மகாபாரதம் பகுதி-88
கடோத் கஜனுக்கு குழப்பமும் கோபமும் மேலிட்டது. இந்தப் பெரியப்பாவுக்கு என்னாச்சு! யாராவது எதிரியிடம் போய், நான் இன்னின்ன செய்யப் போகிறேன் என்று சொல்வார்களா? அவன் சுதாரித்துக் கொள்ள மாட்டானா? என்று யோசித்தவன் கோபத்தைக் குறைத்துக் கொண்டு, பெரியப்பா! தாங்கள் சொல்வது ஏற்றுக்கொள்கிற மாதிரி இல்லை. நம் வலிமை பற்றி எதிரிக்குத் தெரிந்தால் அது அவனுக்கு சாதகமாக அல்லவா ஆகி விடும். நம் பலத்தை நாமே குறைத்துக் கொள்ள அனுமதிக்கலாமா? அதிலும் அபிமன்யுவை வஞ்சகமாகக் கொன்ற கொலைகாரர்கள் அவர்கள்? அவர்களை அழிப்பதற்குரிய ஆயுதங்களைப் பெறுவதற்காக கிருஷ்ணார்ஜுனர் சிவபெருமானை தரிசிக்கச் சென்றிருக்கும் இவ்வேளையில், அந்த ரகசியத்தை வெளியிடுவது என்பது அறிவீனமாக இருக்குமோ? என்று பெரியப்பாவைச் சற்று கடுமையாகவே கேட்டுவிட்டான். தர்மர் சிரித்தார். இந்த உலகத்திலேயே தர்மரைப் போன்ற புண்ணியவான்களைப் பார்ப்பது அரிது. அவரது வரலாறு, மனிதாபிமானம் என்பது செத்துப்போய் விட்ட இக்காலத்தில் அனைவராலும் தெரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும். அவர் சொன்னார். மகனே கடோத்கஜா! பீமனின் புத்திரனான புஜபலம் மிக்க நீயே இப்படி பேசலாமா? எந்த ரகசியம் வெளியே கசிந்தால் என்ன? எனக்குத்தான் நீ பிள்ளையாக இருக்கிறாயே! நீ என்னைக் காப்பாற்றாமல் விடுவாயா என்ன? உன் பராக்கிரமம் என்னைக் காப்பாற்றும். ஒன்றைப் புரிந்து கொள்! நான் தர்மபுத்திரன். தர்மத்தைக் காக்கும் நிலையில் இருப்பவன். எதிரிக்கு நம் பலத்தை சொல்லி, அதன்மூலம் அவனை வெற்றி கொள்வதே தர்மமாகும். தர்மத்திற்கு புறம்பாக நடந்து வஞ்சகரைக் கொன்றால் பாவத்தையும் சேர்ப்போம், வஞ்சகம் புரிந்து விட்டோம் என்று எதிர்கால உலகம் நம்மைத் துõற்றவும் செய்யும். பாண்டவர்கள் அத்தகைய அவச்சொல்லுக்கு ஆளாகக்கூடாது. பொய் சொல்லாதவனே வாழ்வில் வெற்றி பெறுவான், என்றார். சொல்லி அடி என்று சொல் வார்களே…அதுதான் தர்மரின் வழி. இதைக் கேட்ட கடோத்கஜன் பெரியப்பாவின் வீர நெஞ்சைப் புரிந்து கொண்டான். அந்தப் பெருமையுடன் வேல் ஒன்றை ஏந்திக் கொண்டு, துரியோதனின் பாசறைக்குச் சென்றான்.
அவனை பாசறை வாசலில் இருந்த காவலர்கள் தடுத்தனர்.
