பரசுராம அவதாரம் வரலாறு | Parasurama Avatharam Story in Tamil
தசாவதாரத்தில் ஆறாவது அவதாரம் 6 | பரசுராம அவதாரம்
புரூரவசுவுக்கும், தேவலோக அழகியான ஊர்வசிக்கும் பிறந்த ஆறு பிள்ளைகளில் ஒருவன் காதி.
காதி சந்திர வம்சத்தில் பிரசித்தி பெற்ற மன்னன். காதிக்கு சத்தியவதி என்ற மகள் இருந்தாள்.
அவளை ரிஷிகன் என்ற பிராமணன் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். தன மகளை ஒரு ஏழைப் பிராமணனுக்குக் கொடுக்க விரும்பாத அரசன், ” ஒரு காது பச்சையாகவும், மற்ற அம்சங்கள் வெண்மையாகவும் உள்ள ஆயிரம் குதிரைகளை நீ கொடுத்தால் என் மகளைக் கொடுக்கிறேன் ” என்று சொன்னான்.
ரிஷிகனால் அதைக் கொண்டு வருவது முடியாத காரியம் என்று அரசன் நினைத்தான். ரிஷிகனோ, வருண பகவானை வேண்டி, அரசன் கேட்டவாறு ஆயிரம் குதிரைகளைப் பெற்று வந்து அரசனிடம் கொடுத்து சத்தியவதியைத் திருமணம் செய்து கொண்டான்.
சிறிது காலத்துக்குப் பிறகு, சத்தியவதிக்கு ஒரு பிள்ளை வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. சத்தியவதியின் தாய் தனக்கு ஒரு மகள் இல்லையே என்று கவலைப்பட்டாள்.
இருவரின் விருப்பத்தையும் நிறைவேற்ற எண்ணிய ரிஷிகன், விசேஷ சக்தி கொண்ட பால் சோறு தயாரித்து அதை இரண்டு பாகமாகப் பிரித்து முதல் பாகத்தைத் தன மனைவிக்கும், இரண்டாவது பாகத்தை அவள் தாய்க்கும் கொடுக்கும் படி வைத்து விட்டு, நீராடச் சென்று விட்டான்.
அச் சமயத்தில் சத்தியவதியின் தாய் அங்கே வந்து, இரண்டாம் பாகத்தைத் தன் மகளுக்குத் தந்து, முதல் பாகத்தைத் தானே உண்டு விட்டாள். சிறிது நேரம் கழித்து வந்த ரிஷிகன், நடந்ததை அறிந்து பதறினான்.
தன மனைவியிடம், ” பிராமண மந்திரம் ஏற்றிய உணவை உன் தாய் அருந்தி விட்டாள். அவளுக்குப் பிறக்கும் மகன், பிரம்ம ஞானியாகப் பிறப்பான். க்ஷத்ரிய மந்திர உருவேற்றியதை நீ அருந்தியதால், உனக்குப் பிறக்கும் மகன் கொடிய அரச குணங்களோடு விளங்குவான் ” என்று கூறி வருந்தினான்.
ரிஷிகனின் மனைவிக்கு ஜமதக்னி என்னும் மகன் பிறந்தான். அதன் பிறகு, ஜமதக்னி ரேணுகா தேவியை மணம் புரிந்து, அசுமணன் முதலிய பல புத்திரர்களைப் பெற்றான். அவர்களில் ஒருவன் தான் பரசுராமன். இவன் மகாவிஷ்ணுவின் அவதாரம்.
பரசுராமன் தன்னைப் பலம் மிக்கவனாகவும், தனக்கு நிகர் யாரும் இல்லை என்றும் எண்ணிப் பூமியை இருபத்தொரு முறை வலம் வந்தான். க்ஷத்ரியர்களக் கொன்று பழி தீர்த்தான்.
சூரிய வம்சத்தில் பிறந்தவனாகிய கேகய நாட்டு மன்னன் திருதவீரியனின் மகன் கார்த்தவீரியார்ச்சுனன் என்பவன்.
இவனுக்குப் பிறவியிலேயே கால்கள் இல்லை. பன்னிரண்டு வயதுக்கு மேல், தாத்தாத்ரேயரிடம் ஞான உபதேசம் பெற்றுப் பலசாலியாக நாட்டை ஆண்டு வந்தான்.
கார்த்தவீரியார்ச்சுனன் ஒரு முறை காட்டுக்கு வேட்டையாடச் சென்ற போது, அவனுக்கும் அவனது படையினருக்கும் கடும் பசி உண்டானது.
