Mahabharatham Story in Tamil – மகாபாரதம் பகுதி-24
துருபதனை அவிழ்த்து விட்டான் அர்ஜூனன். அவன் தலைகுனிந்தபடியே அங்கிருந்து பாஞ்சாலம் நோக்கி நடந்தான். செல்லும் வழியில் அவமானம் அவனைப் பிடுங்கித்தின்றது. இந்த துரோணனைக் கொன்றே தீர வேண்டும். அவன் உயிர்போகும் நாள் தான் எனக்கு இனிய நாள். ஐயோ! கடவுளே! என் வாழுநாளுக்குள் அது நிறைவேறாவிட்டால், என் வம்சாவழியினராவது அவனைக் கொல்ல வேண்டும். ஆனால், எனக்கு பிள்ளை வரம் இதுவரை இல்லையே. என்ன செய்வேன்? என புலம்பினான்.
அத்துடன் அர்ஜூனனின் வில்லாற்றல் பற்றிய நினைவும் எழுந்தது. மிகச்சிறந்த அந்த இளைஞன் என்னை கலக்கி எடுத்து விட்டானே! வீரர்கள் போற்றுதற்குரியவர்கள். இப்படிப்பட்ட வீரன் எனக்கு மருமகனாக இருந்தால், எப்படியிருக்கும்? ஆனால், எனக்கு பெண் குழந்தையும் இல்லையே! இப்படி பல சிந்தனைகளுடன் நடந்தவனின் கால்கள் திசைமாறின.
நாட்டுக்கு போக வேண்டிய அவன் கங்கை கரைக்குச் சென்றான். அங்கே ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருந்த ரிஷ்யசிருங்கர், உபயாஜர், யாஜர் ஆகிய முனிவர்களைச் சந்தித்தான்.
இவர்களில் யாஜரிடமும், உபயாஜரிடமும் தனக்கு குழந்தையில்லாத நிலையை எடுத்துச் சொன்னான். அவன் மீது அவர்கள் இரக்கம் கொண்டனர். மன்னா! நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய். யாகத்தை நாங்களே வெற்றிகரமாக நடத்தித் தருகிறோம். யாகத்தின் ஹவிஸை உன் மனைவியிடம் காடுப்போம். அதை அவள் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டு விட்டால், உனக்கு பிள்ளை பாக்கியம் உறுதி, என்றனர். துருபதன் அவர்களிடம் ஆசிபெற்று நாடு திரும்பினான். அந்த தர்மனை நான் விரட்டி விடுகிறேன், என சவால் விட்டான். திருதராஷ்டிரன் கடகடவென சிரித்தான்.