திருப்புகழ் பாடல் 121 – பழநி
தனத்தான தனதனன தனத்தான தனதனன
தனத்தான தனதனன …… தனதான
உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில்
ஒருக்காலு நெகிழ்வதிலை …… யெனவேசூள்
உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம திரவியம
துடைத்தாய்பின் வருகுமவ …… ரெதிரேபோய்ப்
பயிற்பேசி யிரவுபகல் அவர்க்கான பதமைபல
படப்பேசி யுறுபொருள்கொள் …… விலைமாதர்
படப்பார வலைபடுதல் தவிர்த்தாள மணிபொருவு
பதத்தாள மயிலின்மிசை …… வரவேணும்
தயிர்ச்சோர னெனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள்
தரத்தாடல் புரியுமரி …… மருகோனே
தமிழக்காழி மருதவன் மறைக்காடு திருமருகல்
தநுக்கோடி வருகுழகர் …… தருவாழ்வே
செயிற்சேல்வி ணுடுவினொடு பொரப்போய்வி மமர்பொருது
செயித்தோடி வருபழநி …… யமர்வோனே
தினைக்காவல் புரியவல குறப்பாவை முலைதழுவு
திருத்தோள அமரர்பணி …… பெருமாளே.