அப்போது, ஜமதக்னி முனிவர், தன்னிடமிருந்த காமதேனு என்னும் தேவ பசுவின் உதவியால் அவர்கள் அனைவர்க்கும் அறுசுவை உணவளித்தார். மன்னன் என்ற திமிர் படைத்த கார்த்த வீரியார்ச்சுனன், ” காட்டில் வாழும் முனிவருக்குக் காமதேனு தேவையில்லை. ஆகவே, அதை எனக்கே கொடுங்கள்” என்று கேட்டான்.
முனிவர் மறுக்கவே, மன்னன் அந்தத் தேவ பசுவைப் பலவந்தமாகத் தன் நாட்டுக்குப் பிடித்துச் சென்றான்.
அதையறிந்து கோபம் கொண்ட ஜமதக்னியின் மகன் பரசுராமன், கவசம் அணிந்து, வில்லையும் கோடரியையும் ஏந்திக் கொண்டு விரைந்து சென்றான். தனியாகவே வீரத்துடன் போராடி, மன்னனின் தலையை வெட்டி வீழ்த்தி விட்டுக் காமதேனுவை மீட்டு வந்தான்.
இதையறிந்த ஜமதக்னி முனிவர், ” அரசனைக் கொன்றது ஒரு பிராமணனைக் கொன்றதை விட அதிக பாவமான காரியமாகும். அதனால், அப்பாவம் தீர நீ யாத்திரை செய்து வருவாயாக ” என்று கூறி அனுப்பி வைத்தார். அவ்வாறே, பரசுராமன் யாத்திரை சென்று வந்தான்.
ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா தேவி ஒரு முறை மனச் சபலமுற்று, ஹோம காலத்துக்குள் தண்ணீர் கொண்டு வரத் தாமதமாகி விட்டதால், கடும் கோபம் கொண்ட முனிவர், ” அவளைக் கொன்று விட்டு வா ” என்று தன மகனிடம் ஆணையிட, பரசுராமன் தன கோடரியால் தன தாயை வெட்டி வீழ்த்தினான்.
“மகனே, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் ” என்று தந்தை கூற, பரசுராமன் அதற்கு, ” என் தாயாரும், சகோதரர்களும் பிழைத்து எழ வேண்டும் ” என்று கேட்க, முனிவரும் அவ்வாறே அருள் செய்தார். தாயும், சகோதரர்களும் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார்கள்.
தன்னுடைய தந்தைக்கு இவ்வளவு சக்தி அவரது தவ வலிமையால் தான் கிடைத்தது என்று எண்ணிய பரசுராமன் தானும் தவம் செய்யக் காட்டுக்குச் சென்றான்.
அந்நேரத்தில், கார்த்தவீரியார்ச்சுனனின் புதல்வர்கள் பரசுராமனைப் பழி வாங்க நினைத்து, பரசுராமனின் தந்தை ஜமதக்னியின் தலையை வெட்டி விட்டனர். அதைப் பார்த்த ரேணுகாதேவி அலறினாள். அவளது அழுகையொலி கேட்டுப் பரசுராமன் கடும் கோபம் கொண்டு, கோடரியை ஏந்திக் கொண்டு, கார்த்தவீரியார்ச்சுனனின் புதல்வர்களை வெட்டி வீழ்த்தினான்.
அத்தோடு கோபம் தீராமல், ” இருபத்தொரு தலைமுறைகள் க்ஷத்ரியர் வம்சம் தழைக்காமல் இருக்க அவர்களை நாசம் செய்வேன்” என்று சபதம் ஏற்றான்.
பின், தந்தையின் தலையையும், உடலையும் ஒன்று சேர்த்து அக்கினியில் சம்ஸ்காரம் செய்தார். ஜமதக்னி முனிவர் சப்தரிஷி மண்டலத்தில் நட்சத்திரமாகப் பிரகாசித்தார்.
பரசுராமன் தான் செய்த சபதப்படி, இருபத்தொரு முறை உலகை வலம் வந்து க்ஷத்ரியர்களை வதம் செய்து, பூமியை முழுவதும் கைப்பற்றிக் காசிபர்க்குத் தானம் செய்து விட்டு, மகேந்திர பர்வதத்தை அடைந்து தவம் இயற்றிக் கொண்டு வருகிறார்.
அவர் இப்போதும் உயிர் வாழ்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. அவர் சாகாவரம் பெற்றவராகையால், அவர் சிரஞ்சீவிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார்…
இது தான் பெருமாளின் 6 வது அவதாரமான பரசுராம அவதாரம் பற்றியது…