மகாபாரதம் பகுதி-93
அந்த வேலாயுதம் கடோத் கஜனின் மார்பைத் துளைத்து கொண்டு பறந்தது. மாபெரும் மலை சாயந்தது போல, கடோத் கஜன் தனது முகம் தரையில் படும் படியாக கீழே விழுந்து உயிர் விட்டான். இதுகண்டு பாண்டவர் படை அதிர்ச்சியடைந்தது. தங்களுடைய புத்திரன் இறந்தது குறித்து, பாண்டவர்களுக்கு பெரும் வருத்தம் உண்டானது. இப்போதும் கிருஷ்ண பரமாத்மாதான் பாண்டவர்களுக்கு கை கொடுக்க வேண்டியதாயிற்று. செயலிழந்து நின்ற பாண்டவர் களிடம், மைத்துனர்களே! விதிப் பயனை யாராலும் வெல்லமுடியாது. தத்துவ ஞானம் உடையவர்களே மரணத்தை இலகுவாக எடுத்துக் கொள்வார்கள். கர்ணன் பயன் படுத்திய வேலாயுதத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன். இந்திரன் ஒருமுறை கர்ணனின் கவச குண்டலங்களை யாசித்தான். அந்த கவச குண்டலங்கள் இல்லாவிட்டால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தும், தர்மவானான கர்ணன் அவற்றை இந்திரனுக்குக் கொடுத்துவிட்டான். மனம் நெகிழ்ந்து போன இந்திரன், அந்த சமயத்தில் ஒரு வேலாயுதத்தை கர்ணனுக்குப் பரிசாகக் கொடுத்து, இந்த வேல் எமனைக் காட்டிலும் கொடிய வலிமை படைத்தது. இதை யார் மீது பிரயோகித்தாலும் அவன் அழிந்து போவான் என்று வரமளித்தான். அதைப் பயன் படுத்தியே இப்போது கடோத் கஜனை அழித்திருக்கிறான். இனிமேல் அந்த ஆயுதம் அவனுக்குப் பயன்படாது. அதை ஒருமுறை பயன்படுத்தினால் மீண்டும் இந்திரனிடமே பாய் சேர்ந்துவிடும். அதன்படி அந்த ஆயுதம் இப்போது இந்திரனைச் சேர்ந்து விட்டது. இப்போதும் கர்ணனிடம் இருப்பது நாகாஸ்திரம் மட்டுமே. அதையே அவன் அர்ஜுனன் மீது பிரயோகிப்பான். அவனிடம் அந்த வேலாயுதம் இருந்திருந்தால், அர்ஜுனனின் அழிவு உறுதியாகியிருக்கும். இன்று அவன் கடோத் கஜனைக் கொன்றதன் மூலம், அவனது தோல்வியை அவனே தேடிக்கொண்டான். இனி கர்ணனுக்கு தோல்வி உறுதி, என்றார்.
இதுகேட்டு பாண்டவர்கள் ஆறுதலடைந்தனர். கடோத் கஜனின்தியாக மரணம், தங்களைக் காப்பாற்றியது குறித்து பெருமையும் அடைந்தனர். இந்த நேரத்தில் திரவுபதியின் தந்தையான துருபதராஜனை எதிர்த்து, துரோணர் போருக்கு வந்தார். அவனுடன் விராட ராஜனும் சென்றான். இந்த இரண்டு முக்கியஸ்தர்களையும் துரோணர், தனது அம்புகளால் தலைகளைத் துண்டித்துக் கொன்றார். இதுகண்டு துருபதராஜனின் மைந்தன் திருஷ்டத்யும்நன் பெரும் கோபமடைந்தான். துரோணர் முன் நின்று, ஆச்சாரியரே! எனது தந்தையைக்கொன்ற உம்மை நாளை உமது மகன் அஸ்வத்தாமன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொல்வேன். இது நிச்சயம், என சபதம் செய்தான். தங்களது மாமனார் கொல்லப் பட்டதால் பாண்டவர்கள், துரோணரை கொன்றே தீருவது என முடிவெடுத்தனர். அர்ஜுனன் கடும் கோபத்துடன் துரோணரை எதிர்த்தான். அவனது அம்புகளுக்கு துரோணரால் பதில் சொல்ல முடியவில்லை. அவர் தோற்று ஓடினார். இதனால் துரியோதனன் தனது படையைக் காப்பாற்ற முன் வந்தான். அவன் கண்ணபிரானின் தம்பியும், பாண்டவர்களின் மகாரத சேனாதிபதியுமான சாத்தகியை எதிர்த்தான். ஆனால் சாத்தகியின் பாணங்களுக்கு அவனால் ஈடு கொடுக்க முடியவில்லை. அவனும் பின்வாங்கி ஓடினான். இப்படியாக பதினான் காம் நாள் போர் இரு தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி முடிந்தது. அடுத்த நாள், குந்திதேவியின் தந்தையான குந்திபோஜனும், துரோணரும் சண்டை செய்தனர். சல்லியன், நகுலனுடன் போரிட்டான். கர்ணன் பீமனுடன் மோதினான். அன்றைய தினம் துரோணரின் கைங்கர்யத்தால் பாண்டவர் படை, சற்று நிலை குலைந்தது. இந்த நேரத்தில் மரீசி, ஆங்கிரஸ் உள்ளிட்ட சப்தரிஷி களும் அகத்திய முனிவரும் போர்க்களத்தில் தோன்றினர். அவர்கள் துரோணர் அருகே சென்றதும் துரோணர், போரை விட்டுவிட்டு அவர்களைத் தலைதாழ்த்தி வணங்கினார்.
