திருப்புகழ் பாடல் 44 – திருச்செந்தூர்
தனந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த …… தனதான
கனங்கள் கொண்ட குந்த ளங்க ளுங்கு லைந்த லைந்து விஞ்சு
கண்க ளுஞ்சி வந்த யர்ந்து …… களிகூரக்
கரங்க ளுங்கு விந்து நெஞ்ச கங்க ளுங்க சிந்தி டுங்க
றங்கு பெண்க ளும்பி றந்து …… விலைகூறிப்
பொனின்கு டங்க ளஞ்சு மென்த னங்க ளும்பு யங்க ளும்பொ
ருந்தி யன்பு நண்பு பண்பு …… முடனாகப்
புணர்ந்து டன்பு லர்ந்து பின்க லந்த கங்கு ழைந்த வம்பு
ரிந்து சந்த தந்தி ரிந்து …… படுவேனோ
அனங்க னெந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண்தி
றந்தி ருண்ட கண்டர் தந்த …… அயில்வேலா
அடர்ந்த டர்ந்தெ திர்ந்து வந்த வஞ்ச ரஞ்ச வெஞ்ச மம்பு
ரிந்த அன்ப ரின்ப நண்ப …… உரவோனே
சினங்கள் கொண்டி லங்கை மன்சி ரங்கள் சித்த வெஞ்ச ரத்தெ
ரிந்த வன்ப ரிந்த இன்ப …… மருகோனே
சிவந்த செஞ்ச தங்கை யுஞ்சி லம்பு தண்டை யும்பு னைந்து
செந்தில் வந்த கந்த எங்கள் …… பெருமாளே.