செல்வம், கல்வி, வீரம் பெருக சொல்ல வேண்டிய நவதுர்கை மந்திரங்கள்!

நவதுர்கை என்பது துர்கையின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும். வேதங்கள் துர்கை அம்மனுக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாக சொல்கின்றன. அதில் துர்கையானவள் சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என ஒன்பது வடிவங்களில் உள்ளார். இந்தியாவில் ஒன்பது நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு சக்தி வாய்ந்த விழா தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் துர்கையின் ஒன்பது வடிவங்களுக்கும் பூஜைகள் செய்யப்படுகின்றன.

செல்வம், கல்வி, வீரத்தின் அதிபதியான நவதுர்கையை நவராத்திரி அன்று ஒன்பது நாட்களும் முறையாக பூஜை செய்து வழிபட்டு வந்தால், நம் வறுமை நீங்கி, வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, செல்வம் அதிகரிக்கும். அதோடு மன தைரியம் அதிகரிக்கும். முக்கியமாக கல்வி திறன் மேம்படும். இப்போது நவராத்திரி நாட்களில் பூஜை செய்யப்படும் நவதுர்கையின் ஒவ்வொரு வடிவத்திற்குமான மந்திரங்கள் என்ன என்பதைக் காண்போம். ஒவ்வொரு நாளும் அந்தந்த துர்கைக்குரிய மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்து வந்தால், கை நிறைய பலன் கிடைக்கும்.

நாள் 1: சைலபுத்ரி


ஒன்பது வடிவங்களில் துர்கை அன்னையில் முதல் வடிவம் தான் சைலபுத்ரி. நவராத்திரியின் முதல் நாளில் வழிபடப்படும் சைலபுத்ரி தேவிக்கு சொல்ல வேண்டிய மந்திரம் இதோ..

“வந்தே வாஞ்சித் லாபாய சந்திர கிருத சேகரம்
விருஷபாருடம் சூலதாரிநீம் ஷைல புத்ரீம் யஷஷ்விநீம்

நாள் 2: பிரம்மச்சாரிணி


துர்கையின் இரண்டாவது வடிவம் பிரம்மச்சாரிணி. நவராத்தியின் இரண்டாம் நாளில் வழிபடப்படுபவர் இவரே ஆவார். பிரம்மச்சாரிணி தேவிக்கு சொல்ல வேண்டிய மந்திரம் இதோ..

“ததாநகர பத்மபியம் அக்ஷமாலா கமண்டலம்
தேவி பிரசிதட்டு மயி பிரம்மசாரின நுத்தன”

நாள் 3: சந்திரகாண்டா


நவதுர்கைகளின் மூன்றாவது வடிவம் சந்திரகாண்டா. நவராத்திரியின் மூன்றாம் நாளில் பூஜை செய்து வழிபடப்படும் இவருக்கு சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான்.

ப்ரிடிஞ்சபர வரூதா சந்திரகோபஸ்த கரியுதா,
பிரசாதம் தந்துனே மகாயும் சந்திரகண்டெதி விஸ்ருதா”

நாள் 4: குஷ்மாண்டா


நவராத்திரியின் நான்காம் நாளான சதுர்த்தி அன்று வழிபடப்படுபவர் குஷ்மாண்டா. இது துர்கை அம்மனின் நான்காம் வடிவமாகும். இந்த தேவியை வழிபடும் போது இவரின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான்.

சூரா சம்பூர்ண கலசம் ருத்ரபலு தவமேவச்சா
ததான ஹஸ்த பத்மப்யாம் கூஷ்மாண்டா சுபதாஸ்து மே”

நாள் 5: ஸ்கந்தமாதா


நவராத்திரியின் ஐந்தாம் நாளான பஞ்சமி அன்று வழிபடப்படும் துர்கையின் வடிவம் ஸ்கந்தமாதா. முருகனின் தாயாக இருப்பதால் ஸ்கந்த மாதா என்று அழைக்கப்படுகிறார். இவரது அருளைப் பெற சொல்ல வேண்டிய மந்திரம் இது தான்..

சின்ஹாசன் கட நித்யம் பத்மஸ்ரித் கர்தவ்ய
சுபதஸ்து சதா தேவி ஸ்கந்த மாதா யஷஷ்வினி”

நாள் 6: காத்யாயினி

நவராத்திரியின் ஆறாவது நாளில் துர்கை அம்மனை காத்யாயினி வடிவத்தில் பூஜை செய்து வழிபடுவர். இந்த தேவியை மகிஷாசுர மர்த்தினி என்று கூறுவர். இந்த அம்மனின் பூர்ண அருளைப் பெற கூற வேண்டிய மந்திரம் இது தான்.

சந்திர ஹசூஜ் வல்கார லவர் வாஹன்
காத்யாயனி சுப் தத்யா தேவி தவன் தாதினி”

நாள் 7: காளராத்திரி

துர்கை அம்மனின் ஒன்பது வடிவங்களில் மிகவும் பயங்கரமானது காளராத்திரி வடிவம். காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும். நவராத்திரியின் ஏழாவது நாளில் பூஜை செய்யப்படும் இந்த அம்மனின் அருளைப் பெற சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான்.

வாம படொள்ள சல்லோஹலட கந்தக பூஷணா,
வர்தான முர்தா திவ்ய கிருஷ்ண காளராத்திரி பயங்கரி”

நாள் 8: மகாகௌரி

நவராத்திரியின் எட்டாம் நாளான துர்காஷ்டமி நாளில் துர்கை அம்மனை மகாகௌரி வடிவத்தில் வழிபடுகின்றனர். தேவி மகாகௌரியின் அருளைப் பெற சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான்.

ஸ்வேத விருஷப சமாருத ஷ்வேதாம்பர தாரா ஷுச்சின்
மகாகௌரி சுபம் தத்யான் மகாதேவ பிரமோததா”

நாள் 9: சித்திதாத்ரி

நவராத்திரியின் கடைசி நாளான மகா நவமி தினத்தன்று துர்கையின் சித்திதாத்ரி வடிவத்தை மக்கள் வழிபடுவார்கள். சித்திதாத்ரி என்றால் அனைத்து சக்திகளையும் தருபவள் என்று பொருள். சித்திதாத்ரி தேவியின் பரிபூர்ண அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம் இது தான்.

சித்த, கந்தர்வ், யக்யாதிர்,சூர்ஆர் மரைரபி,
சேவயாமணா சதா போயாத் சித்திதா சித்தி தாயினீ”

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்