Thayumanavar Songs – ஆசையெனும்

  1. ஆசையெனும்

ஆசையெனும் பெருங்காற்றூ டிலவம்பஞ்
செனவும்மன தலையுங் காலம்
மோசம் வரும் இதனாலே கற்றதுங்கேட்
டதுந்தூர்ந்து முத்திக் கான
நேசமும்நல் வாசமும்போய்ப் புலனாயிற்
கொடுமைபற்றி நிற்பர் அந்தோ
தேசுபழுத் தருள்பழுத்த பராபரமே
நிராசையின்றேல் தெய்வமுண்டோ. 1.

இரப்பானங் கொருவனவன் வேண்டுவகேட்
டருள்செயென ஏசற் றேதான்
புரப்பான்றன் அருள்நாடி இருப்பதுபோல்
எங்குநிறை பொருளே கேளாய்
மரப்பான்மை நெஞ்சினன்யான் வேண்டுவகேட்
டிரங்கெனவே மௌனத் தோடந்
தரப்பான்மை அருள்நிறைவில் இருப்பதுவோ
பராபரமே சகச நிட்டை. 2.

சாட்டையிற் பம்பர சாலம் போல்எலாம்
ஆட்டுவான் இறையென அறிந்து நெஞ்சமே
தேட்டமொன் றறஅருட் செயலில் நிற்றியேல்
விட்டறந் துறவறம் இரண்டும் மேன்மையே. 3.

தன்னெஞ்ச நினைப்பொழியா தறிவிலிநான்
ஞானமெனுந் தன்மை பேச
உன்னெஞ்ச மகிழ்ந்தொருசொல் உரைத்தனையே
அதனைஉன்னி உருகேன் ஐயா
வன்னெஞ்சோ இரங்காத மரநெஞ்சோ
இருப்புநெஞ்சோ வைரமான
கன்னெஞ்சோ அலதுமண்ணாங் கட்டிநெஞ்சோ
எனதுநெஞ்சங் கருதிற் றானே. 4.

வாழி சோபனம் வாழிநல் லன்பர்கள்
சூழ வந்தருள் தோற்றமுஞ் சோபனம்
ஆழி போல்அருள் ஐயன் மவுனத்தால்
ஏழை யேன்பெற்ற இன்பமுஞ் சோபனம். 5.

கொடுக்கின் றோர்கள்பால் குறைவையா தியானெனுங் குதர்க்கம்
விடுக்கின் றோர்கள்பால் பிரிகிலா துள்ளன்பு விடாதே
அடுக்கின் றோர்களுக் கிரங்கிடுந் தண்டமிழ் அலங்கல்
தொடுக்கின் றோர்களைச் சோதியா ததுபரஞ் சோதி. 6.

உலக மாயையி லேஎளி யேன்றனை
உழல விட்டனை யேஉடை யாய்அருள்
இலகு பேரின்ப வீட்டினில் என்னையும்
இருத்தி வைப்பதெக் காலஞ்சொ லாய்எழில்
திலக வாள்நுதற் பைந்தொடி கண்ணிணை
தேக்க நாடகஞ் செய்தடி யார்க்கெலாம்
அலகி லாவினை தீர்க்கத் துசங்கட்டும்
அப்பனே அருள் ஆனந்த சோதியே. 7.

முன்னிலைச்சுட் டொழிதியெனப் பலகாலும்
நெஞ்சேநான் மொழிந்தே னேநின்
தன்னிலையைக் காட்டாதே என்னையொன்றாச்
சூட்டாதே சரண்நான் போந்த
அந்நிலையே நிலையந்த நிலையிலே
சித்திமுத்தி யனைத்துந் தோன்றும்
நன்னிலையீ தன்றியிலை சுகமென்றே
சுகர்முதலோர் நாடி னாரே. 8.

அத்துவிதம் பெறும்பேறென் றறியாமல்
யானெனும்பேய் அகந்தை யோடு
மத்தமதி யினர்போல மனங்கிடப்ப
இன்னம் இன்னம் வருந்து வேனோ
சுத்தபரி பூரணமாய் நின்மலமாய்
அகண்டிதமாய்ச் சொரூபா னந்தச்
சத்திகள்நீங் காதவணந் தன்மயமாய்
அருள்பழுத்துத் தழைத்த ஒன்றே. 9.

