மகாபாரதம் பகுதி-90
கிருஷ்ணரை அர்ஜுனன் வேகப் படுத்திக் கொண்டிருந்தான். விரைவாக தண்ணீர் குடித்துவிட்டு வரும்படி அவசரப்படுத்தினான். இவர்கள் குளம் உண்டாக்கி தண்ணீர் குடிப்பதை பார்த்த எதிரி வீரர்கள் கூட்டமாக வந்து சூழ்ந்தனர். அவர்களை எல்லாம் அர்ஜுனன் வீர சொர்க்கம் அனுப்பினான். இதையடுத்து துரியோதனன் தனது தேரில் வேகமாக அர்ஜுனனை நோக்கி வந்தான். அர்ஜுனனுக்கு ஆச்சரியமாக போய் விட்டது. கிருஷ்ணா! இந்த துரியோதனன் என் கண்களில் இன்று படவே இல்லை. வெகுதுõரத்தில் நின்று கொண்டிருந்தான். ஆனால், இப்போது என்னை நோக்கி தைரியமாக வருகிறான் என்றால் ஏதோ காரணம் இருக்க வேண்டும். அது என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே,என கேட்டான். கிருஷ்ணர் தன் ஞானதிருஷ்டியால் அதை அறிந்து அர்ஜுனனிடம் சொன்னார். அர்ஜுனா! முன்னொரு காலத்தில் பிரம்மா தேவேந்திரனுக்கு ஒரு கவசத்தை கொடுத்தார். அந்த கவசத்தை யார் அணிந்துள்ளார்களோ அவர்களை வெல்ல யாராலும் முடியாது. இந்த கவசம் தேவேந்திரனிடமிருந்து துரோணாச்சாரியாருக்கு தரப்பட்டது. துரோணாச்சாரியார் அதை துரியோதனனுக்கு பரிசாக கொடுத்துள்ளார். அந்த கவசத்தை அணிந்து கொண்டே துரியோதனன் உன்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். அவனை அவ்வளவு எளிதில் அழிக்க இயலாது, என்றார். துரியோதனன் அர்ஜுனன் அருகில் நெருங்கி, யாராலும் அழிக்க முடியாதென்ற தைரியத்தில் பாணங்களை தொடுத்தான். கவுரவ வீரர்கள் துரியோதனனுடன் இணைந்து அர்ஜுனன் மீது அம்புகளை தொடுத்தனர். அவற்றையெல்லாம் அர்ஜுனன் சமாளித்து கொண்டிருந்தான். இந்நேரத்தில் பாண்டவ படையின் உதவி அர்ஜுனனுக்கு தேவைப் பட்டது. எனவே கண்ணபிரான் தனது சங்கை ஆரவாரமாக ஊதினார். அது எழுப்பிய பேரொலி குருக்ஷேத்திர களத்தையே கலங்கடித்தது. அனைவரும் அவர்கள் இருந்த இடம் நோக்கி ஓடி வந்தனர். சங்கொலியை கேட்ட தர்மர், தனது தம்பிக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்து, கண்ணபிரானின் தம்பியும் தங்களது மகாரத சேனாதிபதியுமான சாத்தகியை அங்கு அனுப்பி என்ன ஏதென விசாரித்து வருமாறு பணித்தார்.
