திருப்புகழ் பாடல் 141 – பழநி
தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன …… தந்ததான
கனக கும்பமி ரண்டு நேர்மலை
யெனநெ ருங்குகு ரும்பை மாமணி
கதிர்சி றந்தவ டங்கு லாவிய …… முந்துசூதம்
கடையில் நின்றுப ரந்து நாடொறு
மிளகி விஞ்சியெ ழுந்த கோமள
களப குங்கும கொங்கை யானையை …… யின்பமாக
அனைவ ருங்கொளு மென்று மேவிலை
யிடும டந்தையர் தங்கள் தோதக
மதின்ம ருண்டு துவண்ட வாசையில் …… நைந்துபாயல்
அவச மன்கொளு மின்ப சாகர
முழுகும் வஞ்சக நெஞ்சை யேயொழி
தருப தங்கதி யெம்பி ரானருள் …… தந்திடாயோ
தனத னந்தன தந்த னாவென
டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை
தகுதி திந்திகு திந்த தோவென …… வுந்துதாளந்
தமர சஞ்சலி சஞ்ச லாவென
முழவு டுண்டுடு டுண்டு டூவென
தருண கிண்கிணி கிண்கி ணாரமு …… முந்தவோதும்
பணிப தங்கய மெண்டி சாமுக
கரிய டங்கலு மண்ட கோளகை
பதறி நின்றிட நின்று தோதக …… என்றுதோகை
பவுரி கொண்டிட மண்டி யேவரு
நிசிச ரன்கிளை கொன்ற வேலவ
பழநி யங்கிரி யின்கண் மேவிய …… தம்பிரானே.