மகாபாரதம் பகுதி-89
துரியோதனா! பிரம்மன் கூட சொன்ன சொல்லை சில சமயங் களில் காப்பாற்ற முடியாமல் போய்விடும். அதைப் போலத் தான் நானும்! ஜயத்ரதனைக் காப்பாற்றுவேன் என்று உன்னிடம் வாக்களிப்பதை விட செயலில் நிரூபிக்கவே விரும்புகிறேன், என்றதும், துரியோதனன் படை வீரர்களை நோக்கி, மிக மிக பணிவாக, நாளை ஒரே ஒரு நாள். ஜயத்ரதனைப் பாதுகாத்து விட்டால் அர்ஜுனன் அழிவான். அதன்பின் வெற்றி நம் பக்கம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள், என வேண்டிக்கொண்டான். கர்ணன், அஸ்வத்தாமன், துரியோதனனின் தம்பி துமார்ஷணன் உள்ளிட்ட எல்லா மாபெரும் வீரர்களும் ஜயத்ரதனைப் பாதுகாப்பதாக உறுதியளித்தனர். இதனிடையே கிருஷ்ணரும், அர்ஜுனனும் கயிலாயத்தில் இருந்து வந்து சேர்ந்தனர். கடோத்கஜனும் திரும்பி வந்து துõது விபரத்தை தர்மரிடம் சொன்னான். பதினான்காம் நாள் போர் துவங்கியது. அன்று அர்ஜுனனுக்கு மிகப்பெரும் சோதனை நாள். துரியோதனனுக்கும் இக்கட்டான நாள். ஜயத்ரதன் பலத்த பாதுகாப்புடன் களத்தில் நின்றான். துரோணர் அவனுக்கு அளித்திருந்த பாதுகாப்பு கண்டு, இந்தளவுக்கு சேனையை வழிநடத்திச் செல்வதற்கு துரோணரை விட்டால் ஆளில்லை. இன்று பகலுக்குள் அர்ஜுனன், ஜயத்ரதனைக் கொல்வான் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. வானத்தில் இருந்த தேவர்களே சொன்னார்களாம். ஆனால், நிலைமை என்னானது தெரியுமா? கிருஷ்ண பகவான் திறமையாக தேரைச் செலுத்த, அர்ஜுனன் விட்ட கோடிக்கணக்கான பாணங்களை ஒரே சமயத்தில் விடுக்க, துரியோதனனின் படையில் முன்னால் நின்ற துச்சாதனன் உள்ளிட்டவர்கள் பயந்தோடினர். துரோணர் அருகில் போய் நின்று கொண்டனர். துரோணர் சற்றும் கலங்காமல் அர்ஜுனன் மேல் அம்புமழை விடுத்தார். இருதரப்புக்கும் பயங்கர சண்டை நடந்தது. அவரவர் விட்ட அம்புகள் மோதி நொறுங்கினவே தவிர, இருவரில் ஒருவருக்கும் ஒரு காயம் கூட ஏற்படவில்லை. நேரமோ பறந்து கொண்டிருந்தது. கிருஷ்ணர், காலம் செல்கிறதே என்பதில் அக்கறையாக இருந்தார். அர்ஜுனன் படைகளை சிதறடித்தானே தவிர, அவன் நின்ற இடத்துக்கும், ஜயத்ரதன் நின்ற இடத்துக்கும் இருபது யோஜனை துõரம் இருந்தது. எனவே, அவன் நின்ற இடத்தை நோக்கி தைரியமாக தேரைச் செலுத்தினார்.
