- மண்டலத்தின்
மண்டலத்தின் மிசையொருவன் செய்வித்தை
அகோவெனவும் வார ணாதி
அண்டமவை அடுக்கடுக்காய் அந்தரத்தில்
நிறுத்துமவ தானம் போல
எண்தரும்நல் அகிலாண்ட கோடியைத்தன்
அருள்வெளியில் இலக வைத்துக்
கொண்டுநின்ற அற்புதத்தை எவராலும்
நிச்சயிக்கக் கூடா ஒன்றை. 1.
ஒன்றிரண்டாய் விவகரிக்கும் விவகாரங்
கடந்தேழாம் யோக பூமி
நின்றுதெளிந் தவர்பேசா மௌன நியா
யத்தைநிறை நிறைவைத் தன்னை
அன்றியொரு பொருளிலதாய் எப்பொருட்கும்
தான்முதலாய் அசல மாகி
என்றுமுள்ள இன்பத்தைத் தண்ணென்ற
சாந்தபத இயற்கை தன்னை. 2.
பதமூன்றுங் கடந்தவர்க்கு மேலான
ஞானபதப் பரிசு காட்டிச்
சதமாகி நிராலம்ப சாட்சியதாய்
ஆரம்பத் தன்மை யாகி
விதம்யாவுங் கடந்தவித்தை யெனுமிருளைக்
கீண்டெழுந்து விமல மாகி
மதமாறுங் காணாத ஆனந்த
சாகரத்தை மௌன வாழ்வை. 3.
வாழ்வனைத்துந் தந்தஇன்ப மாகடலை
நல்லமிர்தை மணியைப் பொன்னைத்
தாழ்வற என் உளத்திருந்த தத்துவத்தை
அத்துவித சாரந் தன்னைச்
சூழ்பெரும்பே ரொளியையொளி பரந்தபர
வெளியை இன்பச் சுகத்தை மாறா
தேழுலகுங் கலந்தின்றாய் நாளையா
யென்றுமாம் இயற்கை தன்னை. 4.
தன்னையறிந் தவர்தம்மைத் தானாகச்
செய்தருளுஞ் சமத்தை லோகம்
மின்னைநிகர்த் திடஅழியாச் சொரூபானந்
தச்சுடரை வேத மாதி
என்னையறி வரிதென்னச் சமயகோ
டிகளிடைய இடையறாத
பொன்னைவிரித் திடுமுலகத் தும்பரும்இம்
பரும்பரவும் புனித மெய்யை. 5.
பரவரிய பரசிவமாய் அதுவெனலாய்
நானெனலாய்ப் பாச சாலம்
விரவிநின்ற விசித்திரத்தை ஐக்யபதத்
தினிதிருத்த விவேகந் தன்னை
இரவுபகல் நினைப்புமறப் பெனுந்தொந்தம்
அறியார்கள் இதயம் வேதச்
சிரமெனவாழ் பராபரத்தை ஆனந்தம்
நீங்காத சிதாகா சத்தை. 6.
அத்துவித அநுபவத்தை அனந்தமறை இன்னம்
இன்னம் அறியேம் என்னும்
நித்தியத்தை நிராமயத்தை நிர்க்குணத்தைத்
தன்னருளால் நினைவுக் குள்ளே
வைத்துவைத்துப் பார்ப்பவரைத் தானாக
எந்நாளும் வளர்த்துக் காக்குஞ்
சித்தினைமாத் தூவெளியைத் தன்மயமாம்
ஆனந்தத் தெய்வந் தன்னை. 7.
தன்னிலே தானாக நினைந்துகனிந்
தவிழ்ந்துசுக சமாதி யாகப்
பொன்னிலே பணிபோலும் மாயைதரு
மனமேஉன் புரைகள் தீர்ந்தாய்
என்னினோ யான்பிழைப்பேன் எனக்கினியார்
உன்போல்வார் இல்லை இல்லை
உன்னிலோ திருவருளுக் கொப்பாவாய்
என்னுயிர்க்கோர் உறவு மாவாய். 8.
உறவுடலை எடுத்தவரில் பிரமாதி
யேனும்உனை யொழிந்து தள்ளற்
கறவுமரி தரிதன்றோ இகபரமும்
உன்னையன்றி ஆவ துண்டோ
வறிதிலுன்னை அசத்தென்னல் வழக்கன்று
சத்தெனவும் வாழ்த்து வேனென்
சிறுமைகெடப் பெருமையினின் சென்மதே
யத்தினில்நீ செல்லல் வேண்டும். 9.
வேண்டியநாள் என்னோடும் பழகியநீ
எனைப்பிரிந்த விசாரத் தாலே
மாண்டுகிடக் கினும்அந்த எல்லையையும்
பூரணமாய் வணக்கஞ் செய்வேன்
ஆண்டகுரு மௌனிதன்னால் யானெனதற்
றவனருள்நான் ஆவேன் பூவிற்
காண்டகஎண் சித்திமுத்தி எனக்குண்டாம்
உன்னாலென் கவலை தீர்வேன். 10.
தீராத என்சனன வழக்கெல்லாந்
தீருமிந்தச் சனனத் தோடே
யாரேனும் அறிவரிய சீவன்முத்தி
யுண்டாகும் ஐய ஐயோ
காரேனுங் கற்பகப்பூங் காவேனும்
உனக்குவமை காட்டப் போமோ
பாராதி யாகஏழு மண்டலத்தில்
நின்மகிமை பகர லாமோ. 11.