மகாபாரதம் பகுதி-86
துரியோதனனுக்கு இப்போது இக்கட்டான நிலை. ஒரு சிறு பையன், இத்தனை பேரை அழிக்கிறான் என்றால், துரோணர், கிருபாச்சாரியார், கர்ணன், அஸ்வத்தாமன், சகுனி போன்ற மாபெரும் சக்திகளையெல்லாம் புறமுதுகோடச் செய்கிறான் என்றால், அர்ஜுனன், பீமன் போன்ற மகாசக்திகளுக்கெல்லாம் நாம் எப்படி பதில் சொல்லப்போகிறோம் என்ற கவலையுடன் நின்ற போது, மாவீரன் கர்ணன் அவன் முன்னால் வந்தான். துரியோதனன் அவனிடம், கர்ணா! அபிமன்யு நம்மவரை துவம்சம் செய்கிறான். இப்போது அர்ஜுனன் அவன் அருகில் இல்லை. அவனும், அவனோடு சேர்ந்து விட்டால், நம் தோல்வி எழுதப்பட்டதாக ஆகி விடும், ஏதாவது செய். அபிமன்யுவைக் கொல். இதைத்தவிர நான் உன்னிடம் சொல்வதற்கு வேறு ஏதுமில்லை, என்றான். கர்ணனும் அவனது கட்டளையை ஏற்று, அபிமன்யு முன்னால் சென்றான். தன் பலம் முழுவதையும் திரட்டி, அபிமன்யுவிடம் சண்டையிட்டான். அபிமன்யு அப்போது ஒரு தேரில் இருந்தான். அந்த தேரை நொறுக்கிய கர்ணன், சாரதியையும் கொன்றான். தேரிழந்து நின்ற அபிமன்யு களத்தில் குதித்த போது, அபிமன்யு அடங்கி விட்டதாகக் கருதிய துச்சாதனின் மகன் துச்சனி அபிமன்யுவின் மீது ஒரு அம்பை விட்டான். அதை அடித்து நொறுக்கிய அபிமன்யு துச்சனியின் தலையைக் கொய்தான். இதைப்பார்த்த துரோணர் கோபத்துடன் அபிமன்யுவைத் தாக்கவே, ஆச்சாரியரே! தாங்கள் எத்தனை முறை தான் என்னிடம் தோற்று ஓடுவீர்கள். ஒருவேளை என்னிடம் தோற்றோடுவதே தங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்றால், அந்த மகிழ்ச்சியை நான் மீண்டும் மீண்டும் தங்களுக்குத் தருவேன், எனக் கேலி செய்து சிரித்தான்.
இந்த கேலி துரோணரின் கோபத்தை மேலும் கிளறவே, அவர் அர்த்த சந்திர பாணம் ஒன்றை அபிமன்யு மீது தொடுத்தார். அந்த பாணம் அபிமன்யுவுக்கு மிகுந்த சோதனையைத் தந்தது. பல சாகசங்களைச் செய்ததும், பல்லாயிரக்கணக்கான வீரர்களை வீர சுவர்க்கம் அனுப்பியதுமான அந்தச் சிறுவனின் வலது கை வாளோடு சேர்த்து துண்டிக்கப்பட்டு தரையில் விழுந்தது. இதோடு அபிமன்யு தொலைந்தான் என்று எல்லாரும் எதிர்பார்த்த வேளையில், இவன் தெய்வமோ என்று ஆச்சரியப்படும் வகையில், கீழே கிடந்த தன் தேர்சக்கரத்தை இடது கையால் எடுத்த அபிமன்யு, தன் தாய்மாமன் கிருஷ்ணர் தனக்கு கற்றுத் தந்த மந்திரம் ஒன்றைச் சொல்லவே, அந்த சக்கரம் சக்ராயுதம் போல் அவன் கையில் சுழன்றது. துரோணரும், மற்ற பகைவர்களும் விட்ட அம்புகளை அடித்து நொறுக்கியது. துரோணர் அவனிடமிருந்து தப்பித்தால் போதுமென தோல்வி முகத்துடன் திரும்பி விட்டார். இப்போது துரியோதனன் ஜயத்ரதனை (சிந்துதேச அரசன்) அழைத்து, வீரனே! உனக்கு சிவபெருமான் அளித்த கதாயுதத்தால் அபிமன்யுவைக் கொன்று விடு, என்று கட்டளையிட்டான். ஜயத்ரதன் அந்தக் கதாயுதத்துடன் அபிமன்யு முன்பு வரவே, அவன் தன் கையிலுள்ள சக்கரத்தை வீசிவிட்டு, தனது