திருப்புகழ் பாடல் 42 – திருச்செந்தூர்
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம் …… தனதானா
கருப்பந்தங் கிரத்தம்பொங்
கரைப்புண்கொண் டுருக்கும்பெண்
களைக்கண்டங் கவர்ப்பின்சென் …… றவரோடே
கலப்புண்டுஞ் சிலுப்புண்டுந்
துவக்குண்டும் பிணக்குண்டுங்
கலிப்புண்டுஞ் சலிப்புண்டுந் …… தடுமாறிச்
செருத்தண்டந் தரித்தண்டம்
புகத்தண்டந் தகற்கென்றுந்
திகைத்தந்திண் செகத்தஞ்சுங் …… கொடுமாயும்
தியக்கங்கண் டுயக்கொண்டென்
பிறப்பங்கஞ் சிறைப்பங்கஞ்
சிதைத்துன்றன் பதத்தின்பந் …… தருவாயே
அருக்கன்சஞ் சரிக்குந்தெண்
டிரைக்கண்சென் றரக்கன்பண்
பனைத்தும்பொன் றிடக்கன்றுங் …… கதிர்வேலா
அணிச்சங்கங் கொழிக்குந்தண்
டலைப்பண்பெண் டிசைக்குங்கொந்
தளிக்குஞ்செந் திலிற்றங்குங் …… குமரேசா
புரக்குஞ்சங் கரிக்குஞ்சங்
கரர்க்குஞ்சங் கரர்க்கின்பம்
புதுக்குங்கங் கையட்குந்தஞ் …… சுதனானாய்
புனைக்குன்றந் திளைக்குஞ்செந்
தினைப்பைம்பொன் குறக்கொம்பின்
புறத்தண்கொங் கையிற்றுஞ்சும் …… பெருமாளே.