் மகனைக் காப்பாற்ற செய்த உபாயமே இது. எனவே, அதை பிடிக்கும் எண்ணத்தை அவர்கள் கைவிட்டனர். அப்போது மானாக வந்த எமதர்மராஜா, தன் வடிவத்தை விஷத் தண்ணீர் நிறைந்த குளமாக மாற்றிக் கொண்டார். பாண்டவர்கள் வெகுதூரம் ஓடி வந்ததால், அவர்களை தாகம் வாட்டியது. குளம் சற்று தள்ளியிருந்ததால், சகாதேவனை அனுப்பி தண்ணீர் எடுத்து வரும்படி கூறினர். ஆனால், அது ஒரு நச்சுக்குளம் என்பøதா சகாதேவன் அறிந்திருக்கவில்லை. அவன் வேகமாகச் சென்று களைப்பு நீங்க, நீரை அள்ளிக் குடித்தான். தண்ணீர் வாயில் பட்டதுமே, சுருண்டு விழுந்து இறந்தான்.
நீண்ட நேரமாக தம்பியைக் காணாததால் கலக்கமடைந்த தர்மர், நகுலனை அனுப்பினார். சகாதேவன் சுருண்டு விழுந்து கிடப்பதை கவனிக்காத நகுலன், தாக மிகுதியால் அவனும் தண்ணீரைக் குடித்து இறந்தான். இதையடுத்து அர்ஜுனன் சென்று முன்னவர்கள் போலவே இறந்தான். பின்னால் சென்ற பீமன், அவர்கள் இறந்து போனதற்கு, குளத்து நீர்தான் காரணம் என்பது அவனுக்கு புரிந்து விட்டது. கடும் தாகத்தையும் அடக்கிக் கொண்ட அவன், தம்பிமார்களை அணைத்துக் கொண்டபடியே அழுதான். இந்த தகவலை தர்மரிடம் போய் சொன்னால், நிச்சயமாக அவர் உயிர் விட்டுவிடுவார் என்பது அவனுக்கு புரிந்து விட்டது. எனவே மணலில், இந்த தண்ணீரில் விஷம் கலந்துள்ளது, ஜாக்கிரதை, என எழுதி வைத்துவிட்டு, அந்த விஷ நீரைக் குடித்தே இறந்து போனான். தம்பிகள் யாரும் வராததால், தாகம் தாளாத தர்மர் மயங்கி விழுந்து விட்டார்.
இந்த சமயத்தில் காளமுனிவரின் யாகம் தீவிரமாகியிருந்தது. யாக குண்டத்தில் இருந்து கிளம்பிய பூதம், முனிவரே! நான் உமக்காக என்ன செய்ய வேண்டும்? சொல்லும், என்றது. பூதமே! நீ சிறிதளவு நேரம்கூட தாமதிக்காமல் காட்டிற்குள் செல். அங்கே வசிக்கும் பாண்டவர்களை கொன்று விட்டு திரும்பி வா! என உத்தரவிட்டார். பூதம் அவரிடம், முனிவரே! நீ சொன்னபடி செய்கிறேன். ஒரு வேளை அந்த பாண்டவர்கள் காட்டில் இறந்து போயிருந்தாலோ எனது கண்களுக்குத் தெரியாமல் போய்விட்டலோ திரும்பவும் வந்து உம்மையே கொன்று விடுவேன்! சம்மதமா? என்றது. முனிவர் முக்காலமும் அறிந்தவர். கிருஷ்ண பக்தர்களான பாண்டவர்களுக்கு எதிராக யாகம் துவங்கும்போதே அவருக்கு தெரியும், தன் ஆயுள் முடியப் போகிறது என்று விதியின் பலனை அனுபவிக்க அவர் தயாராக இருந்தார். அப்படியே ஆகட்டும், போய் வா, என்றார். அவரிடம் விடை பெற்ற பூதம் பாண்டவர்களைத் தேடி காட்டுக்குள் சென்றது. விஷக்குளத்தின் அருகில் பாண்டவர்களில் நால்வர் இறந்து கிடப்பதைப் பார்த்தது. தர்மரைத் தேடியது. தர்மர் சற்று தூரத்தில், மயங்கி கிடப்பதைப் பார்த்து அவரும் இறந்துவிட்டதாகவே எண்ணிவிட்டது. தன்னால், கொல்லப்பட்ட வேண்டியவர் ஏற்கனவே இறந்து போனதால் முனிவரை கொன்றேயாக வேண்டிய நிர்பந்தம் பூதத்திற்கு ஏற்பட்டது.
