Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 62
துரியோதனனுக்கு கோபம்… தான் முன்னால் வந்து அமர்ந்திருந்தும், தனக்கு துணையாக கிருஷ்ணர் வர மறுத்ததில் ஆத்திரம். போய் வருகிறேன் என்று கூட சொல்லாமல், அங்கிருந்து வெளியேறி பலராமனை பார்க்கச் சென்றான். அவரிடம், பலராமரே! போர்க்களத்திலே தாங்கள் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உமது பெரும் யதுகுலப் படையுடன் வர வேண்டும், என வேண்டினான். பின்னர் அஸ்தினாபுரத்துக்கு போய்விட்டான். இதனிடையே சஞ்சய முனிவரை திருதராஷ்டிரன் பாண்டவர்களிடம் தூது அனுப்பி, போர் வேண்டாம் என்றும், நாட்டை துரியோதனாதிகளிடமே ஒப்படைத்து விடும்படியும் அறிவுரை சொல்லி வரச் சொன்னான். சஞ்சய முனிவர் அங்கு சென்று அவ்வாறே சொல்ல, பாண்டவர்கள் அதை ஏற்கவில்லை.
பின்னர் கிருஷ்ணரை தூது அனுப்பி கவுரவர்களுக்கு எச்சரிக்கை விட தர்மரின் தம்பிகள் ஏற்பாடு செய்தனர். ஆனால், தர்மருக்கு இதில் உடன்பாடு இல்லை. அவர் கிருஷ்ணனிடம், கவுரவர்கள் வேறு யாருமல்ல! அவர்களும் என் தம்பிகள்தான். சாதாரண மண்ணைப் பெறுவதற்காக, என் தம்பிகளை கொல்ல வேண்டுமென நான் விரும்பவில்லை. நாங்கள் மீண்டும் காட்டிற்கே போய்விடுகிறோம். உயிரை வாங்கும் இந்த போரில் எனக்கு விருப்பமில்லை. எனவே நாங்களே சமாதானமாக போய்விடுவதாக திருதராஷ்டிரனிடம் போய் சொல்லிவிடு, என்றார். தர்மா! நீ சொல்வது சற்றும் சரியல்ல. பழைய விஷயங்களை நீ மறந்து விட்டாய். யுத்தத்தை நீ கைவிட்டால் பூலோகத்தில் உள்ள அனைவரும் உங்களை இகழ்வார்கள். அதுமட்டுமின்றி திரவுபதியை, துச்சாதனன் துகிலுறிந்த விஷயத்தை நீ மறந்துவிட்டாய். அப்போது நீங்கள் அனைவருமே அந்த ராஜசபையில் வீராவேசமாக கவுரவர்களை கொல்வதாக உறுதியெடுத்தீர்கள். அந்த சபதம் பொய்யாக வேண்டுமென நினைத்தால் நீ உன் தம்பிகளுடன் காட்டிற்கு போகலாம், என்றார்.
பரமாத்மாவின் வார்த்தைகள் தர்மரின் இதயத்தை தெளிவித்தது. கிருஷ்ணா! நீர் துரியோதனனிடம் சென்று எங்களுக்குரிய பாகத்தைக் கேள். தரமறுத்தால் ஆளுக்கொரு ஊர் வீதம் ஐந்து ஊர்களையாவது தரச்சொல். அதற்கும் அவன் தர மறுத்தால் ஆளுக்கொரு வீடாவது கேள். அதையும் மறுத்தால் யுத்தம் செய்வதைத்தவிர வேறு வழியில்லை என சொல்லிவிடு, என்றார். பீமனுக்கு இதில் உடன்பாடு இல்லை. அவன் சத்தமாக பேச ஆரம்பித்தான். அண்ணா! திரவுபதியின் கூந்தலை பிடித்து இழுத்த துச்சாதனனின் கையை வெட்ட நான் முயன்ற போது நீங்கள் என்னை தடுத்து விட்டீர்கள். அப்படிச்செய்த தன் மூலம் நம் குலத்திற்கு இந்த உலகம் உள்ளவரை தீராத களங்கத்தை உண்டாக்கி விட்டீர்கள். நமக்கு நாடு முழுமையும் வேண்டும். அதுமட்டுமின்றி, அந்த துரியோதனனின் பங்கையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் பெரியப்பாவுக்கு புத்திவரும். அதே நேரம் துரியோதனனுக்கும் நான் ஒரு பெரிய நாட்டை பரிசாக அளிப்பேன். அது எது என்றால், இந்திரனுடைய அமராவதி பட்டணம், (துரியோதனனைக் கொன்று சொர்க்கத்திற்கு அனுப்புவேன்) என்றான் கேலியுடன்.
