2023 சனிபெயர்ச்சி | மேஷ ராசிக்கான பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal

வரும் சுபகிருது ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி தை 3ஆம் தேதி அதாவது 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். அதே போல் 2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் நாளான மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.

சூரிய பகவானின் புத்திரரான சனி பகவான் நம் வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்கள், தீய செயல்களுக்கு ஏற்றார் போல் நன்மை தீமைகளை வழங்கக்கூடியவர். சனியானவர் கும்ப ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச்செயல்களை இனி வருகின்ற இரண்டரை ஆண்டுகள் அளிக்கவுள்ளார்.

சனி தான் நின்ற ராசியிலிருந்து, மூன்றாம் பார்வையாக மேஷ ராசியான ஜென்ம ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான புத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

மேஷம்

மேஷ ராசிக்கு பத்தாம் இடத்தில் இருந்துவந்த சனிபகவான் பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைய இருக்கின்றார்.

சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக ஜென்ம ராசியை பார்ப்பதினால் செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். பலதரப்பட்ட சிந்தனைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. சிகை அலங்காரத்தில் ஆர்வமின்மை உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள்.

சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான புத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் மனதில் இனம் புரியாத புதுவிதமான சிந்தனைகளும் ஆசைகளும் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எளிமையான சில பணிகளை கூட கடுமையாக செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான விஷயங்கள் கைகூடும்.

சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதினால் நண்பர்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் பணத்தை கையாளுவதில் சிந்தித்து முடிவு எடுக்கவும். ஓய்வூதியம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். இன்சூரன்ஸ் தொடர்பான கோப்புகளில் கவனம் வேண்டும். பழைய வீடுகளை பழுது பார்ப்பது தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

சனி ராசிக்கு பதினொன்றாம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் அரசு தொடர்பான பணிகளில் பொருள் ஆதாயத்தை ஈட்டுவீர்கள். ஆன்மிக பணிகளில் இருப்பவர்களுக்கு மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவும், ஞானமும் பிறக்கும். செல்வ வளத்தை மேம்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். கால்நடை வளமும் சுகபோகத்துடன் கூடிய வசதியான வாழ்க்கையை அமைத்து கொள்வதற்கான தருணங்களும் உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.

பொருளாதாரம்

இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியால் இதுவரை இருந்துவந்த பயனற்ற செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். எதிலும் சிக்கனத்துடன் செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். விவசாயப் பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். மற்றவர்களின் ஆலோசனைகளில் உள்ள உண்மை பொருளை அறிந்து முடிவுகளை எடுப்பது பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். காலம் தவறி உணவு உண்பதை தவிர்த்து கொள்வது செரிமான பிரச்சனைகளை தவிர்க்கும்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் தனவரவுகளில் இருந்துவந்த தடைகளும், உடல் ஆரோக்கியத்தில் மேன்மையும், கணவன்-மனைவி இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகளும் நீங்கும்.

கவனம்

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் மனதில் எதிர்மறை சிந்தனைகளும், திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதிலும், எதிர்காலம் தொடர்பான முதலீடுகளிலும் விவேகத்துடன் செயல்படவும். திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அருணாச்சலேஸ்வரரை வணங்கி வர சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குலதெய்வத்தை அடிக்கடி வழிபாடு செய்து வர பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்துவந்த தடைகள் குறையும்.