தந்தை தாயுநீ என்னுயிர்த் துணையுநீ சஞ்சல மதுதீர்க்க
வந்த தேசிக வடிவுநீ உனையலால் மற்றொரு துணைகாணேன்
அந்தம் ஆதியும் அளப்பருஞ் சோதியே ஆதியே அடியார்தஞ்
சிந்தை மேவிய தாயுமா னவனெனுஞ் சிரகிரிப் பெருமானே. 10.

காதில் ஓலையை வரைந்துமேற்
குமிழையுங் கறுவிவேள் கருநீலப்
போது போன்றிடுங் கண்ணியர்
மயக்கிலெப் போதுமே தளராமல்
மாது காதலி பங்கனை
யபங்கனை மாடமா ளிகைசூழுஞ்
சேது மேவிய ராமநா
யகன்தனைச் சிந்தைசெய் மடநெஞ்சே. 11.

அண்டமுமாய்ப் பிண்டமுமாய் அளவிலாத
ஆருயிர்க் கோருயிராய் அமர்ந்தாயானால்
கண்டவரார் கேட்டவரார் உன்னாலுன்னைக்
காண்பதல்லால் என்னறிவாற் காணப்போமோ
வண்டுளப மணிமார்பன் புதல்வனோடும்
மனைவியொடுங் குடியிருந்து வணங்கிப்போற்றும்
புண்டரிக புரத்தினில்நா தாந்தமௌன
போதாந்த நடம்புரியும் புனிதவாழ்வே. 12.

பொறியிற் செறிஐம் புலக்கனியைப்
புந்திக் கவராற் புகுந்திழுத்து
மறுகிச் சுழலும் மனக்குரங்கு
மாள வாளா இருப்பேனோ
அறிவுக் கறிவாய்ப் பூரணமாய்
அகண்டா னந்த மயமாகிப்
பிறிவுற் றிருக்கும் பெருங்கருணைப்
பெம்மா னேஎம் பெருமானே. 13.

உரையுணர் விறந்து தம்மை உணர்பவர் உணர்வி னூடே
கரையிலா இன்ப வெள்ளங் காட்டிடும் முகிலே மாறாப்
பரையெனுங் கிரணஞ் சூழ்ந்த பானுவே நின்னைப் பற்றித்
திரையிலா நீர்போல் சித்தந் தெளிவனோ சிறிய னேனே. 14.

கேவல சகல மின்றிக் கீழொடு மேலாய் எங்கும்
மேவிய அருளின் கண்ணாய் மேவிட மேலாய் இன்பந்
தாவிட இன்பா தீதத் தனியிடை யிருத்தி வைத்த
தேவெனும் மௌனி செம்பொற் சேவடி சிந்தை செய்வாம். 15.

நேற்றுளார் இன்று மாளா நின்றனர் அதனைக் கண்டும்
போற்றிலேன் நின்னை அந்தோ போக்கினேன் வீணே காலம்
ஆற்றிலேன் அகண்டா னந்த அண்ணலே அளவில் மாயைச்
சேற்றிலே இன்னம் வீழ்ந்து திளைக்கவோ சிறிய னேனே. 16.

போதம் என்பதே விளக்கொவ்வும் அவித்தைபொய் இருளாந்
தீதி லாவிளக் கெடுத்திருள் தேடவுஞ் சிக்கா
தாத லால்அறி வாய்நின்ற இடத்தறி யாமை
ஏது மில்லையென் றெம்பிரான் சுருதியே இயம்பும். 17.

சுருதி யேசிவா கமங்களே உங்களாற் சொல்லும்
ஒருத னிப்பொருள் அளவையீ தென்னவா யுண்டோ
பொருதி ரைக்கடல் நுண்மணல் எண்ணினும் புகலக்
கருத எட்டிடா நிறைபொருள் அளவையார் காண்பார். 18.

மின்னைப் போன்றன அகிலமென் றறிந்துமெய்ப் பொருளாம்
உன்னைப் போன்றநற் பரம்பொருள் இல்லையென் றோர்ந்து
பொன்னைப் போன்றநின் போதங்கொண் டுன்பணி பொருந்தா
என்னைப் போன்றுள ஏழையர் ஐயஇங் கெவரே. 19.

தாயுந் தந்தையும் எனக்குற வாவதுஞ் சாற்றின்
ஆயும் நீயும்நின் அருளும்நின் அடியரும் என்றோ
பேய னேன்திரு வடியிணைத் தாமரை பிடித்தேன்
நாய னேஎனை ஆளுடை முக்கண்நா யகனே. 20.

