திருப்புகழ் பாடல் 101- திருச்செந்தூர்
ராகம் – மாண்ட்; தாளம் – ஆதி
தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த …… தனதான
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து …… வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் …… வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப …… மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து …… குறுகாயோ
மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த …… மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த …… அதிதீரா
அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல் …… களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த …… பெருமாளே.