மகாபாரதம் – பகுதி 75
பீஷ்மருக்கு அவர் நினைத்தாலொழிய மரணம் வராது என்ற வரத்தைப் பெற்றிருந்தார். யாராலும் அவரை வெல்லமுடியாது. இந்த நிலையில் அவரை எப்படி கொல்வது என்பதை அடிப்படையாக வைத்தே இந்த கேள்வியை கிருஷ்ணர் கேட்டார். இதற்கான பதில் அர்ஜுனனுக்கு தெரியவில்லை. எனவே கிருஷ்ணரே பீஷ்மர் அருகில் தனது தேரை ஓட்டிச் சென்றார். பீஷ்மரே! இது போர்க்களம். ஆனால் உமக்கு மட்டும் அழிவு கிடையாது என்பதை நான் அறிவேன்.
போர்க்களத்திற்கு வந்தபிறகு வெற்றி தோல்வி என்பதை ஏற்றுதான் ஆகவேண்டும். நீர் நினைத்தால் ஒரு நொடிப் பொழுதில் பாண்டவர் படையை நாசமாக்கிவிடுவீர் என்பதும் எனக்குத் தெரியும். இருப்பினும் போர் தர்மம் கருதி கேட்கிறேன். உமது உயிர் எப்படி போகும் என்பதை எனக்குச் சொல்ல வேண்டும், என்றார். அந்த மாயவனுக்கு எல்லாம் தெரியும் என்றாலும், பீஷ்மர் சற்றும் தயங்காமல் தனது முடிவைப் பற்றி அறிவித்தார்.
கிருஷ்ணா! ஒரு காலத்தில் என் தம்பிக்கு திருமணம் செய்வதற்காக, காசிராஜனின் மகள்களான அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்பவர்களைக் கடத்தி வர வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. அவர்களில் அம்பா வேறொருவனைக் காதலித்தாள். அதனால் நான் அவளை விடுவித்துவிட்டேன். ஆனால், அந்தக் காதலனோ, பிற ஆடவனால் கடத்தப்பட்ட அவளைத் திருமணம் செய்யமாட்டேன் என சொல்லிவிட்டான். இதனால் ஆத்திரமடைந்த அம்பா, என்னிடமே திரும்பி வந்து, என்னையே திருமணம் செய்யும்படி மன்றாடினாள்.
நான் என் தந்தைக்காக பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டிருந்ததால், அவளைத் திருமணம் செய்ய மறுத்து விட்டேன். என்னை பேடி என திட்டிய அவள், உன் அழிவு ஒரு பேடியாலேயே (ஆணும் பெண்ணும் அல்லாத வடிவம் கொண்டவர்) அமையும் என சபித்து விட்டாள். பின்னர் அவள் தவமிருந்து, சிகண்டி என்ற பெயரில் ராஜகுமாரனாகப் பிறந்திருக்கிறாள். அவள் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவள்.
சிகண்டி என்னை எதிர்த்துப் போரிட்டால் நான் ஆயுதத்தைக் கையால் தொடமாட்டேன். அந்த சமயத்தில் என்னை அர்ஜுனன் வீழ்த்தி விடுவான். இதுவே, என் இறப்பின் ரகசியம், என மறைக்காமல் சொன்னார். அதன் பிறகு பீஷ்மர் மிகுந்த பணிவுடன், கிருஷ்ணா! ஏது மறியாதவர் போல் ஏன் நீர் என்னிடம் இதையெல்லாம் கேட்க வேண்டும். என்னைக் கொல்லும் வழி உமக்கா தெரியாது. அது மட்டுமல்ல கிருஷ்ணா! நீ தர்மத்தின் பக்கம் இருக்கிறாய். நீ எந்தப் பக்கம் இருக்கிறாயோ, அந்தப் பக்கம் ஜெயிக்கும் என்ற சிறு உண்மையைக் கூட அறியாதவனா நான்! எனவே பாண்டவர்கள் தான் ஜெயிக்க போகிறார்கள். தர்மனின் அரசாட்சி இந்த பூமியில் விரியப் போகிறது, என்றார்.
