திருப்புகழ் பாடல் 26 – திருச்செந்தூர்
ராகம் – கமாஸ்; தாளம் – சதுஸ்ர ரூபகம் (6)
தனதன தந்தாத் தந்தத்
தனதன தந்தாத் தந்தத்
தனதன தந்தாத் தந்தத் …… தனதானா
அவனிபெ றுந்தோட் டம்பொற்
குழையட ரம்பாற் புண்பட்
டரிவையர் தம்பாற் கொங்கைக் …… கிடையேசென்
றணைதரு பண்டாட் டங்கற்
றுருகிய கொண்டாட் டம்பெற்
றழிதரு திண்டாட் டஞ்சற் …… றொழியாதே
பவமற நெஞ்சாற் சிந்தித்
திலகுக டம்பார்த் தண்டைப்
பதயுக ளம்போற் றுங்கொற் …… றமுநாளும்
பதறிய அங்காப் பும்பத்
தியுமறி வும்போய்ச் சங்கைப்
படுதுயர் கண்பார்த் தன்புற் …… றருளாயோ
தவநெறி குன்றாப் பண்பிற்
றுறவின ருந்தோற் றஞ்சத்
தனிமல ரஞ்சார்ப் புங்கத் …… தமராடி
தமிழினி தென்காற் கன்றிற்
றிரிதரு கஞ்சாக் கன்றைத்
தழலெழ வென்றார்க் கன்றற் …… புதமாகச்
சிவவடி வங்காட் டுஞ்சற்
குருபர தென்பாற் சங்கத்
திரள்மணி சிந்தாச் சிந்துக் …… கரைமோதும்
தினகர திண்டேர்ச் சண்டப்
பரியிட றுங்கோட் டிஞ்சித்
திருவளர் செந்தூர்க் கந்தப் …… பெருமாளே.