குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் கடகம் | Kadagam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் கடகம் | Kadagam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

வியாழன் கிரகம் தான் தேவர்களின் ‘குரு’ என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குரு பகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அதேபோல், குரு பகவானின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரக்கூடியவை. குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு குறைந்தது 1 வருடம் எடுத்துக் கொள்வார்.

அந்தவகையில், இந்த ஆண்டு குரு பகவான் ஏப்ரல் 21, 2023 ஆம் தேதி மீனத்தை விட்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்குவதோடு, 12 ராசிக்காரர்களிலும் பல மாற்றங்கள் மற்றும் திருப்பங்களை ஏற்படுத்தும். அந்தவகையில், கடக ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எந்த மாதிரியான பலன்களை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கடகம் குரு பெயர்ச்சி பலன் 2023 – 2024

குரு பெயர்ச்சிக்கு பிறகு குரு பகவான் உங்க ராசிக்கு பாக்கிய ஸ்தானத்திலிருந்து ஜீவன ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதாவது 9 ஆம் இடத்திலிருந்து 10 வது வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார். இது அவ்வளவு சிறப்பு கிடையாது. அதுமட்டுமல்லாமல், அஷ்டம சனியும் கூடவே இருக்கிறார். எனவே, மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டம். பாக்கிய ஸ்தானத்தில் இருந்த குரு பகவானால் வாழ்க்கையில் பல யோகங்களை அனுபவித்திருப்பீர்கள். ஆனால், இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு அனைத்துமே குறைய தொடங்கும்.

வாழ்க்கையில் தேவையில்லாத அலைச்சல்கள் அதிகரிக்கும். வீடு இடமாற்றம் உண்டாகும். பணியிடத்தில் வேலை பறிபோக வாய்ப்புள்ளது, அல்லது வேலை மாற்றம், தொழில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைக்கு அடிக்கடி ஆரோக்கிய பிரச்சனைகள் வந்தவண்ணம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களால் குடும்பத்தில் விரிசல் உருவாகும். எனவே, குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்துக் கொள்ளுங்கள். பண நெருக்கடிகள் ஏற்பட்டு, கடன் வாங்கும் சூழல் ஏற்படும். அனாவசிய செலவை குறைத்துக் கொள்ள வேண்டும். புதிய தொழில் தொடங்குவதை தவிர்க்க வேண்டும்.

குரு அமரும் இடம் ஆபத்தாக இருந்தாலும், பார்க்கக் கூடிய இடம் அற்புதமாக இருக்கும். அதாவது, வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலும் அஷ்டம சனிக்காலம் என்பதால் வண்டி, வாகனத்தால் ஆபத்து உருவாகும். செலவுகள் வந்துக்கொண்டே இருக்கும், முடிந்த வரை பணத்தை சேமித்து வைத்துக்கொள்ள பழகிக்கொள்ளவும். எந்த விஷயமாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை தான் செய்ய வேண்டும். எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று இருந்தால் நஷ்டம் உங்களுக்கே.

சனிபகவானும் உங்க ராசியை பார்ப்பதால் காதலர்களுக்கு இடையில் அவ்வப்போது மனக்கசப்பு தோன்றும். வாக்கு கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும், கண், காது, மூக்கு, தொண்டை சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுக ஸ்தானம், தாயார் ஸ்தானத்தில் இருக்கும் கேது பகவானால் சுபகாரியங்களில் தடை ஏற்படும். தாயாருக்கு உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் வரும். தாய்வழி உறவினர்களால் பிரச்சனை உருவாகும். எனவே, தாயாரிடம் அரவணைத்து செல்ல வேண்டிய முக்கியம்.