திருப்புகழ் பாடல் 291 – திருத்தணிகை
தனத்தன தத்தன தனதன தனதன
தனத்தன தத்தன தனதன தனதன
தனத்தன தத்தன தனதன தனதன …… தனதான
முகத்தைமி னுக்கிக ளசடிகள் கபடிகள்
விழித்தும ருட்டிகள் கெருவிகள் திருடிகள்
மொழிக்குள்ம யக்கிகள் வகைதனில் நகைதனில் …… விதமாக
முழித்தும யற்கொளு மறிவிலி நெறியிலி
புழுக்குட லைப்பொரு ளெனமிக எணியவர்
முயக்கம டுத்துழி தருமடி யவனிடர் …… ஒழிவாக
மிகுத்தழ கைப்பெறு மறுமுக சரவண
புயத்திள கிக்கமழ் நறைமலர் தொடைமிக
விசைக்கொடு மைப்பெறு மரகத கலபியும் …… வடிவேலும்
வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற
திருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலி
விதித்தனெ ழுத்தினை தரவரு மொருபொரு …… ளருளாயோ
புகைத்தழ லைக்கொடு திரிபுர மெரிபட
நகைத்தவ ருக்கிட முறைபவள் வலைமகள்
பொருப்பிலி மக்கிரி பதிபெறு மிமையவ …… ளபிராமி
பொதுற்றுதி மித்திமி நடமிடு பகிரதி
எழுத்தறி ருத்திரி பகவதி கவுரிகை
பொருட்பய னுக்குரை யடுகிய சமைபவள் …… அமுதாகச்
செகத்தைய கத்திடு நெடியவர் கடையவள்
அறத்தைவ ளர்த்திடு பரசிவை குலவதி
திறத்தமி ழைத்தரு பழையவ ளருளிய …… சிறியோனே
செருக்கும ரக்கர்கள் பொடிபட வடிவுள
கரத்தில யிற்கொடு பொருதிமை யவர்பணி
திருத்தணி பொற்பதி தனில்மயில் நடவிய …… பெருமாளே.