மகாபாரதம் – பகுதி 77
பரந்தாமா ! என்ன இது விபரீதம்! சாரதியாய் வந்த நீர், இவ்வாறு போர்க்கோலம் பூணுவது நீதியாகுமா? எதிர்த்திசையில் இருப்பவர்கள் எனது உற்றார், உறவினர் என்பதால் தானே, நான் தயக்கத்துடன் போர் புரிகிறேன். இல்லாவிட்டால், என் பாணங்கள் இதற்குள் எதிரிகளின் தலைகளைக் கொய்திருக்காதா! கேசவா! சினம் தணிந்து என் தேரில் மீண்டும் ஏறும். அபிமன்யுவும், பீமனும் தங்களைக் காத்து கொள்ளும் திறமை வாய்ந்தவர்கள்.
பீஷ்மரால் அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் கூட நான் மகிழத்தான் செய்வேன். மகிமைக்குரிய மகாத்மா அல்லவா அவர்! அவருடன் போர் செய்ய நீர் செல்லலாமா? அது உம் தகுதிக்கு அழகாகுமா? என்ற அர்ஜுனனின் சொல்லை சற்றும் மதிக்கவில்லை கிருஷ்ணர். அவர் முன்னேறிச் சென்றார். தன்னை நோக்கி கண்ணனே வருகிறார் என்றால், தனக்கு அழிவு நிச்சயம் என்பதை பீஷ்மர் உணர்ந்து கொண்டார். கிருஷ்ணரின் கையால் இறந்தவர்கள் வைகுண்டபதியை அடைந்து, பிறப்பற்ற நிலையை அடையலாம் என்பதை, தன் இறப்பு விரைவில் நிகழட்டும் என ஆசைப்பட்டார். ஆனால், மனிதன் நினைப்பதை இறைவன் அவ்வளவு எளிதில் கொடுத்து விடுவதில்லை.
பீஷ்மர் கிருஷ்ணரை நோக்கி ஓடி வந்தார். புண்டரீகாக்ஷõ, கோவிந்தா, மதுசூதனா, கோபாலா, நாராயணா, விஷ்ணுபதீ! உன்னால் எனக்கு அழிவு நேருமானால், நான் செய்த பாக்கியம் தான் என்னே! என்னைக் கொன்று விடு. இனி, இவ்வுலகில் பிறக்கவிடாதே! என்றவராய் கிருஷ்ணனை நோக்கி ஓடி வந்தார். தனது திருநாமங்களை சொல்லி, மரணத்தை கண்டு அஞ்சாமலும், இறைவனுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற எண்ணத்துடனும் ஓடி வந்த பீஷ்மர் மீது கிருஷ்ணருக்கு அனுதாபம் ஏற்பட்டது.
மரணத்தைக் கண்டு எவனொருவன் அஞ்சாமல் இருக்கிறானோ அவனுக்கு என்றும் மரணமில்லை, என்ற தத்துவத்தின் அடிப்படையில், பகவான் கிருஷ்ணர் கோபம் தணிந்தார். அங்கிருந்து திரும்பி, மீண்டும் அர்ஜுனனின் தேரில் ஏறிவிட்டார். இதன்பிறகும் அமைதியாக இருந்தால், பீஷ்மர் உள்ளிட்ட அத்தனை உயிர்களும் பறிக்கப்படும் என்பதால் அச்சம் கொண்ட அர்ஜுனன், எதிரிகளின் மீது பாணமழை பொழிந்தான். கவுரவர்கள் தரப்பில் ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அர்ஜுனனின் அம்புகளால் துண்டிக்கப்பட்ட பலதேசத்து ராஜாக்களின் உடலில் இருந்து பாய்ந்த ரத்தம் விண்ணுலகைத் தொட்டு, சூரியனை நனைத்ததாம். அந்தளவுக்கு உக்கிரமாக போர் புரிந்தான் அர்ஜுனன். அவனது போர், எதிரிகளுக்கு திகிலைக் கொடுத்ததால், கிருஷ்ணர் திருப்தியடைந்தார். கவுரவர்களுக்கு பெருத்த சேதத்தை உண்டாக்கிய மகிழ்ச்சியுடன் அன்றையப் போர் நிறைவு பெற்றது.
