Thiruppugazh Song 213 – திருப்புகழ் பாடல் 213

திருப்புகழ் பாடல் 213 – சுவாமி மலை

தனதனன தனதனன தனனா தனத்ததன
தனதனன தனதனன தனனா தனத்ததன
தனதனன தனதனன தனனா தனத்ததன …… தனதான

குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி
கணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர்
குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமு …… முருகாதே

குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்
தெருவிலத வரதமன மெனவே நடப்பர்நகை
கொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க …… ளனைவோரும்

தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள்
முலையிலுறு துகில்சரிய நடுவீதி நிற்பவர்கள்
தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண் …… வலையாலே

சதிசெய்தவ ரவர்மகிழ அணைமீ துருக்கியர்கள்
வசமொழுகி யவரடிமை யெனமாத ரிட்டதொழில்
தனிலுழலு மசடனையு னடியே வழுத்தஅருள் …… தருவாயே

சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு
தொருநொடியி லவர்கள்படை கெடவே லெடுத்தவனி
தனில்நிருதர் சிரமுருள ரணதூள் படுத்திவிடு …… செருமீதே

தவனமொடு மலகைநட மிடவீர பத்திரர்க
ளதிரநிண மொடுகுருதி குடிகாளி கொக்கரிசெய்
தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள் …… பலகோடி

திமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறி
வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு
திமிரதிந கரஅமரர் பதிவாழ்வு பெற்றுலவு …… முருகோனே

திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசி
லடிபரவு பழநிமலை கதிர்காம முற்றுவளர்
சிவசமய அறுமுகவ திருவேர கத்திலுறை …… பெருமாளே.