மகாபாரதம் பகுதி – 80
அப்போது அசுரன் அலம்புசன் மிகப்பெரிய பாறை ஒன்றைத் துõக்கி பீமன் மீது வீசினான். அதை அபிமன்யு தனது அம்பால் தடுத்து நிறுத்தி பொடிப் பொடியாக்கினான். அபிமன்யுவின் இந்த வீரம் கண்டு களித்த பீமன், இன்னும் ஆக்ரோஷமாக போரிட்டான். அலம்புசன் மீது தன் கையில் இருந்த வேல்கம்பு ஒன்றை எறிந்து கொன்றான். அலம்புசன் இறக்கவே, அவனுடன் இருந்த அசுர வீரர்கள் பயந்து சிதறினர். பீமன் அவர்கள் ஒருவர் விடாமல் கொன்றதுடன், துரியோதனனின் ஆதரவாளர்களான வடதேசத்து அரசர்கள் பலரையும் கொன்று தீர்த்தான். அலம்புசனின் இறப்பு கவுரவர்களுக்கு ஈடு செய்ய முடியாததாக அமைந்து விட்டது. பீமனால் அன்றையப் போரில் தனது படைக்கு பெரும் இழப்பு வந்ததை கண்ட பீஷ்மர் ஆவேசமானார். பெரும் கோபத்துடன் பாண்டவர் படையிடம் போர் நடத்தினார். பீஷ்மரின் அம்பு மழைக்கு யாரால் பதில் சொல்ல இயலும்? பாண்டவப்படையிலும் பேரிழப்பு ஏற்பட்டது, பீஷ்மரின் ஆவேசம் கண்ட சிகண்டி அவர் எதிரே வந்தான். இந்த சிகண்டி யார் தெரியுமா? பீஷ்மர் தன் தம்பி விசித்திரவீரியனின் திருமணத்துக்காக காசிராஜனின் புத்திரிகளான அம்பா, அம்பிகா, அம்பாலிகா, ஆகியோரைக் கடத்தி வந்தார் அல்லவா? அவர்களில் அம்பா சாலுவன் என்பவனைக் காதலித்ததால், அவளை அவனிடமே அனுப்பி விட்டார். ஒரு ஆடவனால் கடத்தப்பட்ட உன்னை நான் ஏற்கமாட்டேன் என சாலுவன் அம்பாவைப் புறக்கணிக்கவே, அவள் மீண்டும் பீஷ்மரிடம் வந்து தன்னை மணந்து கொள்ள வேண்டினாள். இதற்கு பீஷ்மர் மறுக்கவே, பரசுராமர் மூலம் முயற்சித்தாள். எல்லா முயற்சியும் வீணாகவே, பிற்காலத்தில் நடக்கும் போரில் நான் உன்னைக் கொல்லும் பாக்கியம் பெறுவதற்காக தவமிருக்கப் போகிறேன் என சொல்லி விட்டு தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாய் சிகண்டி என்ற பெயரில் பாஞ்சால தேசத்து அரசன் யாகசேனனுக்கு ஆணும் பெண்ணும் அல்லாத அரவாணியாக பிறந்தாள்.
சிகண்டி தன்னை எதிர்த்தால், நான் அம்பெடுக்க மாட்டேன் என பீஷ்மர் ஏற்கனவே கிருஷ்ணரிடம் சொல்லியிருந்தார். அரவாணிகள் போன்ற பலமற்றவர்களை எதிர்ப்பது தன் வீரத்துக்கு இழுக்கு என அவர் கருதியிருந்தார். இந்த சமயத்தைத் தான் கிருஷ்ணர் எதிர்பார்த்திருந்தார். சிகண்டியை முன்னால் அனுப்பும் போது, பீஷ்மர் அம்புகளைக் கீழே போட்டு விடுவார். அந்த சமயத்தில் அர்ஜுனனைக் கொண்டு பீஷ்மரைக் கொல்வது கிருஷ்ணரின் திட்டம். நினைத்தது போலவே நடந்தது. சிகண்டி தன்னை எதிர்த்ததும், பீஷ்மர் அம்புகளைக் கீழே போட்டு விட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக, துச்சாதனன் சிகண்டியுடன் போர் செய்ய வந்து விட்டான். அவனது வீரத்துக்கு முன்னால், சிகண்டி எடுபடாமல் போய்விட்டான். ஆயுதங்களை இழந்து ஓடியே போய்விட்டான். இதையடுத்து, மீண்டும் வில்லெடுத்த பீஷ்மர் பாண்டவப்படைகளை குறி வைத்தார். மத்ஸ்ய தேசத்தை சேர்ந்த சதாநீகன் என்பவன் பாண்டவர் படையில் பெரும்புள்ளி. அவனை அன்று பீஷ்மர் கொன்றார். அத்துடன் அன்றையப் போர் நிறைவடைந்தது.பத்தாம் நாள் போர் முக்கியமான ஒன்று. இந்த நாளில் தான், பீஷ்மர் தனது உயிர் போகும் என கிருஷ்ணரிடம் சொல்லியிருந்தார். எனவே, சிகண்டியை அன்றைய தினத்தில் மீண்டும் பயன்படுத்த முடிவெடுத்தார். அன்று பீஷ்மரும் ஒரு முடிவோடு வந்திருந்தார்.