கதாயுதத்தை எடுத்தான். இடது கையில் வைத்திருந்தாலும் கூட இருவரும் சமபலத்துடன் மோதினர். பலமுறை ஜயத்ரதன் தோல்வியின் விளிம்பிற்குச் சென்று திரும்பினான். மிகவும் சோர்ந்து போனான். ஆனால், ஒரு கட்டத்தில் அபிமன்யு சோர்வடைந்த நேரமாகப் பார்த்து அவனது கழுத்தில் கதாயுதத்தால் ஓங்கி அடிக்க, அபிமன்யுவின் தலை துண்டிக்கப்பட்டது. பதிமூன்றாம் நாள் போர் அபிமன்யுவுக்கு எமனாக அமைந்து விட்டது. இது கண்டு தர்மர், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோர், புதல்வனே! நீ இறந்தும் நாங்கள் உயிரை வைத்திருக்கிறோமே! உன்னை ஜயத்ரதன் வெல்லவில்லை. சிவன் கொடுத்த கொன்றை மாலையும், அவரது கதாயுதமுமே வென்றிருக்கிறது, என்றார். தர்மரோ மூர்ச்சித்தே விழுந்து விட்டார். துரியோதனன், கர்ணன், சகுனி, ஜயத்ரதன் ஆகியோர் இந்தச் சிறுவனின் இறப்பை பெரும் விழாப் போல் போர்க்களத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கிருஷ்ணர் இதையறிந்தார். இந்த விஷயம் அர்ஜுனனுக்குத் தெரிந்தால் அவன் புத்திர சோகத்தால் இறந்து விடுவான் என்பதால், இந்திரனை வரவழைத்தார்.தேவேந்திரா! உன் மகன் அர்ஜுனனை புத்திர சோகத்தில் இருந்து காக்க வேண்டியது உன் பொறுப்பு, என்றார். அவனும் அதற்குரிய ஏற்பாட்டைச் செய்வதாகச் சொல்லி, அவரை வணங்கி ஒரு முனிவராக வேடமெடுத்தான். அவன் களத்திலேயே தீ மூட்டி அதற்குள் விழப்போவது போல் நடித்தான். கிருஷ்ணர் அர்ஜுனனிடம், வில் வித்தையில் சிறந்தவனே! இந்த முனிவர் தன் மகனை இழந்து விட்டார். புத்திர சோகத்தால் இந்தத் தீயில் விழுந்து உயிர் விடப்போவதாகச் சொல்கிறார். அவரைக் காப் பாற்று, என்றான். அர்ஜுனனும் அவ்வாறே சென்று, முனிவரே! மனிதர்கள் பிறப்பதும் இறப்பதும் இயற்கைதானே! இதற்காக நீர் இறக்க வேண்டுமா? நீர் உயிருடன் இருந்தால், இன்னும் புத்திரர்களைப் பெறவும் வாய்ப்பிருக்கிறது. வாழ்வின் உண்மையை பிறருக்கு எடுத்துச் சொல்லும் முனிவரான நீரே இப்படி செய்யலாமா? மேலும், புத்திரர்கள் இறந்து விட்டால், எந்தப் பெற்றவராவது அவர்களோடு இறந்து போனதுண்டா? என்றான். அப்போது இந்திரனாகிய முனிவன், ஏ அர்ஜுனா! பிள்ளைப்பாசம் பற்றி உனக்கென்ன தெரியும்? இருப்பினும், நான் உன் சொல் கேட்கிறேன். உனக்கு ஒருவேளை இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் நீயும் சாகக்கூடாது. அந்த உறுதிமொழியைத் தருவாயா? என்றான். அர்ஜுனன் நடந்துள்ள விபரீதம் புரியமால், சரி என சத்தியம் செய்து கொடுத்தான்.
பின்னர் முனிவர் அங்கிருந்து சென்று விட்டார். இப்போது தான் கிருஷ்ணர் உண்மையை உடைக்க முற்பட்டார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது. இது கண்ட அர்ஜுனன் கலங்கி விட்டான். கண்ணா! மைத்துனரே! உமது கண்களில் கண்ணீரா? ஏதோ விபரீதம் நடந்துள்ளதோ? என்று மனம் படபடக்க அவரை ஏறிட்டுப் பார்த்தான்.