Thayumanavar Songs – சித்தர்கணம்

7. சித்தர்கணம்

திக்கொடு திகந்தமும் மனவேக மென்னவே
சென்றோடி யாடிவருவீர்
செம்பொன்மக மேருவொடு குணமேரு என்னவே
திகழ்துருவம் அளவளாவி
உக்ரமிகு சக்ரதர னென்னநிற் பீர்கையில்
உழுந்தமிழும் ஆசமனமா
வோரேழு கடலையும் பருகவல் லீரிந்த்ரன்
உலகும்அயி ராவதமுமே
கைக்கெளிய பந்தா எடுத்து விளையாடுவீர்
ககனவட் டத்தையெல்லாம்
கடுகிடை யிருத்தியே அஷ்டகுல வெற்பையும்
காட்டுவீர் மேலும்மேலும்
மிக்கசித் திகளெலாம் வல்லநீ ரடிமைமுன்
விளங்குவரு சித்திஇலிரோ
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே . 1.

பாட்டளி துதைந்துவளர் கற்பகநல் நீழலைப்
பாரினிடை வரவழைப்பீர்
பத்மநிதி சங்கநிதி இருபாரி சத்திலும்
பணிசெய்யுந் தொழிலாளர்போல்
கேட்டது கொடுத்துவர நிற்கவைப் பீர்பிச்சை
கேட்டுப் பிழைப்போரையுங்
கிரீடபதி யாக்குவீர் கற்பாந்த வெள்ளமொரு
கேணியிடை குறுகவைப்பீர்
ஓட்டினை எடுத்தா யிரத்தெட்டு மாற்றாக
ஒளிவிடும் பொன்னாக்குவீர்
உரகனும் இளைப்பாற யோகதண் டத்திலே
உலகுசுமை யாகவருளால்
மீட்டிடவும் வல்லநீ ரென்மனக் கல்லையனல்
மெழுகாக்கி வைப்பதரிதோ
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே . 2.

பாரொடுநன் னீராதி யொன்றொடொன் றாகவே
பற்றிலய மாகுபோழ்து
பரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம்
பரந்திடி னதற்குமீதே
நீரிலுறை வண்டாய்த் துவண்டுசிவ யோகநிலை
நிற்பீர் விகற்பமாகி
நெடியமுகி லேழும்பரந்துவரு டிக்கிலோ
நிலவுமதி மண்டலமதே
ஊரென விளங்குவீர் பிரமாதி முடிவில்விடை
ஊர்தியரு ளாலுலவுவீர்
உலகங்கள் கீழ்மேல வாகப் பெருங்காற்
றுலாவின்நல் தாரணையினால்
மேருவென அசையாமல் நிற்கவல் லீருமது
மேதக்க சித்திஎளிதோ
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே . 3.

எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான்
யாதினும் அரிதரிதுகாண்
இப்பிறவி தப்பினா லெப்பிறவி வாய்க்குமோ
ஏதுவருமோ அறிகிலேன்
கண்ணகல் நிலத்துநான் உள்ளபொழு தேஅருட்
ககனவட் டத்தில்நின்று
காலூன்றி நின்றுபொழி யானந்த முகிலொடு
கலந்துமதி யவசமுறவே
பண்ணுவது நன்மைஇந் நிலைபதியு மட்டுமே
பதியா யிருந்ததேகப்
பவுரிகுலை யாமலே கௌரிகுண் டலியாயி
பண்ணவிதன் அருளினாலே
விண்ணிலவு மதியமுதம் ஒழியாது பொழியவே
வேண்டுவே னுமதடிமைநான்
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே . 4.

பொய்திகழும் உலகநடை என்சொல்கேன் என்சொல்கேன்
பொழுதுபோக் கேதென்னிலோ
பொய்யுடல் நிமித்தம் புசிப்புக் கலைந்திடல்
புசித்தபின் கண்ணுறங்கல்
கைதவ மலாமலிது செய்தவம தல்லவே
கண்கெட்ட பேர்க்கும்வெளியாய்க்
கண்டதிது விண்டிதைக் கண்டித்து நிற்றலெக்
காலமோ அதையறிகிலேன்
மைதிகழு முகிலினங் குடைநிழற் றிடவட்ட
வரையினொடு செம்பொன்மேரு
மால்வரையின் முதுகூடும் யோகதண் டக்கோல்
வரைந்துசய விருதுகாட்டி
மெய்திகழும் அட்டாங்க யொசபூ மிக்குள்வளர்
வேந்தரே குணசாந்தரே
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே. 5.