அப்போது துரோணர் தன் தேரை குறுக்காக கொண்டு வந்து நிறுத்தி இடைஞ்சல் செய்தார். அப்போது அர்ஜுனன், குருவே! நான் உமது திருப்பாதங்களை தலையில் தாங்கும் சிறியவன். என் சபதம் நிறைவேற எனக்கு அருள வேண்டும். உம்மோடு சண்டையிட எனக்கு தருணம் இல்லை. மேலும், உம் மீது இக்கணத்தில் நான் தொடுக்கும் ஒவ்வொரு அம்பும் தேவர்கள் மீது அம்பு தொடுப்பதற்கு சமமானது. நீரோ மகாதேவன், என்று புகழாரம் சூட்டினான். இந்த பணிவான வார்த்தைகள் துரோணரை மிகவும் கவர்ந்தன. அவர் அர்ஜுனனின் ரதத்துக்கு வழிவிட்டார். ஆனால், சற்று துõரத்தில் நின்ற கர்ணன் அவர்களை வழிமறித்தான். கர்ணனைச் சுற்றி நின்றவர்களின் தலைகளையெல்லாம் அர்ஜுனன் ஒருவர் விடாமல் பந்தாடினான். கர்ணன் நீண்ட நேரம் அர்ஜுனனிடம் தாக்குப்பிடித்தான் என்றாலும், ஒரு கட்டத்தில் அவனும் தோற்று ஓடினான். அப்போது வருணனின் மகனான சுதாயு, அர்ஜுனனை மறித்து சண்டையிட்டான். அவன் அழியாவரம் பெற்றவன். அர்ஜுனன் விடுத்த மந்திர அம்புகள் கூட அவனை ஏதும் செய்ய முடியவில்லை. இதைப்பயன்படுத்திக் கொண்ட சுதாயு யாரையும் எளிதில் அழித்து விடும், தனது கதாயுதத்தை அர்ஜுனன் மீது எறிந்தான். அது அர்ஜுனன் மீது பட்டால் நிச்சயம் அவன் இறந்து விடுவான். கருணைக்கடலான கிருஷ்ண பரமாத்மா, உலகத்தில் தர்மம் நிலைக்க வேண்டுமென்பதற்காக நடத்தப்படும் இப்போரில், பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக, தனது மார்பில் தாங்கிக் கொண்டார். தான் வீசிய கதாயுதம், கிருஷ்ணர் மீது பட்டுவிட்டதே என சுதாயு வருந்தினான். பகவானின் அம்சமான நாராயணன் மீது தன் கதாயுதம் பட்டதே என வருந்திய அவன், வருத்தம் தாளாமல் சுருண்டு விழுந்து இறந்து விட்டான். இதுகண்டு அர்ஜுனனுக்கு ஆச்சரியம். கண்ணா! யார் இவன்? நீர் தான் சொல்லியருள வேண்டும்? என்றான். தேர் வேகமாக அவ்விடத்தை விட்டு செல்ல, கிருஷ்ணர் அந்தக் கதையை ஆரம்பித்தார்.
அர்ஜுனா, இவன் பெயர் சுதாயு. வருணனின் புத்திரன். இவனது தாயார் பன்னவாதை. வருணன் தன் மகனுக்கு பலம் மிக்க ஆயுதங்களையும், யாராலும் அழியாத வரத்தையும் அளித்தான். ஆனால், பூலோகத்தில் பிறக்கும் யாருக்கும் மரணம் உரியதென்பதால், விதிவிலக்காக, யாரிடமாவது ஆயுதமில்லாத நிலையில், அவன் மீது ஆயுதங்களை வீசினான் என்றால், அந்நிமிடமே மடிவான் என்ற நிபந்தனையும் அவனுக்கு விதிக்கப்பட்டிருந்தது. இப்போது ஆயுதமில்லாத என் மீது அந்த கதாயுதம் பட்டது. அதைப் பார்த்ததுமே அவன் மடிந்தான், என்றான். கிருஷ்ணரின் கருணையை எண்ணி அர்ஜுனன் வியந்தான். அப்போது, கிருஷ்ணர் ஓட்டிய தேரின் வேகம் குறைந்தது. மைத்துனரே! தேரின் வேகம் ஏன் குறைந்தது? மதியவேளை நெருங்கப் போகிறதே! ஜயத்ரதனை நாம் எட்டி விடலாமா? என அர்ஜுனன் கேட்டான். மாயக்கண்ணன் அழகாகப் பதில் சொன்னான். நான் தேரோட்டி. குதிரைகள் செல்ல மறுத்தால் நான் என்ன செய்வேன்? இவ்வளவு நேரமும் ஓடிக்களைத்து விட்ட இக்குதிரைகளுக்கு தாகம் ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் குடித்தால் மீண்டும் வேகம் பிடிக்கும், என்றார். உடனே அர்ஜுனன் தன்னிடமிருந்த வருணாஸ்திரத்தால் ஒரு பொய்கையை தரையில் உருவாக்கினான். குதிரைகள் தண்ணீர் குடிக்கத் துவங்கின. கண்ணனும் அந்நேரத்தில் தாக மேலீட்டால் தண்ணீர் குடிக்க குளத்திற்குள் இறங்கினார். அர்ஜுனன் பதைபதைப்புடன் இருந்தான். நேரம் பறந்து கொண்டிருந்தது.