பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil
பாகம் 2 – தயிர்
முப்பெரும் தேவிகளான மலைமகள், அலைமகள், கலைமகள், மற்றும் தெய்வயானையின் சிறப்பியல்புகள். மேலும் வள்ளியை நாடிச் சென்று அவளுக்குத் தன்னைத் தந்து கடிமணம் புரிந்து கொண்டது.
கடித்துணர் ஒன்றிய முகிற்குழலும் குளிர்
கலைப்பிறை என்றிடு நுதல் திலகம் திகழ்
காசு உமையாள் இளம் மாமகனே
களங்க இந்துவை முனிந்து நன்கு அது
கடந்து விஞ்சிய முகம் சிறந்தொளி
கால் அயிலார் விழிமா மருகா . . . . . . விரைசெறிஅணிமார்பா
கனத்துயர் குன்றையும் இணைத்துள கும்ப
கலசத்தையும் விஞ்சிய தனத்திசை மங்கைகொள்
காதலன் நான்முக னாடமுதே
கமழ்ந்த குங்கும நரந்தமும் திமிர்
கரும்பெனும் சொலை இயம்பு குஞ்சரி
காவலனே குகனே பரனே . . . . . . அமரர்கள் தொழுபாதா
உடுக்கிடையின் பணி அடுக்குடையுங்கன
உரைப்பு உயர் மஞ்சுறு பதக்கமொடு அம்பத
ஓவிய நூபுர மோதிரமே
உயர்ந்த தண்தொடைகளும் கரங்களில்
உறும் பசுந்தொடிகளும் குயங்களில்
ஊர் எழில்வாரொடு நாசியிலே . . . . . . மினும்அணி நகையோடே
உலப்பறு இலம்பகமினுக்கிய செந்திரு
உருப்பணி யும்பல தரித்து அடர் பைந்தினை
ஓவலிலா அரணேசெயுமாறு
ஒழுங்குறும் புனமிருந்து மஞ்சுலம்
உறைந்த கிஞ்சுக நறும் சொல் என்றிட
ஓலமதே இடுகானவர் மா . . . . . . மகளெனும் ஒருமானாம்
மடக்கொடிமுன் தலை விருப்புடன் வந்து அதி
வனத்துறை குன்றவர் உறுப்பொடு நின்றள
மானினியே கனியே இனிநீ
வருந்தும் என்றனை அணைந்து சந்ததம்
மனம் குளிர்ந்திட இணங்கி வந்தருளாய்
மயிலே குயிலே எழிலே . . . . . . மட வனநினதேர் ஆர்
மடிக்கொரு வந்தனம் அடிக்கொரு வந்தனம்
வளைக்கொரு வந்தனம் விழிக்கொரு வந்தனம்
வாஎனும் ஓர் மொழியே சொலுநீ
மணங்கிளர்ந்தநல் உடம்பு இலங்கிடு
மதங்கி யின்றுளம் மகிழ்ந் திடும்படி
மான்மகளே எனைஆள் நிதியே . . . . . . எனும் மொழி பலநூறே
படித்தவள் தன்கைகள் பிடித்துமுனம் சொன
படிக்கு மணந்துஅருள் அளித்த அனந்த
கிருபா கரனே வரனே அரனே
படர்ந்த செந்தமிழ் தினம் சொல் இன்பொடு
பதம் குரங்குநர் உளம் தெளிந்து அருள்
பாவகியே சிகியூர் இறையே . . . . . . திருமலிசமர் ஊரா
பவக்கடல் என்பது கடக்கவுநின் துணை
பலித்திடவும் பிழை செறுத்திடவும் கவி
பாடவும்நீ நடமாடவுமே
படர்ந்து தண்டயை நிதம் செயும்படி
பணிந்த என்றனை நினைந்து வந்தருள்
பாலனனே எனையாள் சிவனே . . . . . . வளர் அயில் முருகோனே.