இதுகேட்ட கிருஷ்ணர் மகிழ்ந்தார். அடுத்து, துரோணரை வீழ்த்துவது பற்றி அவரிடம் ஆலோசனை கேட்கச் சென்றார் கிருஷ்ணர். துரோணரே! எல்லையற்ற வீரம் பொருந்திய நீர், கவுரவர்களின் பக்கம் இருக்கும்வரை பாண்டவர்களுக்கு வெற்றியில்லை என்பதை நான் அறிவேன். உம்மை அஸ்திரங்களால் அழிக்க முடியாது என்பதை நான் அறிவேன். பாண்டவர்கள் ஜெயிக்க வேண்டும், தர்மம் தழைக்க வேண்டும் என்பதை நீர் ஒப்புக்கொள்வீர். ஆனால், நீர் மூவுலகையும் அளந்த திருமாலாலும் வெல்ல முடியாதவர் என்ற பெருமையைப் பெற்றவர். பாண்டவர்கள் ஜெயிக்க ஒரு வழி சொல்லும், என்றார்.
அந்த மாயவனின் மன ஓட்டத்தை உணர்ந்த துரோணர், பரந்தாமா! நான் என் மகன் அஸ்வத்தாமனின் மீது கொண்ட அன்பை நீர் அறிவீர். அவன் இந்திரனையும் ஜெயிக்கும் வல்லமை வாய்ந்தவன். போர்க்களத்தில், ஒரு வேளை அவன் இறந்து விட்டான் தகவல் தெரிந்தால், நான் ஆயுதங்களைத் தொடாமல் அப்படியே ஸ்தம்பித்து விடுவேன். அப்போது திரவுபதியின் சகோதரன் திருஷ்டத்யும்நன் என் மீது பாணங்களைத் தொடுப்பான். நானும் மடிவேன் என்றார்.
பின்னர் துரோணரிடம் விடைபெற்ற கிருஷ்ணர், போரைத்துவங்க பாண்டவர்களுக்கு ஆணையிட்டார். இன்றும் மகத்தானதாகப் பேசப்படும் குரு÷க்ஷத்ர யுத்தம் துவங்கியது. பாண்டவர் படைகள் ஆரவாரத்துடன் கவுரவப் படைகளை எதிர்த்தன. இரண்டு பக்கமும் பலத்த சேதம் ஏற்பட்டது. அர்ஜுனன் பீஷ்மன் மீது அம்புகளை ஏவினான். அப்போது, இருபுறமும் நின்ற படைகள் அவர்களைப் பாதுகாக்கும் விதத்தில் அரண் அமைத்து தருகின்றன. குறிப்பாக பீஷ்மரை சல்லியன், சகுனி, துரியோதனனின் தம்பிகள் ஆகியோர் பாதுகாத்தனர்.
அப்போது, பீமன் அர்ஜுனனுக்கு துணையாக வந்தான். ஒரே நேரத்தில் மூன்று அம்புகளை பிரயோகித்து, பீஷ்மரின் பனைக் கொடியை சாய்க்க எத்தனித்தான். மேலும் 9 அம்புகளை பீஷ்மர் மீது எய்தான். அதன் வலிமை தாங்காத சல்லியனும், சகுனியும் பின்வாங்கினர். இதைப் பயன்படுத்தி பீஷ்மரின் நான்கு தேர்க்குதிரைகள் மீது அர்ஜுனனின் மகன் அபிமன்யு அம்புகளைத் தொடுத்துக் கொன்றான்.
இந்நேரத்தில், பாண்டவர்களின் அஞ்ஞானவாசத்தின் போது, அவர்கள் மறைந்து தங்கியிருந்த விராடதேசத்து மன்னன் விராடனின் மகன் உத்தரகுமாரன், சல்லியனை எதிர்த்து கடுமையாகப் போரிட்டான். பயந்த சுபாவமுடைய இவனை அர்ஜுனன் தான் பெரிய வீரனானாக்கினான் என்பது தெரிந்த விஷயம். சல்லியன் மீது தொடர்ந்து அம்புகளைப் பாய்ச்சி காயப்படுத்தியதால் கோபமடைந்த சல்லியன், அவன் மீது ஒரு வேலை எறிந்தான்.
அது உத்தரகுமாரனின் மார்பைப் பிளந்தது. பாண்டவர்களுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாக உத்தரகுமாரனின் மரணம் அமைந்தது. பாண்டவர் சேனை தங்கள் பலத்தை இழந்தது போல உணர்ந்து பின்தங்கியது. இதைப்பயன்படுத்தி துரியோதனனின் படைகள் ஆகரோஷமாகப் போரிட்டு பாண்டவர் படைகளை விரட்டின. தங்கள் படையின் பின்னடவைக் கவனித்த பீமன் ஆவேசம் கொண்டான். படையினர் பின்னேறினாலும், அவன் சற்றும் தயங்காமல் முன்நோக்கிச் சென்றான்.