பின்னர் அவன் கண்ணனிடம், கண்ணா! உனது சொல்லைக்கூட கேட்க என் தமையனார் விரும்பவில்லை. அவரது பேச்சு சரியில்லை என்பதை நீயே அறிவாய். பாஞ்சாலி கூந்தலை முடிக்காமல் இருக்கிறாள். காலம் முழுவதும் அவள் அதே நிலையில் இருக்கட்டுமென எனது சகோதரர் விரும்பினால், என்னால் என்ன செய்ய முடியும்? எனவே, தூது சென்று அவர் சொன்னதை செய்து வா, என சொல்லி விட்டு வெளியேற முயன்றான் கிருஷ்ணர். அவனை தடுத்தார். பீமா! சகோதர்களிடம் கோபம் கொள்ளக்கூடாது. மூத்த சகோதரர் நமது நன்மையைக் கருதி ஏதேனும் சொன்னால் இளைய சகோதரர்கள் அதை ஏற்க வேண்டும். முதலில் கோபத்தை விட்டுவிடு. சண்டைக்கு செல்பவனுக்கு சாந்தமே முதல் ஆயுதம். பதட்டமின்றி செயல்பட்டால் தான் எந்த ஒரு காரியமும் வெற்றி பெறும் என அறிவுரை சொன்னார். கிருஷ்ணரின் கட்டளையை ஏற்று பீமன் அமைதியானான். இப்படியாக அர்ஜுனன் , நகுலன் ஆகியோர் தங்கள் பங்கு கருத்தை கூறிமுடித்தனர். இப்போது இளைய தம்பியான சகாதேவனிடம் கண்ணன் வந்தார்.
சகாதேவா! எல்லோரும் அதை சாதிப்போம், இதை சாதிப்போம், துரியோதனனை கொன்று விடுவோம், உன் பெரியப்பாவின் ராஜ்யத்தையும் சேர்த்து கைப்பற்றுவோம், திரவுபதியின் கூந்தலை முடிக்க வைப்போம் என்றெல் லாம் சபதம் செய்திருக்கிறார்களே! நீ எதுவுமே பேசாமல் அமைதியாக இருப்பதின் ரகசியத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்றார். சகாதேவன் இப்போது பலமாக சிரித்தான். மைத்துனா! உன் நாடகத்தை நான் அறிவேன். உலகம் என்ற சக்கரமே உன் கையில் இருக்கிறது. அந்த நாடக மேடையில் நாங்கள் பாத்திரங்களாக நடிக்க வந்திருக்கிறோம். எங்களை நடிக்க வைக்கும் சூத்ரதாரி நீ! என்ன செய்ய வேண்டும்? என்ன நடக்கும்? என் பதையெல்லாம் அறிந்த நீ எங்களிடம் கருத்து கேட்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறாய். எதை நடத்த வேண்டுமென நீ முடிவு செய்திருக்கிறாயோ அதுதான் நிச்சயமாக நடக்கப் போகிறது. எனவே, இந்த பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கப்போகிறேன், என சொல்லிவிட்டு ஒதுங்கி கொண்டான். மாயக்கண்ணன் சகாதேவனை விட்டபாடில்லை. அவனை தனியாக அழைத்துக்கொண்டு ஒரு மண்டபத்திற்குள் சென்றார். சகாதேவா! நீ ஜோதிடத்திற்கு அதிபதி என்ன நடக்கப்போகிறது என்பதை நீ அறிவாய். எனவே, போரை, நிறுத்துவதற்கு ஒரு வழி சொல், எனக்கேட்டார்.
சகாதேவன் விடாக்கண்டனாக இருந்தான். நான் ஜோதிடன்தான். ஆனால், அந்த ஜோதிடத்தையே மாற்றும் சக்தி உன்னிடம் இருக்கும்போது, என்னால் என்ன செய்ய முடியும்? என்ன நடத்தவேண்டுமென நீ எண்ணியிருக்கிறாயோ அதையே நடத்து, என மீண்டும் ஆணித்தரமாக சொன்னான். கண்ணன் அதற்கு மறுத்தார்.