யார் நீ? என்றனர். கடோத்கஜனுக்கு இடி போன்ற குரல் இயற்கையாகவே உண்டு. அவன் சாதாரணமாக பேசினாலே எட்டு ஊருக்கு கேட்கும். அதிலும், இப்போது எதிரியின் வாசலில் நிற்கிறான். ஆக்ரோஷமாக ஒரு சிரிப்பை உதிர்த்தபோது, அந்த இடமே அதிர்ந்தது. காவலர்களின் கையில் இருந்த வேல் நடுக்கம் காட்டியது. அடேய் காவலர்களே! நான் தான் கடோத்கஜன். பீமபுத்திரன். நான் துரியோதனனுக்கு என் பெரியப்பா தர்மரிடமிருந்து ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறேன், என்றான். துரியோதனனின் காதில் இது விழுந்தது. அவன் அவனை உள்ளே அனுப்ப உள்ளிருந்தே ஆட்களை அனுப்பினான். கடோத்கஜன் துரியோதனன் முன்னால் வந்து, பெரியப்பா சொல்லியனுப்பியதை தெரிவித்தான். அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனுக்கு நாளை அழிவு உறுதியாகி விட்டது என்பதை அறிவித்தான். உடனே துரியோதனன், என் மகன் லக்ஷணகுமாரனை அபிமன்யு கொன்றான். என் உற்றார், உறவினர் நண்பர்களைக் கொன்றான். அவனை நாங்கள் கொன்றோம். என் மகன் இறந்ததற்காக நான் எந்த சபதத்தையும் எடுக்கவில்லை. ஆனால், அர்ஜுனன் இத்தகைய சபதம் எடுத்துள்ளது எந்த வகையில் நியாயம்? நாங்கள் ஒன்றும் கோழைகளல்ல. அபிமன்யுவைப் போலவே உன் சித்தப்பன் அர்ஜுனனும் ஜயத்ரதனின் அம்பால் இறப்பான். சிவனால் தரப்பட்ட ஆயுதங்கள் அவனை ஏதும் செய்ய முடியாது. மேலும், நாளை நடக்கப்போவதை பற்றி யாருமே கணிக்கமுடியாது, என்று வீராவேசமாகப் பேசியதுடன் கேலி சிரிப்பும் சிரித்தான். அவனருகில் இருந்த கர்ணன் இன்னும் கேலியாக, என் நண்பனின் மகன் கடோத்கஜன், சல்லியன் மைந்தன், சகுனியின் புத்திரர்கள் ஆகியோரெல்லாம் அழிந்தனர். உங்கள் தரப்பில் அபிமன்யு மாண்டான். உங்கள் தரப்பு உயிர்கள் உயர்ந்தது போலவும், எங்கள் உயிரெல்லாம் ஏதோ தீண்டப்படத்தகாததாகவும் பேசுகிறாயே! இது என்ன நியாயம்? ஒருவேளை பாண்டவர்கள் அழிந்து போனால், வாரிசு யாருமில்லையே என்று எண்ணி அர்ஜுனன் சபதம் செய்திருக்கிறானோ? என்று கேட்டான்.
துõதனாக வந்த தன்னைப் பரிகாசம் செய்ததை கடோத்கஜனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பீமனின் பிள்ளையான அவன் இயற்கையாகவே கோபக்காரன். அடேய் மூடர்களே! என்று கோபமாக பேச்சைத் துவங்கிய அவன், உங்கள் தலையைக் கொய்து சதையைப் பிய்த்தெடுக்க என் சித்தப்பா போர்க் களத்துக்கு வர வேண்டிய அவசியமில்லை. நான் தனித்து நின்றே அதை முடிப்பேன். தர்மராஜரான என் பெரிய தந்தை தர்மம் தவறாமல் நடக்க என்னை உங்களிடம் அனுப்பினார். நீங்களோ பரிகாசமாகப் பேசுகிறீர்கள்? நான் ஒரு ராட்சதன் தான்! எங்கள் இனத்தவர் கூட உடன் பிறந்தவர்களுக்கும், தாயாதிகளுக்கும் துரோகம் நினைக்கமாட்டார்கள். நீங்களோ வஞ்சனையாக சூதாடி என் தந்தைமாரின் ராஜ்யத்தை சூறையாடினீர்கள். ராட்சதர்களை விட கேடு கெட்ட ஈன ஜென்மங்களே! என்னைப் போன்ற ராட்சதன் உடன்பிறந்தவனின் மனைவியின் இடுப்புச் சேலையை அவிழ்க்க மாட்டான். நீங்களோ தமயன் மனைவியின் முந்தானையைக் களைந்த காமாந்த பிசாசுகள். நீங்கள் ஏதோ தேவர்கள் போல் பிதற்றுகிறீர்கள்! ராட்சதர்களை விட கொடிய பிசாசுகள் நீங்கள், என்று பதிலுக்கு பரிகாசம் செய்து விட்டு அவர்களின் பதிலுக்கு காத்திராமல் புறப்பட்டான். உடனே துரோணரை அழைத்தான் துரியோதனன். ஜயத்ரதனை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அவ்வாறு நடந்து விட்டால், அர்ஜுனன் தானாகவே மடிந்து போவான். ஒரே கல்லில் இரண்டு மாங்காய், என்றான் துரியோதனன். துரோணர் சிரித்தார்.