திருப்புகழ் பாடல் 262 – திருத்தணிகை
தனனந் தனனத் தனனந் தனனத்
தனனந் தனனத் …… தனதான
குயிலொன் றுமொழிக் குயினின் றலையக்
கொலையின் பமலர்க் …… கணையாலே
குளிருந் தவளக் குலசந்த் ரவொளிக்
கொடிகொங் கையின்முத் …… தனலாலே
புயல்வந் தெறியக் கடனின் றலறப்
பொருமங் கையருக் …… கலராலே
புயமொன் றமிகத் தளர்கின் றதனிப்
புயம்வந் தணையக் …… கிடையாதோ
சயிலங் குலையத் தடமுந் தகரச்
சமனின் றலையப் …… பொரும்வீரா
தருமங் கைவனக் குறமங் கையர்மெய்த்
தனமொன் றுமணித் …… திருமார்பா
பயிலுங் ககனப் பிறைதண் பொழிலிற்
பணியுந் தணிகைப் …… பதிவாழ்வே
பரமன் பணியப் பொருளன் றருளிற்
பகர்செங் கழநிப் …… பெருமாளே.