சாத்தகி கவுரவ படையை கடந்து அந்த இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அவனை எல்லாரும் எதிர்த்தனர். அவர்களையெல்லாம் சமாளித்து சாத்தகி முன்னேறி கொண்டிருந்தான். கர்ணனின் புதல்வர்கள் அவன் மீது அம்பு மழை பொழிந்தனர். ஆனால், மதயானை போல் முன்னேறிய சாத்தகி அவர்களை கொன்று குவித்தான். இது கண்ட துரோணாச்சாரியார் அவனிடம் போருக்கு வந்தார். அவரை பணிவுடன் வணங்கிய சாத்தகி,எங்கள் அன்புத்தலைவரே! தங்களுடன் யுத்தம் செய்ய நான் விரும்பவில்லை. தாங்கள் பிராமணர். ஒரு பிராமணரை எதிர்த்து போராடுவதில் எனக்கு சிறிதளவும் விருப்பமில்லை. தயவுசெய்து எனக்கு வழிவிடுங்கள்,என்றான். துரோணாச்சாரியார் அவனை விடுவதாக இல்லை. அவனை வலுக்கட்டாயமாக போருக்கு இழுத்தார். இருவருக்கும் நடந்த கடும் போரின் முடிவில் துரோணாச்சாரியார் சோர்ந்து நின்றார். இதைப் பயன் படுத்தி சாத்தகி மேலும் முன்னேறி சென்றான். அர்ஜுனனின் நிலையை அறிந்து வர தன்னால் அனுப்பப்பட்ட சாத்தகி நீண்ட நேரமாக திரும்பி வராததால், பீமனை தர்மர் அங்கு அனுப்பி வைத்தார். பீமன் வெகு ஆவேசமாக கவுரவப்படைகளின் இடையே புகுந்து சென்றான். அவனது கால்களிலும் கைகளிலும் சிக்கி ஏராளமான வீரர்கள் மடிந்து போனார்கள்.இந்த நேரத்தில் துரியோதனின் தம்பிகளான குண்டலபோசி, தீர்க்கலோசனன், சித்திரசேனன் ஆகியோர் பீமனை எதிர்க்க வந்தனர். அவர்கள் மூவரையும் அடித்தே கொன்று விட்டான் பீமன். இதை யடுத்து துரியோதனனின் தம்பிமார்கள் முப்பத்தைந்து பேர் ஒன்றாக இணைந்து பீமனை எதிர்த்தனர். ஆனால், பீமனின் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் அவர்கள் அனைவரின் உயிரையும் குடித்தன. பதினான்காம் நாள் போரில் துரியோதனனின் முப்பத்தெட்டு தம்பிகள் மாண்டு போனார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
பீமன் இவ்வாறு முன்னேறும் வேளையில், துரோணாச்சாரியார் அவனை மறித்தார். சாத்தகியுடன் போராடிய களைப்பிலிருந்து சற்றே அவர் மீண்டிருந்தார். துரியோதனன் அர்ஜுனனுடன் போராடச் சென்றிருக்கும் இந்த வேளையில், பீமனும் அங்கு போய் சேர்ந்து விட்டால் துரியோதனனின் அழிவு உறுதி என்பதை உணர்ந்த அவர், பீமனை எதிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார். ஆனால் பீமனோ தனது ஆச்சாரியாரை எதிர்க்க விரும்பவில்லை. வில்லை அவரது பாதத்தில் வைத்து வணங்கி தன்னை தடுக்காதிருக்கும்படி கேட்டு கொண்டார். உங்கள் திருவடிகளைக்கூட எனது தலையில் தாங்க தயாராக இருக்கிறேன். என்னை முன்னேற அனுமதியுங்கள்,என மிகுந்த தாழ்மையுடன் வேண்டினான். துரோணர் அதற்கு சம்மதிக்காததால், அவருடன் போரிட வேண்டிய நிலை ஏற்பட்டது. தனது பலத்தை குருவிடம் காட்ட ஆரம்பித்தான். அவர் நின்ற தேரை தனது கைகளால் துõக்கி வானத்தை நோக்கி வீசி எறிந்தான். ஆகாயம் வரை பறந்து சென்ற தேர் கீழே விழுந்து நொறுங்கியது. துரோணருக்கு எலும்பு முறிந்து விட்டது. இந்நிலையில், யாராலும் அழிக்க முடியாத கவசத்துடன் சென்ற துரியோதனன் சற்றும் அஞ்சாமல் அர்ஜுனன் மீது பாணங்களை தொடுத்தான். அர்ஜுனன் எதிர்த்து போரிட்டாலும் துரியோதனனை ஒன்றும் செய்ய முடியவில்லை. மனக் கலக்கத்துடன் அவன் கண்ணபிரானை நோக்கினான்.