திருப்புகழ் பாடல் 22 – Thiruppugazh Song 22 – அந்தகன் வருந்தினம்: Anthagan Varum Thinam

திருப்புகழ் பாடல் 22 – திருச்செந்தூர்

ராகம் – ஹிந்தோளம்; தாளம் – அங்கதாளம் (7) (கண்ட ஜாதி ரூபகம்)

தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தக திமி-2

தந்தன தனந்தனந் தனதனத்
தந்தன தனந்தனந் தனதனத்
தந்தன தனந்தனந் தனதனத் …… தனதான

அந்தகன் வருந்தினம் பிறகிடச்
சந்ததமும் வந்துகண் டரிவையர்க்
கன்புருகு சங்கதந் தவிரமுக் …… குணமாள

அந்திபக லென்றிரண் டையுமொழித்
திந்திரிய சஞ்சலங் களையறுத்
தம்புய பதங்களின் பெருமையைக் …… கவிபாடிச்

செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்
கந்தனை யறிந்தறிந் தறிவினிற்
சென்றுசெரு குந்தடந் தெளிதரத் …… தணியாத

சிந்தையு மவிழ்ந்தழிந் துரையொழித்
தென்செய லழிந்தழிந் தழியமெய்ச்
சிந்தைவர என்றுநின் தெரிசனைப் …… படுவேனோ

கொந்தவிழ் சரண்சரண் சரணெனக்
கும்பிடு புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி குயம்புயம் பெறஅரக் …… கருமாளக்

குன்றிடிய அம்பொனின் திருவரைக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
குண்டல மசைந்திளங் குழைகளிற் …… ப்ரபைவீசத்

தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
தண்டைகள் கலின்கலின் கலினெனத் …… திருவான

சங்கரி மனங்குழைந் துருகமுத்
தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்
சந்ததி சகந்தொழுஞ் சரவணப் …… பெருமாளே.