கெசதுரக முதலான சதுரங்க மனவாதி
கேள்வியி னிசைந்துநிற்பக்
கெடிகொண்ட தலமாறு மும்மண்ட லத்திலுங்
கிள்ளாக்குச் செல்லமிக்க
தெசவிதம தாய்நின்ற நாதங்க ளோலிடச்
சிங்காச னாதிபர்களாய்த்
திக்குத் திகந்தமும் பூரண மதிக்குடை
திகழ்ந்திட வசந்தகாலம்
இசையமலர் மீதுறை மணம்போல ஆனந்தம்
இதயமேற் கொள்ளும்வண்ணம்
என்றைக்கு மழியாத சிவராச யோகராய்
இந்தராதி தேவர்களெலாம்
விசயசய சயவென்ன ஆசிசொல வேகொலு
இருக்குநும் பெருமைஎளிதோ
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே. 6.

ஆணிலே பெண்ணிலே என்போல ஒருபேதை
அகிலத்தின் மிசையுள்ளதோ
ஆடிய கறங்குபோ லோடியுழல் சிந்தையை
அடக்கியொரு கணமேனும்யான்
காணிலேன் திருவருளை யல்லாது மௌனியாய்க்
கண்மூடி யோடுமூச்சைக்
கட்டிக் கலாமதியை முட்டவே மூலவெங்
கனலினை எழுப்பநினைவும்
பூணிலேன் இற்றைநாட் கற்றதுங் கேட்டதும்
போக்கிலே போகவிட்டுப்
பொய்யுலக னாயினேன் நாயினுங் கடையான
புன்மையேன் இன்னம் இன்னம்
வீணிலே யலையாமல் மலையிலக் காகநீர்
வெளிப்படத் தோற்றல் வேண்டும்
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே. 7.

கன்னலமு தெனவுமுக் கனியெனவும் வாயூறு
கண்டெனவும் அடியெடுத்துக்
கடவுளர்கள் தந்ததல அழுதழுது பேய்போல்
கருத்திலெழு கின்றவெல்லாம்
என்னதறி யாமையறி வென்னுமிரு பகுதியால்
ஈட்டுதமி ழென் தமிழினுக்
கின்னல்பக ராதுலகம் ஆராமை மேலிட்
டிருத்தலால் இத்தமிழையே
சொன்னவ னியாவனவன் முத்திசித் திகளெலாந்
தோய்ந்த நெறியேபடித்தீர்
சொல்லுமென அவர்நீங்கள் சொன்னஅவை யிற்சிறிது
தோய்ந்தகுண சாந்தனெனவே
மின்னல்பெற வேசொல்ல அச்சொல்கேட் டடிமைமனம்
விகசிப்ப தெந்தநாளோ
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே. 8.

பொற்பினொடு கைகாலில் வள்ளுகிர் படைத்தலால்
போந்திடை யொடுக்கமுறலால்
பொலிவான வெண்ணீறு பூசியே அருள்கொண்டு
பூரித்த வெண்ணீர்மையால்
எற்பட விளங்குகக னத்திலிமை யாவிழி
இசைந்துமேல் நோக்கம்உறலால்
இரவுபக லிருளான கனதந்தி படநூறி
இதயங் களித்திடுதலால்
பற்பல விதங்கொண்ட புலிகலையி னுரியது
படைத்துப்ர தாபமுறலால்
பனிவெயில்கள் புகுதாமல் நெடியவான் தொடர்நெடிய
பருமர வனங்களாரும்
வெற்பினிடை யுறைதலால் தவராச சிங்கமென
மிக்கோ ருமைப்புகழ்வர்காண்
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே. 9

கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்
கற்றும்அறி வில்லாதஎன்
கர்மத்தை யென்சொல்கேன்மதியையென் சொல்லுகேன்
கைவல்ய ஞானநீதி
நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று
நாட்டுவேன் கர்மமொருவன்
நாட்டினா லோபழைய ஞானமுக்கியமென்று
நவிலுவேன் வடமொழியிலே
வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே
வந்ததா விவகரிப்பேன்
வல்லதமி ழறிஞர்வரின் அங்ஙனே வடமொழியி
வசனங்கள் சிறிதுபுகல்வேன்
வெல்லாம லெவரையும் மருட்டிவிட வகைவந்த
வித்தையென் முத்திதருமோ
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே. 10.