காந்தமதை எதிர்காணிற் கருந்தாது
செல்லுமக் காந்தத் தொன்றா
தோய்ந்தவிடம் எங்கேதான் அங்கேதான்
சலிப்பறவும் இருக்கு மாபோல்
சாந்தபதப் பரம்பொருளே பற்றுபொரு
ளிருக்குமத்தாற் சலிக்குஞ் சித்தம்
வாய்ந்தபொருள் இல்லையெனிற் பேசாமை
நின்றநிலை வாய்க்கு மன்றே. 21.

பொற்பு றுங்கருத் தேயக மாயதிற் பொருந்தக்
கற்பின் மங்கைய ரெனவிழி கதவுபோற் கவினச்
சொற்ப னத்தினுஞ் சோர்வின்றி யிருந்தநான் சோர்ந்து
நிற்ப தற்கிந்த வினைவந்த வாறென்கொல் நிமலா. 22.

வந்த வாறிந்த வினைவழி யிதுவென மதிக்கத்
தந்த வாறுண்டோ வுள்ளுணர் விலையன்றித் தமியேன்
நொந்த வாறுகண் டிரங்கவும் இலைகற்ற நூலால்
எந்த வாறினித் தற்பரா உய்குவேன் ஏழை. 23.

சொல்லாலும் பொருளாலும் அளவை யாலுந்
தொடரவொண்ணோ அருள்நெறியைத் தொடர்ந்து நாடி
நல்லார்கள் அவையகத்தே யிருக்க வைத்தாய்
நன்னர்நெஞ்சந் தன்னலமும் நணுகு வேனோ
இல்லாளி யாயுலகோ டுயிரை யீன்றிட்
டெண்ணரிய யோகினுக்கும் இவனே என்னக்
கல்லாலின் கீழிருந்த செக்கர் மேனிக்
கற்பகமே பராபரமே கைலை வாழ்வே. 24.

சாக்கிரமா நுதலினிலிந் திரியம் பத்துஞ்
சத்தாதி வசனாதி வாயு பத்தும்
நீக்கமிலந் தக்கரணம் புருட னோடு
நின்றமுப் பான்ஐந்து நிலவுங் கண்டத்
தாக்கியசொப் பனமதனில் வாயு பத்தும்
அடுத்தனசத் தாதிவச னாதி யாக
நோக்குகர ணம்புருடன் உடனே கூட
நுவல்வர்இரு பத்தைந்தா நுண்ணி யோரே. 25.

கழுத்திஇத யந்தனிற்பி ராணஞ் சித்தஞ்
சொல்லரிய புருடனுடன் மூன்ற தாகும்
வழுத்தியநா பியில்துரியம் பிராண னோடு
மன்னுபுரு டனுங்கூட வயங்கா நிற்கும்
அழுத்திடுமூ லந்தன்னில் துரியா தீதம்
அதனிடையே புருடனொன்றி அமரும் ஞானம்
பழுத்திடும்பக் குவரறிவர் அவத்தை ஐந்திற்
பாங்குபெறக் கருவிநிற்கும் பரிசு தானே. 26.

இடத்தைக் காத்திட்ட சுவாவெனப் புன்புலால் இறைச்சிச்
சடத்தைக் காத்திட்ட நாயினேன் உன்னன்பர் தயங்கும்
மடத்தைக் காத்திட்ட சேடத்தால் விசேடமாய் வாழ
விடத்தைக் காத்திட்ட கண்டத்தோய் நின்னருள் வேண்டும். 27.

வாத னைப்பழக் கத்தினான் மனம்அந்த மனத்தால்
ஓத வந்திடும் உரையுரைப் படிதொழி லுளவாம்
ஏதம் அம்மனம் யாயைஎன் றிடிற்கண்ட எல்லாம்
ஆத ரஞ்செயாப் பொய்யதற் கையமுண் டாமோ. 28.

ஐய வாதனைப் பழக்கமே மனநினை வதுதான்
வைய மீதினிற் பரம்பரை யாதினும் மருவும்
மெய்யில் நின்றொளிர் பெரியவர் சார்புற்று விளங்கிப்
பொய்ய தென்பதை யொருவிமெய் யுணருதல்போதம். 29.

குலமி லான்குணங் குறியிலான் குறைவிலான் கொடிதாம்
புலமி லான்தனக் கென்னவோர் பற்றிலான் பொருந்தும்
இலமி லான்மைந்தர் மனைவியில் லான்எவன் அவன்சஞ்
சலமி லான்முத்தி தரும்பர சிவனெனத் தகுமே. 30.