ஒன்று நாமிருக்க வேண்டும்… அது நடக்காத காரியம். ஏனெனில், அங்கே பரமாத்மா இருக்கிறார். பரமாத்மாவை வெல்பவன் உலகில் எவன்? பகவான் கிருஷ்ணர், பல மாயைகளைச் செய்து நம்மைக் கொன்று விடுவார். அதேநேரம், நம்மால் முடிந்தளவுக்கு பாண்டவப் படையின் வலிமையைக் குறைத்து விட வேண்டும்… இதுவே பீஷ்மரின் முடிவு. அதன்படி, அன்று பீஷ்மர் செய்த போரை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. அவரது பாணங்களுக்கு உருண்ட தலைகள் இத்தனை என வர்ணிக்க முடியாது. அர்ஜுனனின் உடலை மட்டுமல்ல….ஒரு போர்ச் சாரதி என்ற முறையில் பகவான் கிருஷ்ணரின் நீலநிற உடலையும், அவர் சிவனைப் போல செந்நிற மேனியனாக்கி விட்டார். பகவான் தன் உடலில் ரத்தம் வழிய தேரோட்டிக் கொண்டிருந்தார். பகவான் நினைத்தால் ஒரு நொடியில் அவரை ஒழித்திருக்க முடியும்! ஆனாலும், அவர் நியாயஸ்தர். தன் பக்தனின் உயிரை எடுக்கப்போகிறோம் என்றால், அவனுக்குரிய பங்களிப்பை அவர் கொடுத்தாக வேண்டுமே! எனவே, பீஷ்மர் விட்ட பாணங்களையும் புஷ்பமாகக் கருதி அவர் ஏற்றார். பின்னர், பீஷ்மருக்குரிய நேரத்தை அவருக்கு அளிக்க எண்ணி, சிகண்டியை மீண்டும் அவர் முன்னால் நிறுத்தினார் கிருஷ்ணர்.சிகண்டி! இன்றைய போருக்கு நீயே தளபதி. பீஷ்மர் மீது பாணங் களை விடு, என்றார் பகவான். சிகண்டி வில்லெடுக்கவே, பீஷ்மர் தன் அம்புகளை கீழே போட்டு விட்டு, அவன் முகத்தைக் கூட பார்க்காமல் தலை குனிந்து தேரில் நின்றார். அப்போது, முந்தைய நாளில் நடந்தது போலவே, துச்சாதனன் மின்னல் வேகத்தில் பறந்து வந்தான். சிகண்டியுடன் கடுமையாக மோதினான். சிகண்டி அப்போதும் பின் வாங்கினான். இதைப் பயன்படுத்தி, பீஷ்மர் மேலும் பலரைக் கொன்றார்.
சிகண்டியை மீண்டும் வரவழைத்த அர்ஜுனன், சிகண்டி! நீ கலங்காதே. அம்பை பீஷ்மர் மீது விடு. உன்னை யாரும் அழிக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன், என்றான். அர்ஜுனன் ஊட்டிய தைரியத்தால் சிகண்டி மீண்டும் பீஷ்மர் முன்னால் வந்து, அம்புகளை விட்டான். அப்போது பீஷ்மர் தன் ஆயுதங்களைக் கீழே போடவே, அர்ஜுனன் தன் பாணங்களை அவர் மீது தொடுத்தான். ஒரு அரவாணியின் கையால் இறப்பதை விட, வீரத்தில் உலகமே போற்றும் தன் மாணவனின் கையால் இறப்பதை பீஷ்மர் பெருமையாகக் கருதினார். அவரது உடலில் அம்புகள் தைத்தன. அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அப்போது, கிருஷ்ண பகவான் சங்கொலி எழுப்பினார். அதன் பெரும் ஓசையால் பூமியே நடுங்கியது.