அவரை ஆசீர்வதித்த ரிஷிகள், சாஸ்திரங்களைக் கற்றவரே! உமக்கு இந்த போர் ஆகுமா? நீர் எல்லாம் தெரிந்தவர். தத்துவஞானத்தை உணர்ந்தவர். தவம் செய்தவர். ஞான நுõல்களால் உண்டான மெய்யறிவைக் கொண்டவர். இந்த போர், பலம், செல்வம் இதெல்லாம் அரசர்களுக்கு உரியது. நீர் பிராமணர். சிறந்த ஆச்சாரியர். உமக்கு போர் ஆகாது. வில்லையும், வாளையும் நீர் அமர்ந்திருக்கும் தேரையும் உடனே துறந்து விட வேண்டும். நீர் மேலுலகம் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது. அங்கு வர தயாராக இருப்பீராக! அந்த லோகத்திற்குச் சென்றுவிட்டால் மன சஞ்சலம் நீங்கிவிடும். இறைவனின் திருப்பாதங்களை நீர் அடைவீர், என வாழ்த்தினர். ரிஷிகள் இவ்வாறு சொன்னதும் துரோணர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். எத்தனைதான் போர் செய்து கவுரவர்களுக்கு உதவினாலும், இறுதியில் என்றேனும் ஒருநாள் தழுவப்போகும் மரணத்தை ரிஷிகளின் ஆசீர் வாதம் கிடைத்த நாளிலேயே தழுவினால் என்ன என்ற எண்ணம் அவருக்குள் தோன்றியது. உடனடியாக தனது ஆயுதங்களை வீசியெறிந்துவிட்டு, தேரிலிருந்து கீழே இறங்கி நின்றார். இதுதான் துரோணரைக் கொல்ல சரியான சமயம் என கண்ணபரமாத்மா திட்டமிட்டார். இந்த நேரத்தில் முந்தைய தினம் சபதம் செய்தபடி, திருஷ்டத்யும்நனை துரோணருடன் போரிட அனுப்பினார். பின்னர் தர்மரை நோக்கி, தர்மரே! கவுரவர் தரப்பு வீரனான இந்திரவர்மாவோடு பீமன் செய்த போரில், அவனது பட்டத்து யானையான அஸ்வத்தாமா இறந்துவிட்டது. அந்த யானை மிகுந்த பலம் வாய்ந்தது. இந்த உலகத்தைத் தாங்கும் அஷ்டதிக் கஜங்களும் அதற்கு ஈடாகாது. இதைப் பயன்படுத்தி அஸ்வத்தாமா இறந்துவிட்டதாக, துரோணர் காதில் மட்டும் விழும் படியாக மெதுவாகச் சொல்லுங்கள். இதைக்கேட்டு, தனது மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாக கருதி, துரோணர் அதிர்ச்சியடைந்து நிற்பார். புத்திரசோகத்தால் தளர்ந்து போவார். அப்போது திருஷ்டத்யும்நன் அவரைக் கொன்றுவிடுவான். இதை உடனே செய்ய வேண்டும், என்றார். இதைக்கேட்டு தர்மர் சிரித்தார்.கண்ணா! நீ பெரும் கள்வன். பொய்சொல்லி இந்த ராஜ்யம் எனக்குக் கிடைப்பதைவிட, நான் போரில் தோற்பதையே விரும்புகிறேன், என்றார்.