கடத்தை மண்ணென லுடைந்தபோ
தோவிந்தக் கருமச்
சடத்தைப் பொய்யெனல் இறந்தபோ
தோசொலத் தருமம்
விடத்தை நல்லமிர் தாவுண்டு
பொற்பொது வெளிக்கே
நடத்தைக் காட்டிஎவ் வுயிரையும்
நடப்பிக்கும் நலத்தோய். 31.

நானெனவும் நீயெனவும் இருதன்மை
நாடாமல் நடுவே சும்மா
தானமரும் நிலையிதுவே சத்தியஞ்சத்
தியமெனநீ தமிய னேற்கு
மோனகுரு வாகியுங்கை காட்டினையே
திரும்பவுநான் முளைத்துத் தோன்றி
மானதமார்க் கம்புரிந்திங் கலைந்தேனே
பரந்தேனே வஞ்ச னேனே. 32.

தன்மயஞ் சுபாவம் சுத்தந் தன்னருள் வடிவஞ் சாந்தம்
மின்மய மான அண்ட வெளியுரு வான பூர்த்தி
என்மயம் எனக்குக் காட்டா தெனையப கரிக்க வந்த
சின்மயம் அகண்டா காரந் தட்சிணா திக்க மூர்த்தம். 33.

சிற்ற ரும்பன சிற்றறி வாளனே தெளிந்தால்
மற்ற ரும்பென மலரெனப் பேரறி வாகிக்
கற்ற ரும்பிய கேள்வியால் மதித்திடக் கதிச்சீர்
முற்ற ரும்பிய மௌனியாய்ப் பரத்திடை முளைப்பான். 34.

மயக்கு சிந்தனை தெளிவென இருநெறி வகுப்பான்
நயக்கு மொன்றன்பால் ஒன்றிலை யெனல்நல வழக்கே
இயக்க முற்றிடும் மயக்கத்தில் தெளிவுறல் இனிதாம்
பயக்க வல்லதோர் தெளிவுடை யவர்க்கெய்தல் பண்போ. 35.

அருள்வடி வேழு மூர்த்தம்
அவைகளசோ பான மென்றே
சுருதிசொல் லியவாற் றாலே
தொழுந்தெய்வம் எல்லாம் ஒன்றே
மருளெனக் கில்லை முன்பின்
வருநெறிக் கிவ்வ ழக்குத்
தெருளினமுன் னிலையாம் உன்னைச்
சேர்ந்தியான் தெளிகின் றேனே. 36.

எத்தனைப் பிறப்போ எத்தனை இறப்போ
எளியேனேற் கிதுவரை யமைத்து
அத்தனை யெல்லாம் அறிந்தநீ யறிவை
அறிவிலி அறிகிலேன் அந்தோ
சித்தமும் வாக்குந் தேகமும் நினவே
சென்மமும் இனியெனால் ஆற்றா
வைத்திடுங் கென்னை நின்னடிக் குடியா
மறைமூடி யிருந்தவான் பொருளே. 37.

வான்பொரு ளாகி எங்குநீ யிருப்ப
வந்தெனைக் கொடுத்துநீ யாகா
தேன்பொருள் போலக் கிடக்கின்றேன் முன்னை
இருவினை வாதனை யன்றோ
தீன்பொருளான அமிர்தமே நின்னைச்
சிந்தையிற பாவனை செய்யும்
நான்பொரு ளானேன் நல்லநல் அரசே
நானிறந் திருப்பது நாட்டம். 38.

நாட்டமூன் றுடைய செந்நிற மணியே
நடுவுறு நாயக விளக்கே
கோட்டமில் குணத்தோர்க் கெளியநிர்க் குணமே
கோதிலா அமிர்தமே நின்னை
வாட்டமில் நெஞ்சங் கிண்ணமாச் சேர்த்து
வாய்மடுத் தருந்தினன் ஆங்கே
பாட்டாளி நறவம் உண்டயர்ந் ததுபோற்
பற்றயர்ந் திருப்பதெந் நாளோ. 39.

என்னுடை உயிரே என்னுளத் தறிவே
என்னுடை அன்பெனும் நெறியாம்
கன்னல்முக கனிதேன் கண்டமிர் தென்னக்
கலந்தெனை மேவிடக் கருணை
மன்னிய உறவே உன்னைநான் பிரியா
வண்ணமென் மனமெனுங் கருவி
தன்னது வழியற் றென்னுழைக் கிடப்பத்
தண்ணருள் வரமது வேண்டும். 40.