Mahabharatham story in Tamil 99 – மகாபாரதம் கதை பகுதி 99

மகாபாரதம் பகுதி-99

கர்ணனது தேரைச் சுற்றி கோபக்கனல் வீசும் கண் களுடன் கிருபாச்சாரியார், அஸ்வத்தாமன், சகுனி முதலானவர்கள் நின்றனர். அர்ஜுனன் அவன் மீது அம்புகளைச் சரமாரியாகப் பாய்ச்சினான். கர்ணனும் பதிலுக்குத் தாக்க இந்த யுகமே முடிந்துவிடுமே என்று விண்ணோர்களே பயந்து விட்டனர். கர்ணனின் திறத்தை அடக்க கிருஷ்ணரும், அர்ஜுனனின் திறத்தை அடக்க சல்லியனும் மிகத்திறமையாக தேரோட்டினர். அவர்கள் இருவரும் தேரோட்டுவதில் சமவலிமை படைத்தவர்கள் என்றே அனைவரும் பேசிக் கொண்டனர். கிருஷ்ணருக்கு எவ்வகையிலும் குறைந்தவனில்லை என்று காட்டும் வகையில் சல்லியன் நடந்து கொண்டான். அதுமட்டுமின்றி கர்ணனிடம் சொல்லி, கிருஷ்ணரைத் தேரோட்ட முடியாமல் செய்ய அம்புகளால் தடுப்புச்சுவர் எழுப்பச் சொன்னான். இதை சரக்கூடம் என்பார்கள். இது கர்ணனுக்கு மிகுந்த பலனளித்தது. கிருஷ்ணரால் அந்த தடுப்பைத் தாண்டி தேரோட்ட முடியவில்லை. உடனே தன் மாயையை பயன்படுத்தி, கிருஷ்ணரும் அவ்வாறே செய்ய கர்ணனின் தேரும் மாட்டிக் கொண்டது. அர்ஜுனன் மிகவும் களைத்துப்போய் அம்புகளை எய்ய முடியாமல் நின்றான். கிருஷ்ணர் அவனிடம், ஏன் எழுதப்பட்ட சித்திரம் போல அப்படியே நிற்கிறாய்? சாதாரண சூழலை விட, மாட்டிக்கொள்ளும் நேரங் களில் தான் மனிதன் தனது புத்தியை வேகமாகப் பயன்படுத்த வேண்டும். உம்..அம்புகளைத் தொடு, என்று அவசரப்படுத்தினார். அர்ஜுனனும் சுதாரித்து நெருப்பைக் கக்கும் ஆக்கினேயாஸ்திரத்தை கர்ணன் மீது பிரயோகம் செய்தான். அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பம் களத்தில் நின்ற ஏராளமான வீரர்கள், யானை, குதிரைகளை கருகச் செய்தபடியே கர்ணனை நோக்கிப் பாய்ந்தது. அஞ்சாநெஞ்சனான கர்ணன், அந்த அஸ்திரத்தை எதிர்கொள்வதில் பெருமிதமடைந்தான். வருணபகவான் தனக்குத் தந்த வருணாஸ்திரத்தை எதிர் பிரயோகம் செய்தான். அதில் இருந்து சிந்திய பெருவெள்ளமான தண்ணீர், எதிரே வந்த நெருப்பு அஸ்திரத்தை அழித்து விட்டது.இப்படியாக பல்வேறு சிறப்புமிக்க அஸ்திரங்களை இருவரும் பிரயோகித்தனர். அர்ஜுனன் விட்ட எல்லா அஸ்திரங்களையும் மாவீரன் கர்ணன் ஒடித்து தள்ளிவிட்டான். அர்ஜுனனின் வாவ்யாஸ்திரத்துக்கு சர்ப்பா ஸ்திரம், கர்ணனின் பூர்ணசந்திர அஸ்திரத்துக்கு அந்தகாரஸ்திரம், ஐந்திர அஸ்திரத்துக்கு, சூரிய அஸ்திரம், பிரமாஸ்திரத்துக்கு ருத்திராஸ்திரம் என மாறி மாறி தொடுத்தனர். இவையெல்லாம் பார்ப்பதற்கு சாதாரண அம்புகள் போல் தோன்றும்.

