Umaikku Idapagam Kodutha Eesan

உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்

திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். 

ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். 

அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.

அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.