திருப்புகழ் பாடல் 110 – பழநி
ராகம் – பெளளி; தாளம் – அங்கதாளம் (5 1/2) (எடுப்பு 1/2 தள்ளி)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த …… தனதான
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து …… இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து …… பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து …… துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற …… னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த …… மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க …… வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த …… கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த …… பெருமாளே.