ஆனால், இதில் அடங்கியுள்ள மந்திரசக்தியாலும், தேவர்களால் தரப்பட்டது என்பதாலும் இவற்றுக்குரிய சக்தி மிகமிக அதிகம். இப்படி எந்த அஸ்திரமுமே இருதரப்புக்கும் பலன் தராததால் இருவரும் கைசோர்ந்தனர். சற்று ஓய்வுக்குப்பிறகு, கர்ணன் காண்டவவனத் தகனத்தின் போது, தன்னிடம் வந்து சேர்ந்த அஸ்வசேனன் என்னும் நாகக் குழந்தையை நினைத்தான். அது நாகாஸ்திரமாக அவன் கையில் வந்து சேர்ந்தது. இந்த அஸ்திரத்தைத் தான் ஒரே ஒருமுறை அர்ஜுனன் மீது எய்ய வேண்டும் என்று குந்திதேவி வரம் பெற்றிருந்தாள்.அந்த அஸ்திரம் ஐந்து வாய் களைக் கொண்டிருந்தது. காண்டவ வனத்தை அர்ஜுனன் அக்னிக்கு பரிசாகக் கொடுத்து எரித்தபோது, தட்சகன் என்ற பாம்பின் மனைவியும், கர்ப்பிணி யுமாக இருந்த நாகமாது என்பவள் தீயிலிருந்து தப்ப விண்ணை நோக்கிப் பறந்தாள். அர்ஜுனன் அந்தப்பாம்பின் மீது அம்பெய்தான். அது இருகூறாகி விழுந்தபோது, இந்திரன் அதைத் தாங்கிப் பிடித்து பாம்பின் உடலில் இருந்த அவளது குழந்தையை வெளியில் எடுத்தான். அஸ்வசேனன் என்று பெயர் பெற்ற அக் குழந்தை, அர்ஜுனனுக்கு எதிரி கர்ணன் என்பதைக் கண்டுபிடித்து அவனிடம் போய் அடைக்கலமானது. அதுவே நாகாஸ்திர வடிவில் இருந்தது. தன் தாயைக் கொன்ற அர்ஜுனனைப் பழிவாங்க அது காத்திருந்தது. அந்த அஸ்திரத்துக்கு சந்தனம் பூசி, துõபம் காட்டி, பூக்களால் பூஜை செய்த கர்ணன் அதை அர்ஜுனன் மீது எய்தான். அதை தனது அர்த்தசந்திர பாணத்தை வீசி துண்டித்துவிட்டான் அர்ஜுனன். துண்டான ஐந்து தலைகளுடன் வந்த அந்த பாணம், கர்ணனிடம் திரும்பி வந்து, மீண்டும் ஒருமுறை என்னை அர்ஜுனன் மீது ஏவு, என்று கெஞ்சியது.

கர்ணன் மறுத்தான். நாகாஸ்திரமே! உன்னை மீண்டும் ஒருமுறை எய்ய முடியாமைக்காக வருந்துகிறேன். குந்திதேவியிடம் உன்னை ஒருமுறை மட்டுமே எய்வேன் என்று வாக்கு கொடுத்துள்ளேன். எனவே உன்னை மீண்டும் பிரயோகிக்க மாட்டேன், என்றான். நாகாஸ்திரம் அது கேட்டு மிகவும் வருத்தப்பட்டது. செல்லியனும் அந்த அஸ்திரத்தை மீண்டும் அர்ஜுனன் மீது ஏவச்சொன்னான். அதையும் வாக்குத்தவறாத கர்ணன் கேட்க மறுத்துவிட்டான். கர்ணா! என் தாயை கொன்றவனை பழிதீர்க்கலாம் என்றே உன்னை சரணடைந் தேன். ஆனால், நீயோ ஒருமுறை எய்ததுடன் நிறுத்திக் கொண்டாய். அதுவும் குறிதவறி விட்டது. என் விதி அவ்வளவுதான், என்று சொல்லிவிட்டு நாகாஸ்திரம் மறைந்து விட்டது. நாகாஸ்திரத்துக்கே தப்பிவிட்ட அர்ஜுனனைக் கண்டு பாண்டவர் படையினர் ஆரவாரம் செய்தனர். இதைப் பார்த்த சல்லியன் கோபத்துடன், கர்ணா! நான் சொன்னதையும், மகாநாகாஸ்திரம் சொன்னதையும் கேட்க நீ மறுத்துவிட்டாய். இனி நான் உனக்கு தேரோட்ட மாட்டேன். அர்ஜுனனை உன்னால் கொல்ல முடியாது என்பது தெளிவாகி விட்டது. உன்னை நண்பனாக அடைந்ததற்காக துரியோதனன் தோற்கப்போவதும் நிஜமாகி விட்டது, என்று சொல்லிவிட்டு தேரில் இருந்து இறங்கிச் சென்று விட்டான்.கர்ணனே இப்போது தேரை ஓட்ட வேண்டியதாயிற்று. அவன் மிகவும் நொந்து போயிருந்தான். தனது பாணங்கள் இப்படி செயலற்று போக காரணம் என்ன என்று யோசித்தான். அப்போது தான் பரசுராமர் அவன் கண்கள் முன் நிழலாடினார்.