மறுநாள் நான்காம் தின போருக்கு படைகள் ஆயத்தமாயின. அன்றைய தினம் கவுரவப்படைகள் பகதத்தனை களத்தில் இறக்கின. இவன் யார் தெரியுமா? தீபாவளி பண்டிகைக்கு காரணமான நரகாசுரனின் மகன். நரகாசுரனை விஷ்ணு அழித்ததும், அவனது மகன் பகதத்தனை பராமரிக்கும் பொறுப்பு அவரது தலையில் விழுந்தது. பகதத்தனை மிகுந்த அன்புடன் கவனித்து, அவனை தந்தைக்குப் பிறகு மன்னனாக்கினார் விஷ்ணு. ஆனாலும், அவன் தன் தந்தையைக் கொன்ற விஷ்ணுவின் ஆதரவாளர்களான பாண்டவர்களுக்கு எதிராகவே இருந்தான். இதைப்பயன்படுத்தி, துரியோதனன், அவனைத் தனது படையில் முக்கிய ஸ்தானத்தில் வைத்துக் கொண்டான். அவன் பாண்டவர்களை எதிர்த்து உக்கிரமாகப் போரிட்டான். பலம் கொண்ட அசுர வீரனை எதிர்க்க மானிடர்களால் எப்படி முடியும்? எல்லாரும் ராமனாகி விட முடியுமா? எனவே, அவனை எதிர்க்க பீமனுக்கும், இடும்பி என்ற அரக்கிக்கும் பிறந்து, அரக்கர் குலத்திலேயே வாழ்ந்த கடோத்கஜனை ஏற்பாடு செய்தனர்.
கடோத்தகஜனும், பகதத்தனும் கடுமையாக மோதினர். வெகு நீண்ட நேரம் சமபலத்துடன் போரிட்ட பிறகு, கடோத்கஜனின் கை ஓங்கியது. பாண்டவர் படையினர் ஆரவாரம் செய்தனர். அன்றையப் போரில் பகதத்தன் இருந்தும், கவுரவர்கள் பக்கம் தாள முடியாத ஒரு இழப்பு ஏற்பட்டது. துரியோதனின் தம்பிகள் ஐந்துபேரை எதிர்த் தரப்பினர் கொன்று விட்டனர். இதுகேட்டு காந்தாரி துடித்தாள். திரவுபதியை தனது மக்கள் துகிலுரிந்து வேடிக்கை பார்த்த போது, அதைக் கண்டுகொள்ளாமலும், பிள்ளைகளைக் கண்டிக்காமலும் இருந்த அந்த மாது இப்போது துடித்தாள். பிள்ளைகளைத் தாய்மார்கள் நல்ல முறையில் வளர்க்க வேண்டும். பொறாமை, போட்டி மனப்பான்மை, பெண்களை மதிக்காத தன்மை, மண்ணாசை பொன்னாசையுடன் தன் பிள்ளைகளை வளர்த்தாள்.
அதன் காரணமாக இன்று பிள்ளைகளை வரிசையாக இழக்கத்துவங்கி விட்டாள். அநியாய குணங்களுடன் வளர்க்கப்படும் பிள்ளைகள் நிச்சயம் அழிவைச் சந்திப்பார்கள் என்பதற்கு மகாபாரதத்தின் இந்தக்காட்சி ஒரு உதாரணம். காந்தாரி புலம்பித் தீர்த்தாள்.
மக்களே! தினமும் உங்கள் நூறு பேரையும் பார்த்து பெருமைப்படுவேன். இப்போது ஐவர் இறந்து விட்டீர்கள். எதிரிகளான ஐந்துபேரை நீங்கள் அழிப்பீர்கள் என எதிர்பார்த்தேன். ஆனால், நீங்கள் ஐந்துபேர் அழிந்து போனீர்களே! என்று அழுதாள்.
நான்காம் நாள் போரும் பாண்டவர்களுக்கு மகிழ்ச்சியான விடையையே தர, மறுநாள் போரும் அவ்வாறே அமைந்தது. அன்றைய தினம், கிருஷ்ணரின் மகன் சாத்தகியும், கவுரவப்படையின் தேர்ப்படை சேனாதி பதியான பூரிச்ரவஸும் செய்த போர் மிக கடுமையாக இருந்தது. அன்றைய தினம் மட்டும் இருபத்தைந்தாயிரம் அரசர்கள் இறந்தார்கள். ஆறாம்நாள் போரில், துரோணரும், பீமனும் மோதிக் கொண்டனர். துரோணர் தனது குரு என்பதால், அவரை நமஸ்கரித்த பிறகே, பீமன் அவருடன் கடும் போர் செய்தான்.
அவரது தேரை இழுத்து வந்த குதிரைகளை அம்பெய்து கொன்றான். தேர் நின்றுவிட்டது. இதைப் பார்த்த நகுல, சகா தேவனின் தாய்மாமனும், சந்தர்ப்பவசத்தால் துரியோதனனின் படையில் சேர்ந்தவனுமான சல்லியன், பீமனுடன் களத்தில் மோதினான். பீமனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அனைத்து ஆயுதங்களையும் இழந்து நின்ற வேளையில், சல்லியரே! இப்போது உங்கள் உயிர் எனது கையில், என்று வீரம் பேசிய பீமனை நோக்கி தேரில் பறந்து வந்தான் துரியோதனன்.