முனிவரின் முன்னால் அது தோன்றியது. பூதமே! சென்ற காரியம் என்னாயிற்று என்று அதட்டினார் முனிவர். நல்லொழுக்கம் கவனமாக இருக்க வேண்டிய முனிவனே! என்னையா அதட்டுக்கிறாய்? துரியோதனனின் பேச்சைக் கேட்டு — புறம்பாக யாகம் செய்து என்னை எழுப்பி பாண்டவர்களை கொல்ல அனுப்பினாய். ஆனால் ஒருமுறை இறந்தவர்களை மறுமுறையும் கொன்று என்னால், எப்படி சாகடிக்க முடியும்? அவர்கள் ஒரு விஷக்குளத்தின் நீரைப் பருகி இறந்து கிடக்கிறார்கள். ஆகவே செய்த வினை செய்தவனை நோக்கி வந்திருக்கிறது. ஒழிந்து போ, என்று கர்ஜித்த பூதம் காளமா முனிவரின் தலையைத் துண்டித்தது. பின்னர் யாக குண்டத்திற்குள் சென்று மறைந்து விட்டது. ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பில்லி, சூனியம், மந்திரம், மாயம் என அலைபவர்களெல்லாம், யாரையாவது கெடுக்கவோ, அழிக்கவோ நினைத்தால், அது எதிர்மறையான விளைவுகளையே தரும். காளமாமுனிவர் தவசீலர். எல்லாம் அறிந்தவர். அந்த தவசீலனுக்கே இந்தக்கதியென்றால், சாதாரண மனிதர்களின் கதி என்னவாகும் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இது போன்ற தீய எண்ணங்கள், செய்கைகளை கைவிட்டு, நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை பாரதம் இந்த இடத்திலே நமக்கு கற்றுத் தருகிறது.
காளமாமுனிவரின் வாழ்க்கை முடிந்து விட்ட நிலையில், காட்டில் மயங்கிக்கிடந்த தர்மர் தென்றல் காற்று முகத்தில் பட்டு விழித்தார். தம்பிகளைத் தேடி புறப்பட்டார். குளக்கரையில் அவர்கள் இறந்து கிடப்பதைப் பார்த்து மனம் நொந்தார். ஓரிடத்தில் பீமன் எழுதி வைத்திருந்ததைப் படித்த அவர் அழுதார். தம்பிகள் இல்லாத உலகில் வாழ அவரும் விரும்பவில்லை. குளத்தில் இறங்கி, விஷநீரை கையில் அள்ளினார். அப்போது மகனே என்ற குரல் கேட்டு அண்ணாந்து பார்த்தார். வானில் இருந்து அசரீரி ஒலித்தது. தர்மபுத்திரனே! இந்த விஷநீரை குடிக்காதே. உன் தம்பிகள் நால்வரும் இங்கே வந்த போது, இந்த நீரைக் குடிக்காதீர்கள் என நான் சொன்னேன். அவர்கள் தாக மிகுதியால் அதைக் கேட்காமல் குடித்து இறந்தனர். நீயும் கேட்கமாட்டாய் என்பதை அறிவேன். இருப்பினும், நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு அதன் பிறகு இதைக் குடி, என்றது. சரி… உன் ஆசையை நிறைவேற்றிக் கொள். கேள்விகளைக் கேள், என்றார் தர்மர். கேள்விக்கணைகள் பாய்ந்தன.